

நினைத்தாலே மோட்சம் தரும் திருவண்ணாமலை திருத்தலத்துக்கு என்று தனிச்சிறப்புகள் ஏராளம் உண்டு. திருவண்ணாமலை தலம் ஞானச் செம்மல்களை வாவென்று அழைக்கும் அருள் மலை என்றே கூறலாம். அதைத் தேடி காலம் காலமாக ஞானிகள் அலையலையாக வந்துகொண்டே இருக்கின்றனர். இன்னும் வருவார்கள் என்பதில் எவிவித ஐயமும் இல்லை. இப்படி வந்த பகவான் ரமணர், ராம்சுரத்குமார் போன்ற ஞானிகள் இங்கே நிலைபெற்று அன்பர்களுக்கு ஞானவழியை காட்டி அண்ணாமலையாருடன் கலந்துள்ளனர் என்பதை அங்கு சென்று பார்த்தவர்கள் அனைவரும் அறிய முடியும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்கு திசைகளுக்கும் இரண்டு இரண்டாக எட்டு கோபுரங்கள் இருக்கின்றன. இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் கிழக்கு பகுதியில் ஒன்பதாவது கோபுரத்தை வணங்கலாம். இதில் கிழக்கில் உள்ள பெரிய கோபுரம் ‘ராய கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. இது கிருஷ்ணதேவராயர் காலத்தில் தொடங்கி, செவ்வப்ப நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது. அதனால் இதனை ராஜகோபுரம் என்கின்றனர்.
இந்த கோபுரத்தின் நெடிய சிறப்பைப் போற்றி தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதத்தில் பாடப்பட்ட பாடல்கள் இங்கு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நெடிய கோபுர வாயிலைக் கடந்து வலம் வரும்போது சிவகங்கை தீர்த்தம், கம்பத்து இளையனார் சன்னிதி, அமாவாசை, கிருத்திகை மண்டபங்கள் உள்ளன. வாயிலில் அமைந்துள்ள நெடிய கோபுரத்தை கிளி கோபுரம் என்கின்றனர். அதைக் காணும்போது கோபுரத்தின் உச்சியில் நாசி தலை மீது பெரிய கிளியின் வடிவம் உள்ளது. அதோடு, கிழக்கு பக்கத்தில் முதல் நிலை வாயிலின் மீதுள்ள விமான பகுதியில் கிளி வடிவம் உள்ளது.
அருணகிரிநாத சுவாமிகள் மன்னனின் கண் பார்வையை மீட்டுத் தர வானுலகம் சென்று பாரிஜாத புஷ்பத்தை கொண்டு வந்து இதன் மீது அமர்ந்தார் என்று கூறப்படுகிறது. கண் பார்வை பெற்ற மன்னன் அதை நினைவூட்டும் வகையில் கோபுரத்தில் பெரிய கிளியின் வடிவத்தை அமைத்தான் என்றும், அதன் பிறகு இது கிளி கோபுரம் என்று பெயர் பெற்றதாகக் கூறுகின்றனர். இந்த கோபுர வாயிலுக்கு அண்ணாமலையார் வரும்போது அங்குள்ள ஆடல் மங்கையர் குட தீபம் ஏந்தி காட்டுவதும் திரும்ப உள்ளே செல்லும்போது திருஷ்டி கழிய தீபம் காட்டுவதும் நிகழ்ந்துள்ளது. அதை நினைவூட்டும் வகையில் ஆடல் மகளின் திரு உருவம் பெரிய சுதைச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
இந்தப் பிராகாரத்தை வலம் வந்து உள்ளே செல்லும் வாயிலின் மீதுள்ள சிறிய கோபுரத்தை காண்கிறோம். இதற்கு ரிஷி கோபுரம் என்று பெயர். இதை கணக்கில் கொள்வதில்லை. ஆதலால், திருவண்ணாமலை பெருங்கோபுரங்கள் ஒன்பது என்று சொல்லப்படுகின்றன. பொதுவாக, ஒரு தலத்தில் இறைவன் அன்பர்களுக்கு அருள்புரிந்த வரலாறு சிறப்பாக சொல்லப்படுவது உண்டு. சில தலங்களில் அம்பிகை அருள்புரிந்த வரலாறும், சில தலங்களில் அம்பிகை சிவன் இருவரும் அருள்புரிந்த வரலாறும், சில தலங்களில் முருகன் சிறப்பாக அருள்புரிந்த வரலாறு இருக்கும்.
அந்த வகையில் திருவண்ணாமலையில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பிகை, விநாயகர், முருகன், துர்கை ஆகிய எல்லோருமே அன்பர்களுக்கு அருள்புரிந்ததையும், அவர்களை அன்பர்கள் துதித்து பாடியதையும் காண்கின்றோம். உண்ணாமுலை அம்பிகை இங்குள்ள சித்தர்களுக்கு அமுதூட்டி அருள்பாலித்துள்ளார். அதனால் அம்பிகையை போற்றி அன்பர்கள் பாடிப் பரவி உள்ளனர்.
கணபதிக்கு அடுத்தபடியாக முருகன் அன்பர்களுக்கு அருள் செய்ததில் அருணகிரியாருக்கு செய்ததை சிறப்பாக குறிப்பிட முடியும். அருணகிரிநாதரை ஆட்கொண்டு அவரைக் கொண்டு திருப்புகழை அருளச் செய்தது தனிச்சிறப்பு மிக்கதாக உள்ளது. சிவபெருமானுக்கு சமயக் குரவர்கள் நால்வர் நற்றமிழ் பாடி அன்பர்களுக்கு அளித்தது போல், அருணகிரிநாதர் முருகன் மீது திருப்புகழ் பாடி அளித்துள்ளார்.
அருணகிரிநாதர் வேண்டிக்கொண்டபடி முருகப்பெருமான் கம்பத்தில் தோன்றி காட்சியளித்துள்ளார். ஆதலால் அந்த சன்னிதி கம்பத்து இளையனார் சன்னிதி எனப்படுகிறது. அடுத்ததாக, உண்ணாமுலையம்மை அன்பர்களுக்கு அருள் செய்ததை காண்கிறோம். இப்படி இங்கு உள்ள தெய்வங்கள் மட்டுமின்றி, இங்குள்ள மலை மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை புகழ்ந்தும் பலரும் பாடி பரவசமடைந்துள்ளனர். இப்படிப் பலரும் அண்ணாமலை தெய்வங்களை புகழ்ந்து பாடிப் பரவியுள்ளதும், அருணகிரிநாதர் போன்றோர் தீவினை அகன்று நல்வினை பெற்றதும் மக்கள் மனதை விட்டு நீங்காத காட்சியாக இருக்கிறது. நாமும் நல்வினை பெற அண்ணாமலையாருடன் இங்குள்ள அனைத்து தெய்வங்களின் அருளைப் பெற சமயம் கிடைக்கும்பொழுது சென்று வணங்கி அருள் பெறலாமே!