
‘ஏகாதசி விரதத்தை விட மேன்மையான விரதம் வேறு ஒன்றும் இல்லை’ என்று கூறுவார்கள். அதன் சிறப்புகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முதன் முதலாக ஏகாதசி விரதம் தொடங்கிய நாள் தனுர் மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச ஏகாதசி திதியன்றுதான். ஆகவே, அது உத்பத்தி ஏகாதசி என்றே அழைக்கப்படுகிறது.
அடுத்தது, அந்த மாத சுக்ல பட்சத்தில் வரும் பிரசித்தமான வைகுண்ட ஏகாதசியை, 'மோக்ஷ ஏகாதசி’ என்று அழைப்பர்.
மூன்றாவதாக, தை மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஸபலா. ‘நற்பலனைத் தருவது’ என்பது இதன் அர்த்தம். இதில் தீப தானம் செய்வது மிகவும் புண்ணியம் தரும் செயல்.
நான்காவது, தை மாத சுக்ல பட்சத்தில் வருகிற புத்திரதா. இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். இதன் மகிமையை சொல்பவர்களும், கேட்பவர்களும் ‘அக்னிஷ்டோமம்’ என்ற யாகம் செய்த பலனை அடைவர் என்பது நம்பிக்கை.
ஐந்தாவது, மாசி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஷட்திலா’ எனப்படுகிறது.
ஆறாவது, மாசி மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி 'ஜயா' எனப்படுகிறது. இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தால் பிரம்மஹத்தி பாவங்கள் விலகி, எல்லாவிதமான நற்பேறுகளும் கிட்டும்.
ஏழாவது, பங்குனி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘விஜயம்’ என்று பெயர். ஸ்ரீராமபிரான், ராவணனைவென்று சீதா பிராட்டியை மீட்டு வந்த வெற்றிக்கு இந்த ஏகாதசி விரதத்தை ஸ்ரீராமர் அனுஷ்டித்ததுதான் காரணம் என்று கூறுவர்.
எட்டாவது, பங்குனி மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஆமலக்கி’ என அழைக்கப்படுகிறது. நெல்லி மரத்தின் அடியில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இதனாலேயே இந்த ஏகாதசிக்கு ‘ஆமலக்கி’ என்று பெயர்.
ஒன்பதாவது, சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வருவது 'பாப மோசனிகா' பாவங்களிலிருந்து ஒருவனை விடுவிக்க வல்லது என்பது இதன் பொருள்.
பத்தாவது, சித்திரை மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'காமதா' இந்த ஏகாதசியன்று முறையாக விரதத்தை அனுஷ்டித்தால் தான் விரும்புவதைப் பெறலாம்.
பதினொன்று, வைகாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வருவது ‘வரூதினி’ ஏகாதசி.
பன்னிரண்டாவதாக, வைகாசி மாத சுக்ல பட்சத்தில் வரும் 'மோஹினி', இந்த விரதத்தின் பெருமையை வசிஷ்டரே ஸ்ரீராமருக்கு சொல்லியிருக்கிறார்.
பதிமூன்றாவதாக, ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும், 'அபரா' ஏகாதசி. 'நிர்ஜலா ஏகாதசி’ என்றும் அழைக்கப்படும். இதன் பெயரிலேயே அன்றைய தினம் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தக் கூடாது என்பது விளங்குகிறது. இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால் வருஷம் முழுவதும் 25 ஏகாதசிகளிலும் விரதம் அனுஷ்டித்த பலன் கிட்டும்.
பீமனுக்கு உபவாசம் இருப்பது மிகவும் கடினமாகப்பட்டது. இதனால் வியாசர், ‘எல்லா ஏகாதசியிலும் நீ உபவாசம் இருக்கவிட்டாலும், இந்த நிர்ஐல ஏகாதசி அன்று மட்டும் தண்ணீர் கூட பருகாமல் சுத்த உபவாசம் இருந்தால் அனைத்து ஏகாதசி விரத பலன்களையும் பெறுவாய்’ என்று பீமனுக்கு உபதேசித்தார். பீமனும் அதை ஏற்றுக் கொண்டான். ஆதலால் இதற்கு 'பீம ஏகாதசி’ என்றும் பெயர்.
பதினான்காவதாக, ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசிக்கு 'யோகினி 'என்றும் அதே சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'சயனீ' என்றும் பெயர்கள். 'சயனீ'ஏகாதசியில் பகவான் மகாவிஷ்ணு பாற்கடலுள் சயனத்தில் படுத்து உறங்கத் தொடங்கியது ஆஷாட மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று. எனவே, இதனை ‘அயனீ ஏகாதசி’ என்பர். இந்த ஏகாதசி பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோயிலில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பகவான் படுத்து உறங்கும் இந்தக் காலம் ‘சாதுர்மாஸ்யம்’ எனப்படுகிறது.
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் வரும் கிருஷ்ண பட்ச, சுக்ல பட்ச ஏகாதசிகளுக்கு உள்ள பெயர்கள் சாமிகா, புத்ரஜா அல்லது பவித்திர ஆரோபிணி, அஜா, பத்மநாபா, இந்திரா, பாப்பாங்குசா ஆகியன.
இருபத்து நாலாவதாக வருகின்ற கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசியன்று பகவான் விழித்துக் கொள்கிறார். அதனால் அதற்கு ‘பிரபோதினி’ என்று பெயர். இந்த ஏகாதசியில் பகவானை துளசியால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வோர் சகலவித நன்மைகளும் அடைவர்.
அதிகப்படியாக வரும் 25வது ஏகாதசிக்கு 'கமலா' என்று பெயர். ஏகாதசி சாந்தரமான கணக்கீட்டு முறைப்படி நட்சத்திர, மாதக் கூட்டுறவால் பல சிறப்புப் பெயர்களை அடைகின்றன.
விடியக்காலையில் ஒரு நாளைக்கு குறைவாக ஏகாதசி இருந்தால் அதற்கு ‘உந்மீலந்’ என்று பெயர். காலையில் அல்ப ஏகாதசி, மத்தியில் துவாதசி, இரவின் இறுதியில் த்ரயோதசி கூடினால் அது திரிஸ்ப்ரூ எனப்படும். சுக்ல பட்ச ஏகாதசியில் புனர் வஸு சேர, அது ‘ஜயா’ எனப்படும்.
கைசிகர் எனும் ஒரு பக்தர் ஏகாதசி உபவாச நியமத்தால் உயர்வு பெற்றிருக்கிறார். இதனால் மிருகசீரிஷ சுக்ல பட்ச ஏகாதசியை ‘கைசிக ஏகாதசி’ என்பர்.