மழை வரும் வேளையில், தனது தோகையை விரித்து ஆடும் மயிலை பார்க்கும்போது எவ்வளவு அழகாகவும், ரம்மியமாகவும், மன நிம்மதியாகவும் இருக்கும். அத்தகைய உணர்வு மயிலிறகை வீட்டில் வைப்பதாலும் கிடைக்கும். பெரும்பாலானோர் வீடுகளிலும் கண்டிப்பாக மயிலிறகை வைத்திருப்போம். சிலர் அதை அழகுக்காகவும், இன்னும் சிலர் வாஸ்து சாஸ்திர பலன்களுக்காகவும் வைத்திருப்பார்கள்.
மயில் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வரக்கூடியது முருகப்பெருமானின் வாகனமும், ஸ்ரீகிருஷ்ணரின் கிரீடத்தில் இருக்கும் மயிலிறகும்தான். மயிலும், மயிலிறகும் இப்படி ஆன்மிகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். கண் திருஷ்டி, பில்லி, சூன்யம் போன்றவை விலகும்.
அந்தக் காலத்தில் அரசர்களுக்கு விசிறி விடுவதற்கு மயிலிறகை கொண்ட விசிறிகள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான முக்கியக் காரணம், அதில் இருந்து வரும் காற்றுக்கு மருத்துவ குணம் உள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் கூறுகிறார்கள். அதனால்தான் அடிப்பட்ட இடங்களில் மற்றும் காயங்களில் கூட மயிலிறகைக் கொண்டு மருந்து போடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலிறகை நம் வீட்டில் வைப்பதால் எந்த ஒரு விஷப்பூச்சிகளும் வராது. பாம்பு, பல்லி போன்றவையும் வராது. மயிலிறகு வீட்டில் இருந்தால், முருகனுடைய அருளும், ஸ்ரீகிருஷ்ண பகவான் அருளும் வீட்டில் பரிபூரணமாக இருக்கும். அந்தக் காலத்தில் திருஷ்டி எடுக்க மயிலிறகையே பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது வீட்டில் இருப்பதால் செல்வச் செழிப்பு, லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டிலுள்ள சண்டை சச்சரவுகள் நீங்கும். மயிலிறகில் உள்ள நிறங்களைப் பார்கும்போது மன நிம்மதி கிடைக்கும், ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருக்கும். சாம்பிராணி போடும்போதும் மயிலிறகை சிலர் பயன்படுத்துவார்கள். இதனால் திருஷ்டி நீங்கும் என்று நம்பப்படுகிறது.
பள்ளிவாசலில் ஜபித்துவிட்டு மயிலிறகை தலையில் தடவி விடும் பழக்கம் இன்றும் உள்ளது. இதனால் தீய சக்திகள் விலகும் என்று நம்பப்படுகிறது. குழந்தைகள் இருக்கும் இடத்தில் மயிலிறகை வைப்பது நல்லது. மயிலிறகை தாராளமாக பூஜையறையிலும் வைக்கலாம்.
மயிலிறகை கிருத்திகை, ரோஹிணி ஆகிய நட்சத்திரம், சஷ்டி திதி, வளர்பிறை அஷ்டமியில் வாங்குவது விசேஷமாகும். மயிலிறகை வாங்கியதும், மஞ்சள் நீரால் தெளித்து சுத்தப்படுத்திய பிறகே பூஜையறையில் வைப்பது நல்லது. மயிலிறகை வாசற்படியின் மேல்பக்கமாக சொறுகி வைப்பது எதிர்மறை சக்தியை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும். வாஸ்து பிரச்னைகளை தீர்க்கும். மயிலிறகை ஒற்றைப்படையில் 5, 7, 9 என்ற கணக்கில் வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை மயிலிறகுக்கு மஞ்சள் தண்ணீர் தெளித்து, தீப தூபம் காட்டுவது மிகவும் நல்லது.