
சொரிமுத்து ஐயனார் கோவிலில் உள்ள பட்டவராயர் சன்னதியில் பக்தர்கள் செருப்பை காணிக்கையாக வழங்குகிறார்கள். இக்கோவிலில் காணிக்கையாக வழங்கப்படும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் காரையாரில் அமைந்துள்ளது சொரிமுத்து ஐயனார் கோவில். அந்தணர் குலத்தில் பிறந்த முத்துப்பட்டன் செருப்பு தைக்கும் குலத்தில் உள்ள இரு பெண்களை திருமணம் செய்துக் கொண்டார். காதலுக்கு ஜாதி இல்லை என்று நிரூபித்தவர். அதனால் இவரது குடும்பம் இவரை புறக்கணித்தது. பசுக்களை பாதுகாக்கும் போரில் பங்கேற்று மரணமடைந்தவர்.
இவருக்கு மக்கள் சன்னதியும் எழுப்பியுள்ளனர். பொம்மக்கா, திம்மக்கா என்ற தன் இரு மனைவியருடன் பட்டவராயர் என்ற பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மாமனாரின் உத்தரவுப்படி இவர் செருப்பு தைக்கும் பயிற்சியை எடுத்துக் கொண்டார். இதனால் இக்கோவிலில் செருப்பை காணிக்கையாக வழங்குகிறார்கள். முதல் ஆண்டு காணிக்கையாக கட்டிய செருப்பு அடுத்த ஆண்டு சென்று பார்த்தால் தேய்ந்திருக்கும்.
அது வனப்பகுதி என்பதால் ஆட்கள் அதிகம் செல்வதுமில்லை, அக்கோவிலில் கட்டப்பட்டிருக்கும் செருப்பை தொடுவதுமில்லை. அப்படியிருக்கையில் செருப்பு தேய்ந்திருப்பது அதிசயமான நிகழ்வாக காணப்படுகிறது. இவரிடம் வேண்டிக் கொண்டால் கால்நடைகள் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
பொம்மியும், திம்மியும் தீக்குழி இறங்குவதை நினைவூட்டும் வகையில் இந்தக் கோவிலில் நடைப்பெறும் தீக்குழி விழாவில் தீக்குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு தீவினை நீங்கி நன்மை ஏற்படுகிறது என்று நம்புகிறார்கள்.
இத்தகைய அதிசயம் வாய்ந்த கோவிலுக்கு நீங்களும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று வழிப்பட்டு வருவது நன்மையைத் தரும்.