நிழற்படமே நேர்த்திக்கடன்: கலவை அங்காள பரமேஸ்வரியின் வினோத வழிபாடு!

Angala Parameshwari Amman
Angala Parameshwari Amman
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கலவை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். இக்கோவில் வித்தியாசமான வேண்டுதல்களையும், காணிக்கைகளையும் கொண்டுள்ளது. பொதுவாக அம்மன் கோயில்களில் பொங்கல் வைப்பது, முடி காணிக்கை, பண காணிக்கை போன்றவைதான் காணிக்கையாக செலுத்தும் வழக்கம் உண்டு.

ஆனால் இக்கோவிலிலோ எந்த வேண்டுதல் நிறைவேறினாலும் அதற்குப் பிறகு அவர்கள் தங்களது போட்டோவை காணிக்கையாக கோவிலில் மாட்டிவிட்டு செல்கின்றனர். இக்கோவிலில் பூசாரிகள் கிடையாது. அர்ச்சனை அபிஷேகம் எதுவும் நடப்பதும் இல்லை என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் தங்களது புகைப்படத்தை காணிக்கையாக செலுத்தும் வினோத நடைமுறை இக்கோவிலில் உள்ளது. உடல் நலக்குறைவு, தீராத வியாதிகள் அல்லது இதர கஷ்டங்கள் தீர வேண்டி வரும் பக்தர்கள் தங்களுடைய கோரிக்கை நிறைவேறியதும் தங்களுடைய புகைப்படத்தை (Photo) கோவிலின் சுவர்களில் மாட்டி வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இக்கோவில் மிகவும் பழமையானது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான சக்தி வாய்ந்த வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது இக்கோவில். கோவிலில் கொடி மரமும், பலிப்பிடமும், சிம்ம வாகனமும் காணப்படுகிறது. புவனத்தை காத்தருளும் சக்தி என்பதால் பெரிய நாயகி என்றும் அழைக்கப்படும் இவள் ஆலயத்தில் இருபுறமும் விநாயகர், முருகர் மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளது.ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலவை எனும் இடத்தில் இக் கோவில் அமைந்துள்ளது.

சுமார் 140 வருடங்களுக்கு முன்பு கலவையில் வசித்து வந்த அப்பு முதலியார் என்பவர் குழந்தை பாக்கியம் இன்றி தன்னுடைய குலதெய்வமான மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியிடம் வேண்டி நிற்க, அவள் அருளால் குழந்தை பாக்கியம் அவருக்கு கிடைத்தது. அதனால் ஆண்டுதோறும் தன் ஊரில் மயானக்கொள்ளை என்னும் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். அத்துடன் அம்மனுக்கு கோவில் ஒன்றும் அமைக்க ஆசை கொண்டார். அதன்படி ஒரு ஆலயம் அமைக்கப்பட்டது. இன்றும் இக்கோவிலை அவரது சந்ததியினர் நிர்வகித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
சனிப்பெயர்ச்சி 2026: மீன ராசிக்கு மாறும் சனி பகவான்! யாருக்கு யோகம்? யாருக்கு சோதனை? முழு விளக்கம்!
Angala Parameshwari Amman

இக்கோவிலில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கையில் சூலம், தண்டம், கபாலம், வாள் மற்றும் மந்திரப் பிரம்பு ஏந்தி காட்சி தருகிறாள். வேலை வேண்டி வருபவர்களும், வீடு அமைய வேண்டி வருபவர்களும், குழந்தைப் பேறுக்காக வேண்டுபவர்களும், திருமணத்தடை உள்ளவர்கள் திருமணம் நடைபெற வேண்டியும் வருகிறார்கள். அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் அது தொடர்பான போட்டோக்களை இக்கோவில் சுவர்களில் மாட்டி செல்கின்றனர்.

திருமணம் முடிந்தவர்கள் தங்கள் திருமண புகைப்படத்தையும், குழந்தைப்பேறு வேண்டியவர்கள் குழந்தை புகைப்படத்தையும், குடும்ப ஒற்றுமையை வேண்டுபவர்கள் குடும்பத்தின் புகைப்படத்தையும் ஆலயத்தின் சுவர்களில் மாட்டி செல்கின்றனர். ஆலயத்தில் எங்கு திரும்பினாலும் புகைப்படங்கள்தான் கண்ணில்படுகின்றன.

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்பாலிக்கும் அந்த அம்மனை சமயம் கிடைத்தால் சென்று தரிசித்து அவள் அருளைப் பெற்று வாருங்கள்.

logo
Kalki Online
kalkionline.com