அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள் அவதாரத் திருநாள்!

Arunai Jothi Sheshathri swamigal Avathara Thirunaal
Arunai Jothi Sheshathri swamigal Avathara Thirunaal

நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. தமிழ்த் திருநாட்டில் உள்ள இந்தத் தலத்தில் எண்ணற்ற மகான்கள் அவதரித்து மக்களை வழி நடத்தியுள்ளனர்.  அவர்களுள் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளும் ஒருவர். மகான் ரமண மகரிஷி பாதாள லிங்க அறையில் தவமிருந்தபோது அவரை உலகிற்கு அடையாளம் காட்டியவர் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். ரமண மகரிஷி, சேஷாத்ரி ஸ்வாமிகள், காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள் மூவரும் ஒரே தலைமுறையைச் சேர்ந்த சமகாலத்து மகான்கள்.

வந்தவாசி தாலுகா, வழூர் என்னும் சிற்றூரில் மரகதம் அம்மையார் காமகோடி வரதராஜ சாஸ்திரிகள் தம்பதிக்கு மகனாய் காமகோடி சேஷாத்ரி சாஸ்திரி 1870ம் ஆண்டு தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் (இன்று) சனிக்கிழமையில் அவதரித்தார். காமகோடி சாஸ்திரி என்பது இவரது குடும்பப் பெயர். பெருமாளுக்குரிய சனிக்கிழமையன்று பிறந்ததால் சேஷாத்ரி என்று பெயரிடப்பட்டார். இவர் சிறந்த புத்திக் கூர்மையுடன் சாஸ்திரங்களைக் கற்று எல்லாவற்றிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

தனது தாயார் இறக்கும் தருவாயில், 'அருணாசல, அருணாசல, அருணாசல!' என்று மூன்று முறை சொன்னது சேஷாத்ரி ஸ்வாமிகள் மனதில் பதிந்து போயிற்று.  தன்னுடைய 19வது வயதில் எல்லாவற்றையும் துறந்து துறவியாகி,  இந்த உலகிற்கே வழிகாட்ட சேஷாத்ரி ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தை விட்டு திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார். அண்ணாமலையார் கோயிலில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். சித்த புருஷரான இவர் ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சியளித்துள்ளார். சில சமயங்களில் பல்வேறு உருவங்களிலும் காட்சியளிப்பார்.

மக்களுக்குத்தான் இந்த சித்த புருஷர் மேல் எவ்வளவு நம்பிக்கை? இவர் கட்டியணைத்தால் தோஷம் நீங்கும். கன்னத்தில் அறைந்தால் செல்வம் பெருகும்.  எச்சில் உமிழ்ந்தால் நினைத்தவையெல்லாம் கைகூடும். ஏதேனும் ஒரு உணவகத்திற்குள் சென்று அங்கேயுள்ள உணவுப் பொருட்களை வாரியிறைப்பார். அந்த உணவகத்தின் முதலாளி வந்து ஸ்வாமிகளின் பாதங்களில் வீழ்ந்து வணங்குவார். ஏனென்றால், அன்று அங்கே வியாபாரம் அமோகமாக நடக்குமே? எந்த கடைக்குள் சென்று கல்லாப் பெட்டியிலிருந்து இவருடைய தங்கக்கையால் சில்லறையை இறைத்தாலும் அன்று அந்தக் கடையிலுள்ள எல்லாப் பொருட்களும் விற்பனையாகி அந்த வியாபாரிக்கு அமோக லாபம் கிடைக்கும்.

நாற்பது ஆண்டுகள் திருவண்ணாமலையில்  கழித்த சேஷாத்ரி சுவாமிகளுக்கு, தான் தனது தேகத்தை துறக்க வேண்டிய சமயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. ஒரு நாள் தனது பக்தை சுப்புலட்சுமியிடம், "நான் ஒரு புது வீடு கட்டிக்கொண்டு யோகாப்யாசம் செய்யலாம்னு பார்க்கிறேன். நீ என்ன சொல்றே?" என்று வினவினார். அவர் சொல்வதன் பொருள் அறியாத சுப்புலட்சுமி, "எதுக்கு ஒங்களுக்கு புது வீடு? இங்கே நல்லாதானே இருக்கீங்க?" என்றாள். ஆனால் அதையே அவர் அடிக்கடி கேட்கவும், "உங்களுக்கு அதுதான் வசதின்னா அப்படியே பார்த்துக்குங்க!" என்றாள். சேஷாத்ரி சுவாமிகள் புது வீடு என்று சொன்னது உடம்பை உதறிவிட்டு இவ்வுலகை விட்டுக் கிளம்ப என்பது வெகுளியான சுப்புலட்சுமிக்குப் புரியவில்லை.

ஒரு சமயம் அவருக்கு திடீரென்று குளிர் ஜுரம் வந்தது. ஆனால், அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. நாற்பது நாட்கள் தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் எப்போதும் போல ஊரில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.  நாற்பத்தியோராம்  நாள் கடைசியாக கோயிலுக்குப் போய் அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து விட்டு, தான் விருப்பமுடன் அதிக நேரம் கழிக்கும் கம்பத்து இளையனார் சன்னிதியில் வந்து சிறிது நேரம் அமர்ந்தார். பிறகு உடல் உபாதை பொறுக்க முடியாமல் சின்னக்  குருக்கள் வீட்டுத் திண்ணையிலேயே வாட்டியெடுக்கும் ஜுரத்துடன் படுத்து விட்டார். பக்தர்கள் ஓடி வந்து கதறினார்கள், "சுவாமி! உங்களை நீங்களே குணப்படுத்திக்கக் கூடாதா? நீங்க இப்படி அவஸ்தைப்படுவதை எங்களால் பார்க்க முடியலையே!" என்று.

இதையும் படியுங்கள்:
பல்லி விழுந்த தோஷம் தீர்க்கும் சுகவனேஸ்வரர் திருக்கோயில்!
Arunai Jothi Sheshathri swamigal Avathara Thirunaal

1920ம் வருடம் ஜனவரி மாதம் 4ம் தேதி சேஷாத்ரி சுவாமிகள் தனது பூத உடலை நீத்தார். ரமண மகரிஷி முன்னின்று நடத்த,  ஒரு மகானுக்கு செய்ய வேண்டிய முறையில் குறைவின்றி பூஜைகள் நடைபெற்று மகா சமாதி நடைபெற்றது. அருணை ஜோதி அருணாசலேஸ்வரரோடு கலந்தது.

சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்கள் தங்களது பூத உடலை நீத்தாலும், என்றென்றும் சூட்சும ரூபத்தில் தங்கள் பக்தர்களுக்கு அளவற்ற அருள்புரிந்துகொண்டுதானிருப்பார்கள். அவரது அவதாரத் திருநாளான இன்று நாமும் அவரை வணங்கி அவருடைய அருளாசியைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com