அனுமனுக்கு, ‘சொல்லின் செல்வர்’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

Sri Hanuman
Sri Hanumanhttps://pujabooking.com

'சொல்லின் செல்வர்' என்று புகழப்படுபவர் ஸ்ரீ அனுமன். அவருக்கு இந்தப் பட்டப்பெயர் எப்படிக் கிடைத்தது தெரியுமா? பதினாலு வருஷ வனவாசமாக வனத்திற்கு வந்த ஸ்ரீ ராமன் சீதையை பறிகொடுத்து விட்டு அலைபாயும் மனத்தோடு பரிதவித்துக் கொண்டிருக்கிறார். அவரும் லட்சுமணனுமாக அலைந்து திரிந்து கிஷ்கிந்தைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே சுக்ரீவன் சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக வாக்களிக்க, வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனை வானர சாம்ராஜ்யத்திற்கு அரசனாக ஆக்கினார்.

சுக்ரீவனுக்கு வாலி வதம் மிகுந்த மன நிம்மதியை அளிக்க, அவன் மிக்க நன்றியோடு எப்பாடு பட்டாவது சீதையைக் கண்டுபிடித்து ராமனின் மனக்கலக்கத்தையும், துயரத்தையும் போக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டான். எல்லோரும் கூடி ஆலோசித்து ஸ்ரீ அனுமன் அதற்குப் பொருத்தமானவர் என்று தீர்மானித்து அவரை சீதையைத் தேட அனுப்புகிறார்கள்.

கடலைத் தாண்டி, கடலுக்குள் இருக்கும் பகைவர்களை ஜெயித்து லங்காபுரிக்குச் சென்று அந்த நாடு முழுவதும் தேடி கடைசியில் அசோக வனத்தில் சீதையைக் கண்டு ஸ்ரீ ராமன் தன்னிடம் தந்த கணையாழியை சீதா பிராட்டியிடம் கொடுத்தார். அசோக வனத்தில் சீதையை கண்டதோடு மட்டுமல்லாமல், அந்த செய்தியை அவர் திருவாக்காலேயே
ஸ்ரீ ராமனுக்குச் சொன்னார்.

எப்படிச் சொன்னார் தெரியுமா? சீதையை என்று ஆரம்பித்தால் கூட சீதைக்கு என்ன ஆனதோ என்று ராமன் பயந்து விடுவார் என எண்ணி, ‘கண்டேன் சீதையை!’ என்றார். எப்பேர்ப்பட்ட நேர்மறை வார்த்தைகள்! எதிராளியின் பயம், மனக்கவலை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து நொடிப்பொழுதில் உற்சாகமும், தைரியமும் கொடுக்கும் வார்த்தைகள்! இந்த வார்த்தைகளைச் சொல்லி ஸ்ரீ ராமரின் மனதை அமைதிப்படுத்தியதால் அல்லவோ, 'சொல்லின் செல்வர்' என்று புகழப்படுகிறார்
ஸ்ரீ அனுமன்? அருணாசலக் கவிராயர் இந்த சம்பவத்தை, ‘கண்டேன், கண்டேன், கண்டேன் சீதையை! கண்டேன் ராகவா!’ என்னும் பாகேஸ்ரீ ராகப் பாடலில் மிக அழகாக எழுதியிருக்கிறார்.

மார்கழி மாதத்தில் அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய தினத்தில் அவதாரம் செய்தவர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இவர் வாயு தேவரின் புதல்வர். இவரின் அன்னை அஞ்சனா தேவி. ஸ்ரீ ராமபிரானின் அணுக்கத் தொண்டர். இவரை ஸ்ரீ அனுமன், ஆஞ்சனேயர், ராமதூதன், மாருதி, அஞ்சனை மைந்தன் என்று பல திருநாமங்களில் வழிபட்டாலும், 'ஸ்ரீ ராமபக்த அனுமன்' என்று துதித்து வழிபட்டால் அகமகிழ்ந்து போவாராம். எல்லா பெருமாள் கோயில்களிலும் ஆஞ்சனேயருக்கு ஒரு தனி சன்னிதி உண்டு. இவரை திருமாலின், 'சிறிய திருவடி' என்று அழைப்பார்கள்.

இதைத் தவிர ஸ்ரீ ஆஞ்சனேயருக்கென்றே தனிக் கோயில்களும் உண்டு. சுசீந்திரம், நாமக்கல் போன்ற ஊர்களில் ஸ்ரீ ஆஞ்சனேயர் மிக பிரம்மாண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார். நம் சென்னையிலேயே நங்கநல்லூரில் ஆஞ்சனேயர் பிரம்மாண்ட ஸ்வரூபத்தில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். இந்த இடங்களில் எல்லாம் 'ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி' மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும்.

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். ஸ்ரீமத் ராமாயணம் உபன்யாசம் செய்யும்போது உபன்யாசகர் பக்கத்தில் ஒரு மணைப்பலகை கோலமிட்டு வைப்பது வழக்கம். ராமாயணத்தைக் கேட்க அங்கே ஸ்ரீ ஆஞ்சனேயர் நிச்சயம் வந்து உட்கார்ந்து கொள்வார் என்பதற்காகத்தான் அப்படிச் செய்வார்கள். சில இடங்களில் இந்த மாதிரி உபன்யாசமோ அல்லது ஸ்ரீ ராமருக்குப் பூஜையோ நடக்கும்போது ஒரு வானரம் எங்கிருந்தோ பூஜை அறைக்குள் வந்து நைவேத்தியத்திற்காக வைத்திருக்கும் வாழைப்பழத்தை எடுத்து சாப்பிடுவதையும் பலர் பார்த்திருக்கிறார்கள். நிறைய நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத அருவமாய் அமர்ந்திருந்து தானும் உபன்யாசத்தை ரசித்துக் கேட்டு அங்கே வந்தவர்களுக்கெல்லாம் வெற்றியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்கி விட்டுப் போகிறார். ராம நாமம் எப்போதும் எங்கேயோ ஒலித்துக் கொண்டேயிருப்பதால் அவர் அந்த இடங்களில் நித்ய வாசம் செய்வதால் அவர், 'சிரஞ்சீவி' என்று அழைக்கப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
கோமாதா தெய்வ குலமாதா!
Sri Hanuman

மக்கள் பயந்து நடுங்கும் சனீஸ்வரனையும் அடக்கக்கூடியவர் ஆஞ்சனேயர்தான் என்பதால் ஏழரை சனி மற்றும் சனியால் எந்த வகையில் பாதிக்கப்பட்டவர்களும் ஆஞ்சனேயரை வலம் வந்து வணங்கி தன்னை சனியின் பாதிப்பிலிருந்து விடுபட செய்யும்படி கோரிக்கை வைக்கிறார்கள். ஆஞ்சனேயருக்கு, வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி வணங்குவார்கள். அத்துடன் வெண்ணெய் காப்பு, சிந்தூரக் காப்பு செய்து அலங்கரிப்பார்கள்.

நாளை ஜனவரி 11ம் தேதி (வியாழக்கிழமை) ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி வருகிறது. மற்றவர்களுக்கு அஸாத்தியமாக இருக்கக்கூடிய காரியங்கள் இவருக்கு துச்சமாக இருப்பதாலேயே,

'அஸாத்ய சாதக ஸ்வாமி அஸாத்யம் தவ கிம்வத

ராமதூத க்ருபாசிந்தோ மத் கார்யம் சாத்திய பிரபோ'

என்னும் மந்திரத்தை அன்று சொல்லி வழிபட்டால் நினைத்த காரியம் நிச்சயமாக நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com