அரங்கன் விரும்பும் விருப்பன் திருநாள்!

Srirangam Chithirai Ther Thiruvizha
Srirangam Chithirai Ther Thiruvizha

ண்டு முழுவதுமே பலவிதமான உத்ஸவங்களை உற்சாகமாகக் கண்டு களிப்பவர் ஸ்ரீரங்கத்து நம்பெருமாள். தினமும் ஒரு உத்ஸவம் என்று என்றுமே ஸ்ரீரங்கமே  திருவிழா கோலமாகத்தான் காட்சி தரும். ஆயிரம் உத்ஸவங்கள் இருந்தாலும், அரங்கனான நம்பெருமாள் தம் திருமுகத்தில அதிக உவப்பு கொண்டு கலந்து கொள்ளும் ஒரு வைபவம் என்றால் அது அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை மாதத்தில்  நடக்கும் ஸ்ரீ நம்பெருமாள் சித்திரை தேர் திருநாள் என்றும், விருப்பன் திருநாள் என்றும் அழைக்கப்படும் வைபவம்தான். சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம்தான் நம்பெருமாளின் திருநட்சத்திரம் என்றே பெரியோர்கள் குறிப்பிடுவர். இன்று (மே, 6) சித்திரை ரேவதி நன்னாளில் அரங்கனின் தேரோட்டம் அமர்க்களமாக நடைபெற உள்ளது.

‘விருப்பன் திருநாள்’ என்று ஏன் இதற்கு பெயர் வந்தது தெரியுமா? முகலாய படையெடுப்பினால்,  நம்பெருமாள் 1323ம் ஆண்டு ஸ்ரீரங்கத்திலிருந்து வெளியேறும்படி ஆனது. சுமார் 48 ஆண்டுகள் கழித்து 1371ம் ஆண்டு விஜய நகர மன்னர்களின் பெரும் முயற்சியால், அரங்கன் மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கு வந்தார். அரங்கத்தைக் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு 1323ம் ஆண்டு நடந்த படையெடுப்பின்போது சுமார் 12,000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் தங்கள் உயிரை துறந்தனர். 1371ம் ஆண்டு அரங்கத்து பெருமாள் மீண்டும் பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்திற்குள் நுழைந்தாலும், ஸ்வாமி ராமானுஜராலும் மற்றும் பல கைங்கர்யபரார்களாலும் செய்யப்பட்டிருந்த உத்ஸவங்களை தொடர முடியாமல் போனது. ஆங்காங்கே  சிதைக்கப்பட்டிருந்த திருக்கோயில்களை சரி செய்யவே12 ஆண்டுகள் ஆனது.

1383ம் ஆண்டு, விஜய நகர மன்னர் விருப்பன்ன உடையார் (விருபாக்‌ஷர்) ஒரு  சித்திரை மாதத்தில், (17,000 பொற்காசுகள் கொண்டு இத்திருக்கோயில் திருப்பணிகளைச் செய்து, 52 கிராமங்களை இத்திருக்கோயிலின் மேம்பாட்டிற்காக தானமாகக் கொடுத்து) ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள கிராம மக்களை அழைத்து அரங்கனுக்கு சித்திரை திருவிழா நடத்த தங்களால் முடிந்த தானியங்களையும், கால்நடைகளையும் அரங்கனுக்கு சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். தங்கள் அரங்கனுக்கு, தங்களது நம்பெருமாளுக்கு மனம் உவந்து கிராம மக்கள் விருப்பன்ன உடையார் சொன்ன வார்த்தையை ஏற்று, தங்களால் இயன்ற பொருட்கள் அனைத்தையும் கொடுத்து அரங்கனுக்கு சித்திரை திருவிழாவை 1383ம் ஆண்டு தொடங்கி வைத்தனர். விருப்பன்ன உடையார் தொடங்கி வைத்த விழா என்பதாலேயே இது, ‘விருப்பன் விழா’ என்ற சிறப்பான பெயரோடும், அரங்கத்து விழாக்களிலேயே  சிறப்பான விழாவாகவும் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
திருமண வாழ்க்கை சிதையாமல் இருக்க சில சிம்பிள் யோசனைகள்!
Srirangam Chithirai Ther Thiruvizha

அரங்கனுக்கு பல்வேறு விசேஷங்கள் ஆண்டு முழுவதும் வந்தாலும், சித்திரை தேர் வெகு சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. ‘சித்திரை ரேவதி எப்போது வரும்? நம்பெருமாள் தேர் ஏறி எப்போது வருவார்’ என்று வையகமே காத்திருக்கும் ஒரு வைபவம் தேர் திருவிழாதான். குறிப்பாக, சுற்று வட்டார கிராம மக்கள் தங்கள் பெருமாளை காண நெற்கதிர்களோடு வந்து கூடும் விழா இதுவே. விருப்பன் திருநாளில் நடக்கும் ஒரு விசேஷ வைபவம் எளியோனுக்கு எளியோன் இப்பெருமாள், நம்பெருமாள் என்றே உரைக்கிறது. ஆம், ஒரு கிராமத்தைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் ஒன்று கூடி பெரிய பெருமாளின் பாதுகைகளுக்காக, வலப்பக்கம் திருவடிக்கான பாதுகையை  தயார் செய்து தருவார்கள். இன்னொரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய பெருமாளின் இடது பக்க திருவடிக்கான பாதுகையை தயார் செய்து தருவார்கள்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது என்பதோ அல்லது பேசிக்கொண்டு தயார் செய்யப்பட்டது என்றோ இல்லாத அந்த இரண்டு பக்க பாதுகைகளும் ஒரே அளவில் இருந்து அரங்கனின் திருவடிகளை அழகாக அலங்கரிப்பது என்பதும் விருப்பன் திருவிழாவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வாகும்.

கிளி மாலையை சாத்திக்கொண்டு சித்திரை திருவீதிகளில் திருத்தேர் ஏறி உலா வந்து நம் விருப்பங்களை நிறைவேற்றக் காத்துக்கொண்டிருக்கும் நம்பெருமாளை காண நாமும் காத்து நிற்போமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com