கிருஷ்ணர் லீலையில் அர்ச்சுனன் - சுபத்திராவின் திருமணம்!

Arjuna married Subhatra
Arjuna married Subhatra
Published on

ர்ச்சுனன் ஒரு சமயம் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பி பூப்பிரதட்சணம் செய்து பிரபாஸ் தீர்த்தத்தை அடைந்தான். அப்போது தனது மாமன் மகளான சுபத்திரையை பலராமன் துரியோதனனுக்கு கொடுக்க விரும்பியதாகவும் மற்றவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் கேள்விப்பட்டான். அவன் சுபத்திரையை அடைய ஆசைப்பட்டான். அதற்காக திருகண்டி சன்னியாசியாக வேஷம் பூண்டு துவாரகைக்கு வந்தான்.

சுபத்திரையின் நினைவு அவனை வாட்டவே அவன் கிருஷ்ணனிடம் முறையிட்டான். பகவான் வந்தார். "அர்ச்சுனா! நீ ரைவத பர்வதத்தின் சாரலில் சன்னியாசியாகவே இரு" என்று சொல்லிச் சென்றார். மேலும் யாதவர்கள் கொண்டாடும் திருவிழாவான ரைவத பர்வதமழைச்சாரலுக்கு துவாரகபுரிவாசிகள், வசுதேவர் முதலானவருடன் சுபத்திரையும் வந்திருந்தாள். அவளை நேரில் பார்த்த அர்ச்சுனனுக்கு அவளை திருமணம் செய்துகொள்ள ஆசை வரவே கண்ணனிடம் மன்றாடினான்.

சில நாட்களுக்குப் பிறகு மழைச்சாரலுக்கு வேட்டையாட பலராமன் முதலியோர் அங்கு வந்தனர். அவர்கள் சன்னியாசி வேடம் பூண்ட அர்ச்சுனனைக் கண்டு, அவனை ஒரு பெரிய மகரிஷி என்று நினைத்து அரண்மனையில் தங்க ஏற்பாடு செய்தனர். மேலும், அரண்மனையில் சுபத்திரையை அவனுக்கு பணிவிடை செய்யும்படி சொல்லலாம் என்றும் ஆலோசனை கூறினர். அதற்கு முதலில் ‘கன்னிப்பெண் சுபத்திரை இருக்கும் இடத்தில் சன்னியாசியை கொண்டுவர வேண்டுமா?’ என கொஞ்சம் எதிர்ப்பு தெரிவிப்பது போல கண்ணன் நடித்தார். அதற்கு பலராமன் பெரிய மகரிஷியை பற்றி நீ சந்தேகிப்பது தவறு என்று சொன்னதும், அர்ச்சுனனாகிய சன்னியாசி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டான். முனிவரை கண்காணிக்கும் பொறுப்பு சுபத்திரையிடம் விடப்பட்டிருந்தது.

கிருஷ்ணர் ருக்மணியிடம் மட்டும் முனிவராக வந்திருப்பது அர்ச்சுனன் என்ற உண்மையை தெரிவித்திருந்தார். ஒரு நாள் சுபத்திரா சன்னியாசியான அர்ச்சுனனின் எதிரில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த பொழுது, ‘‘சுவாமி தாங்கள் எத்தனையோ தேசங்களை சுற்றி வந்திருக்கிறீர்களே; இந்திரப்பிரஸ்தம் போயிருந்தீர்களா?அங்கு என் அத்தை குந்திதேவி இருக்கிறார்களே அவர்களைப் பார்த்தீர்களா” என்று கேட்டாள்.

சுபத்திரைக்கும் அர்ச்சுனனை நாயகனாக அடைய வேண்டும் என்ற விருப்பம். ஆதலால், சுற்றி வளைத்து அத்தையை பற்றி விசாரித்தாள். அதன் மூலம் அர்ச்சுனனை பற்றி ஏதாவது சன்னியாசி சொல்வாரா என்று எதிர்பார்த்தாள்.

“பெண்ணே, நான் அங்கு சென்ற பொழுது என்னை மிகவும் நன்றாக உபசரித்தார்கள்” என்று கூறினான் அர்ச்சுனன்.

“சுவாமி என் அத்தை மக்களின் ஒருவரான அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை போயிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அவர் ஊர் திரும்பி விட்டாரா? தாங்கள் அவரை சந்தித்தீர்களா?” என்று வினவினாள்.

“அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை இன்னும் முடிந்தபாடில்லை. தற்சமயம் அவன் துவாரகையில்தான் இருக்கிறன். உன் எதிரிலேயே இருக்கும்போது உன்னால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லையா?” என்று கேட்டான்.

"சுவாமி என்னருகில் நீங்களா?" என்று கேட்டு வெட்கி தலை குனிந்தாள் சுபத்திரை.

சுபத்திரையின் விருப்பத்தை புரிந்து கொண்ட ருக்மணி, கிருஷ்ணனிடம் தெரிவித்தாள். அவர் சுபத்திரை நோய்வாய்ப்பட்டிருப்பதாகச் சொல்லி, அதன் பொருட்டு குறித்த நாள் ஒன்றில் நேர்த்திக்கடனாக சமுத்திரத்திற்கு பக்கம் உள்ள தீவில் சிவபெருமானுக்கு ஓர் உத்ஸவம் நடத்துவதாகவும் தெரிவித்தார். இந்தத் திருமணத்தை விரும்பாத பலராமன் முதலானோர் துவாரகையில் இல்லாது இருக்கவே, இந்த ஏற்பாட்டைச் செய்தார் கண்ணன்.

பின்னர் குறித்த நாளில் அந்தப் பிரமோத்ஸவம் நடந்தது. அப்பொழுது வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு, தன்னை எதிர்த்த சூரர்களையும், வேலையாட்களையும் விரட்டி விட்டு, பெற்றோர் மற்றும் கிருஷ்ணன் அனுமதியுடன் சுபத்திரையை அபகரித்துக் கொண்டு சென்றான் அர்ச்சுனன்.

இதையும் படியுங்கள்:
கத்திரிக்கோலின் கதை தெரியுமா உங்களுக்கு?
Arjuna married Subhatra

“கண்ணா, அர்ச்சுனன் செய்த காரியத்தை பார்த்தாயா?” என பலராமன் கேட்க, “நான்தான் கன்னிப்பெண் இருக்கும் இடத்தில் சன்னியாசியை அழைத்துக் கொண்டு வந்து அரண்மனையில் வைக்க வேண்டாம் என்று சொன்னேனே? போகட்டும். நீங்கள் அவரை அழைத்து வருவதை தடுத்தால் கோபப்படுவீர்களே என பேசாமல் இருந்தேன்” என்றார் கிருஷ்ணர்.

“இப்போது நாம் என்ன செய்வது? கோழை போல் அர்ச்சுனன் அவளை கவர்ந்து போய் விட்டானே” என்று உடல் பதறக் கூறினார் பலராமர். அதற்குக் கண்ணன் “நான் அர்ச்சுனன் செயலை சரி என்று சொல்லவில்லை. இருப்பினும் அவன் இச்சமயம் சுபத்திரையை திருமணம் செய்திருப்பான். இந்தச் சூழ்நிலையில் அதை ஆதரிப்பதே உத்தமம்” என்று சொன்னார்.

உடனே பலராமன், இக்கட்டான நிலைமையை சமாளிக்க பெண்ணுக்கு சீர்வரிசைகளை எடுத்துக்கொண்டு இந்திரப்பிரஸ்தம் சென்றார். அர்ச்சுனன் தாய் குந்திதேவி மற்றும் சகோதரர்களிடம் நடந்தவற்றை கூறி, அவளைத் திருமணம் செய்து கொண்டான்.

சீர்வரிசைகளை கிருஷ்ணனும், பலராமனும் கொண்டு வந்து கொடுத்ததும் மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று உபசரித்து அதை ஏற்றுக் கொண்டார்கள் பஞ்சபாண்டவர்கள். இவ்வாறு பரந்தாமன் கிருஷ்ணாவதாரத்தில் அசுரர்களை வதைக்கவும், பக்தி உள்ளவர்களை கொண்டாடவும் லீலைகள் பல புரிந்தருளினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com