
இயற்கை நமக்குக் கொடுத்த கொடைகளில் மூலிகையும் ஒன்று. இயற்கை மூலிகைகளின் நன்மைகள் பற்றிய புரிதல்கள் காலப்போக்கில் மக்களிடையே மறைந்து வருகின்றன. மூலிகைப் பொருட்களில் இருக்கும் மருத்துவ மற்றும் ஆன்மிக குணங்களைத் தெரிந்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு செழிக்கும் என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். அந்த வகையில், 'மகிஷாஷி' என்னும் ஒரு வகை சாம்பிராணி போல் இருக்கும் இந்த மூலிகையின் பயன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாட்டு மருந்து கடைகளில் இந்த மூலிகை கிடைக்கும். பழங்காலங்களில் வீட்டில் சாம்பிராணிக்கு பதிலாக இதையே பலரும் உபயோகப்படுத்தி வந்தனர். மகிஷாசுரமர்த்தினியாக விளங்கும் துர்கையின் அம்சமாக இம்மூலிகை சொல்லப்படுகிறது. இந்த மூலிகையில் துர்கையின் அம்சம் நிறைந்திருக்கும்.
வீட்டில் சாம்பிராணி தூபம் காட்டுவது போல தணல் உண்டாக்கி, அதில் கொஞ்சம் மகிஷாஷி மூலிகையைப் போட வேண்டும். இதிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் மூலை முடுக்குகள் விடாமல் எல்லா இடங்களிலும் பரவும்படியாகக் காண்பிக்க வேண்டும். குறிப்பாக, இந்த தூபத்தை ராகு காலத்தில் மட்டுமே போட வேண்டும்.
முக்கியமாக, துர்கைக்கு உகந்த செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் இந்த சாம்பிராணி தூபத்தை போட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன். இப்படி துர்கைக்கு தூபம் போடும்போது அதிலிருந்து ஒரு விசித்திரமான விஷயத்தை நாம் காண முடியும். இந்த சாம்பிராணி தூபம் எரியும்போது துர்கை நடனம் ஆடுவது போல இந்த தூபம் எகிறி குதிக்கும். மகிஷாஷி மூலிகையின் அற்புதங்களில் இது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் ராகு கால வேளையில இந்த மகிஷாஷி மூலிகை தூபத்தை வீடு முழுவதும் போடுவதால் செய்வினைகள், திருஷ்டிகள், வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், குடும்பத்தில் சுபிட்சம் அதிகரிக்கும். வீட்டில் மகாலட்சுமி வாசம் நிலைக்கும். துர்கையம்மனின் அருள் கிட்டும். துர்கையின் அருள் இருந்தால் எந்தவிதமான பிரச்னைகளையும் எதிர்கொள்ளக் கூடிய தைரியம் பிறக்கும். தீய சக்திகள் நம்மை அண்டாது. துர்கையை வழிபடுபவர்கள் துன்பங்களை சந்திப்பது கிடையாது.
கணவன், மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கவும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய தொடர் பிரச்னைகள் தீரவும் இந்த தூபத்தை தொடர்ந்து போட்டு வருவது சிறப்பு. தொழில் செய்யும் இடங்களில், அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையில் மகிஷாஷி சாம்பிராணி தூபம் போடப்படுவதால் லாபம் அதிகரிக்கும். தொழில் போட்டிகள் குறையும். பிரச்னைகள் நீங்கி சமூகமான தீர்வு கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்டி ஒன்றில் மஞ்சள் தடவி, இன்னொன்றில் குங்குமம் தடவி நிலை வாசலில் இரண்டு புறமும் வைத்து விட்டு இந்த தூபத்தை காண்பித்து துர்கையை மனதார பிரார்த்தித்தால் வீட்டில் எல்லா வளமும் நன்மைகளும் கிடைக்கும்.