

ஆலமர பொந்தில் வாழும் கிளிகளை பற்றி எல்லோரும் அறிந்ததே. இப்போது இரண்டு ஆன்மீக கிளிகளை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் தோளில் அமர்ந்திருக்கும் கிளியை எடுத்துக்கொள்வோம். இந்த கிளி ஆண்டாளுக்காக கண்ணனிடம் தூது போன கிளி என்று சொல்லப்படுகிறது. சிலர் இந்த கிளி வியாச முனிவரின் மகனான சுக ப்ரஹ்ம மஹரிஷியின் வடிவம் என்றும் கூறுகிறார்கள். மேலும் ஆண்டாளின் தோளில் இருந்தவாறு பக்தர்களின் குறைகளை கேட்டு அவற்றை ஆண்டாளிடம் அப்படியே ஒப்பிப்பதாக நம்பப்படுகிறது. திருமணம் தள்ளி போய்க்கொண்டிருந்தால் இந்த கிளியிடம் முறையிட்டால் போதும் திருமணம் விரைவில் கூடிவரும் என்று பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த கிளியை பற்றிய இன்னொரு விஷயம் பற்றி சொல்கிறேன் கேளுங்கள். இந்த கிளியை தினம் தோறும் புதிது புதிதாய் இலைகளால் வடிவமைத்து வைக்கிறார்கள். மரவள்ளிக்கிழங்கின் இலைகளால் உடல் பகுதியையும், மாதுளம் பிஞ்சினை கொண்டு அலகினையும், காக்கா பொன்னால் கண்களையும், வாழை நாரினால் இணைத்து செய்யப்படுகிறது இந்த கிளி. இதை ஒரு குடும்பத்தார் பரம்பரையாக செய்து வருகிறார்கள்.
இரண்டாவதாக மீனாட்சி அம்மனின் தோளில் அமர்ந்திருக்கும் கிளிக்கு வருவோம். இந்த கிளியை பற்றிய கதை இதுதான்... மீனாட்சி அம்மன் ஆட்சிசெய்த போது, ஒரு பறக்க இயலாத கிளி, மீனாட்சி அம்மனை நோக்கி துதித்ததாம். மீனாட்சி அம்மன் அதன் மேல் கருணை கொண்டு தன் தோளில் எப்போதும் இருக்கும் பாக்கியத்தை கொடுத்தாளாம்.
கிளி மிகவும் சாத்வீகமான ஒரு பட்சி ஆகும். ரிஷிகளை போல பழங்களையும் பருப்புகளையும் மட்டுமே உண்டு உன்னதமாக இருக்கும் பறவை கிளி. பரீக்ஷித் மகாராஜாவுக்கு ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்து சொன்ன சுகதேவ கோஸ்வாமி ஒரு கிளியாகத்தான் கருதப்படுகிறார்.
சொன்னதை அப்படியே மாற்றமில்லாமல் எதையும் கூட்டவோ கழிக்கவோ செய்யாமல் குரு உபதேசித்ததை சொன்னது சொன்ன படியே மற்றவர்க்கு சொல்வதில் ஒரு சிஷ்யன் கிளியை போல இருக்கவேண்டும் என்பது தான் இதன் விளக்கம். சொன்னதை சொல்லுமாம் கிளி என்று சொல்வதை விட சொன்னதை அப்படியே திருப்பி சொல்லுமாம் கிளி என்று சொல்வது தான் சரி!