

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கொண்டபாளையத்தில் நூற்றியெட்டு திவ்ய வைணவத் தலங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. பராங்குச சோழன் கட்டிய மூன்றாம் நூற்றாண்டு கோயில் இது. இங்கு ஒரு கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை இருபத்தி நான்கு நிமிடங்கள் மட்டும் இருந்தாலே மோட்சம் கிட்டிடும். அத்தனை பெருமை உடையது ‘கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோயில்.
இக்கோயில் லட்சுமி நரசிம்மர் எழுநூற்றி ஐம்பது அடி உயரத்தில் ஆயிரத்து முன்னூற்றி ஐந்து படிக்கட்டுகளுடன் கடிகாசலம் என்னும் ஒரே மலைக்குன்றின் மீது இருநூறு அடி நீளம், நூற்றி ஐம்பது அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த கோவிலில் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவருடன் அமிர்தவல்லி தாயார் அருளாசி வழங்குகிறார். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுகள் கொண்டுள்ள அழகிய கோயில் இது.
பொதுவாக, பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே உத்ஸவ திருமேனிகளையும் வீற்றிருக்க செய்வார்கள். ஆனால், சோளிங்கரில் மட்டுமே கிழக்கு நோக்கிபடி சிம்ம சோஷடாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் வீற்றிருக்கிறார். சங்கு சக்கரதாரியாக நான்கு திருக்கரங்களுடன் இரு கால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் லட்சுமி நரசிம்மர் காட்சி தருகிறார்.
விசுவாமித்திரர் ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தல நரசிம்மரை வழிபட்டு ‘பிரம்மரிஷி’ பட்டம் பெற்றதாக வரலாறு. பக்தன் பிரகலாதனுக்குக் காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தை தாங்களும் கண்டு ஆனந்தமடைய வேண்டும் என வசிஷ்டர், காசியபர், ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் ஆகிய முனிவர்களோடு விசுவாமித்திரர் இத்தலத்தில் தவம் இருந்துள்ளார்.
ஒரே கல்லின் மீது குன்று போல் அமைந்த இந்த மலை மீது ஆயிரத்து முன்னூறு படிகளைக் கடந்து வந்து யோக நரசிம்மரை தரிசித்தாலே பக்தர்கள் கேட்கும் வரங்களை அள்ளி வழங்கி விடுவார், யோக நரசிம்மருக்கு கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர் சாதம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் நரசிம்மருக்கும் தாயாருக்கும் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது இறைவனை அபிஷேகிக்கும் பால், தயிர், தேன், சர்க்கரை ஆகியவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவார்கள்.
மனம் வளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கண்கள் மூடிய நிலையில் காட்சி தரும் மூலவர் யோக நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். குறிப்பாக, கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.
யோக நரசிம்மர் அருளும் மலைக்கு எதிரில்.நானூற்றி ஆறு படிகளுடன் அமைந்த அழகிய குன்றின் மீது யோக ஆஞ்சனேயர் அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் இவர், ஒரு கையில் சங்கும் மற்றொரு கையில் சக்கரமும் மீதமுள்ள இரண்டு கரங்களில் ஜப மாலையும் தாங்கி காட்சி தருகிறார்.
சிறிய மலையில் இருந்து பார்த்தால் யோக ஆஞ்சனேயரின் கண்கள் நேராக பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மரின் திருவடி நோக்கி இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
சப்த ரிஷிகள் இந்த மலையில் தவம் இருந்தபோது இரண்டு அரக்கர்களால் இடையூறு ஏற்பட்டதால் பெருமாள் ஆஞ்சனேயரிடம் சென்று சப்த ரிஷிகளை பாதுகாக்கும்படி ஆணையிட்டாராம். ஆஞ்சனேயர் இங்கு வந்து இரண்டு அரக்கர்களுடன் போரிட்டு வெல்ல முடியவில்லை. அதையடுத்து, பெருமாளிடமிருந்து சங்கு சக்கரத்தை வாங்கி அதனைக் கொண்டு இரண்டு அரக்கர்களையும் விரட்டி அடித்து ரிஷிகளுக்கு பாதுகாப்பளித்த பிறகுதான் சப்த ரிஷிகளுக்கு பெருமாள் யோக நரசிம்மராக காட்சி அளித்ததாக ஐதீகம். அந்த காட்சியை ஆஞ்சனேயரும் கண்டு களித்தாராம்.
கார்த்திகை மாதத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டு அவர் கண் திறக்கும் நேரத்தில் அவரிடம் நமது வேண்டுதல்களை வைத்து நிறைவேற்றிக் கொள்ளலாம்.