
அயோத்தி ராம் ஜென்ம பூமியை சேவிக்க முடியாதவர்கள், சேலத்தில் உள்ள அயோத்தியை கண்டு களிக்கலாம். சேலத்தில் அயோத்தியா பட்டினத்தில் இராமபிரானின் பட்டாபிஷேகக் கோலத்தை தரிசிக்கலாம். ஆதிகாலத்தில் இந்தப் பகுதியில் பரத்வாஜர் ஆச்ரமம் அமைந்திருந்தது. ராவண வதம் முடிந்து திரும்பிய ஸ்ரீராமர் இவ்வழியே வந்தபோது இம்முனிவரை சந்தித்தார். முனிவரின் வேண்டுகோளையும்,விபீஷணரின் பிரார்த்தனையையும் ஏற்று இந்த இடத்தில் இராமர் தனது பட்டாபிஷேகக் கோலத்தைக் காட்டியருளினாராம்.
அயோத்தியில் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே இங்கு அந்தக் கோலத்தில் காட்சி தந்ததால் இந்த ஊர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்பட்டது. இங்கே ஸ்ரீராமர் மூன்று நாட்கள் தங்கியதாகத் தெரிகிறது. இத்தலத்துக்கு இன்னொரு விசேஷமும் உண்டு. இங்கு ஸ்ரீராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர்.
ஸ்ரீராமர், சீதை, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாதிக்க, அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சனேயர் ஆகியோர் ஸ்ரீராமர் மற்றும் சீதையை சேவித்தபடி உள்ளனர். ஸ்ரீராமரின் மகிமைகளை உணர்ந்த கடையேழு வள்ளலான அதியமான் இத்திருத்தலத்தில் கோயில் கருவறையைக் கட்டியதாகத் தெரிகிறது. கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தக் கோயில்.
இக்கோயிலின் முன்மண்டபம் தேர் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு வாயில்கள் உள்ளன. மண்டபத்தின் மேற்கூரையில் ராமாவதார ஓவியங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள 28 தூண்களிலும் ஸ்ரீராமர் சிற்பங்கள் உள்ளன. இத்தூண்கள் இசையை உண்டாக்கும் தூண்களாக விளங்குகின்றன.
இந்த மண்டபத்தைக் கட்டிய சிற்பி நாக்கு அறுபட்ட நிலையில் தூணில் சிற்பமாகத் திகழ்கிறார். இக்கோயில் ரகசியம் வெளியே தெரியாமல் இருக்க அவரது நாக்கு துண்டிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். கோயிலின் வடக்கு வாசலில் ஆழ்வார்களும், தெற்கு வாசலுக்கு எதிராக சக்கரத்தாழ்வாரும் உள்ளனர். ஆஞ்சனேயர் மற்றும் ஆண்டாள் சன்னதிகளும் உண்டு.
இத்தலத்தின் தல விருட்சம் வன்னிமரம். இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இத்தலத்துக்கு வந்தால் திருமணத்தடை, ராகு-கேது தோஷம் நீங்கும். சொத்து தகராறுகள் தீரும். குழந்தைப் பேறு கிடைக்கும். இக்கோயில் சேலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.