கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது பூம்பாறை முருகன் திருக்கோயில். இக்கோயிலின் மூலவர் முருகன் குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்படுகிறார்.
ஒரு சமயம் அருணகிரிநாதர் பூம்பாறை முருகனை தரிசிக்க வந்தார். இரவு நேரமாகி விட்டதால் கோயில் மண்டபத்திலேயே அருணகிரிநாதர் தூங்கி விட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது, முருகன் குழந்தை வடிவில் காவி உடை அணிந்திருந்த அருணகிரிநாதர் மீது விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட ராட்சகி, குழந்தையும் தாயும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரை கொல்லாமல் சென்று விட்டது. நடந்த சம்பவத்தை தனது ஞான திருஷ்டியால் அறிந்த அருணகிரிநாதர், குழந்தை வேடத்தில் வந்து தனது உயிரைக் காப்பாற்றியதால் இத்தல முருகனை குழந்தை வேலர் என்று அழைத்தார். இப்போதும் முருகன் இக்கோயிலில் குழந்தை வேலப்பராக அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலையுடன் கோயில் உள்ளது.
குழந்தை வேலாயுசாமி, சித்தர் போகரால் நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டவர். பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானைமுட்டி குகையில் அமர்ந்துதான் போகர் சித்தர் தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள், ரசாயனப் பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையை பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் சூட்டினார்.
அதன் பிறகு மறுபடியும் சீன நாட்டிற்குச் சென்று பஞ்சபூத சக்திகளைப் பெற்று யானைமுட்டி குகைக்கு வந்து குரூமூப்பு என்ற அருமருந்தால் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குறுமூப்பு முருகர் சிலையை உருவாக்கினர். அந்த சிலையே இப்போதுள்ள பூம்பாறை மலை உச்சியில் உள்ள கோயிலில் மூலவராகக் காட்சி தருகிறார்.
இந்தியாவில் இரண்டு கோயில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன. ஒன்று பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, இரண்டாவது பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.
இத்தல முருகன் விழாக் காலங்களில் தேரில் வீதி உலா வரும்போது தேரின் முன்புறம் மற்றும் பின்புறம் வடம் பிடித்து தேர் இயக்கப்படுகிறது. இப்படி இரு வடத்தேர் இயங்குவதை இங்கு மட்டுமே காணலாம். அத்துடன் முருகனடியார்கள் வரிசையாக நின்று தேர் அச்சின் மீது 25000 தேங்காய்களை உடைக்கும் வழிபாடு கண்கொள்ளா காட்சியாகும். இத்தல முருகப் பெருமானின் சித்தம் இருந்தால் மட்டுமே யாராலும் இங்கு வர முடியும் என்பது ஐதீகம்.
பஞ்சபாண்டவர்கள் தங்களது வனவாசத்தின்போது பூம்பாறைக்கு வந்து இங்கு போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குருமூப்பு என அழைக்கப்பட்ட முருகனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சேர மன்னன் குருமூப்பு முருகன் சிலையை சுற்றி ஒரு மண்டபத்தை எழுப்பினர்.