சேலத்தில் உள்ள அருள்மிகு சுகவனேஸ்வரர் கோயில் 13ம் நூற்றாண்டில் மாமன்னன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல இறைவனை வழிபட்டு தவம் செய்த திருத்தலம். இந்த சிவாலயம் கிளி கொஞ்சும் வனமாக இருந்ததாலும் கிளிமுக சுகமுனி தவமியற்றி வழிபட்ட இடமாய் இங்குள்ள இறைவன் சுகவனேஸ்வரர் எனப்படுகிறார்.
பிரம்மன் தனது படைப்புத் தொழிலைப் பற்றி முனிவரிடம் விளக்க, அதனைக் கேட்டுக் கொண்டிருந்த சுகமுனி அதை சரஸ்வதி தேவியிடம் அப்படியே சொல்லிவிட்டார். பிரம்மன் அதனால் அவரை கிளி முகனாக சபிக்கிறார். இதனால்தான் சொன்னதைச் சொல்கிறது கிளி. சாபம் பெற்ற சுக முனிவர் இத்தலம் வந்து தவமியற்றுகிறார்.
ஒரு நாள் கிளி வேட்டைக்கு வந்த வேடன் ஒருவன் கிளிகளைப் பிடிக்க வந்தபோது அனைத்தும் ஒரு புற்றில் பதுங்க, வேடனும் விடாமல் புற்றை இடிக்கிறான். புற்றினுள் சிவலிங்கம் இருக்கிறது. அது உடையாமல் காக்க கிளி வடிவில் இருந்த சுக முனி தனது இறக்கையால் அதைப் போர்த்திப் பாதுகாக்கிறார். வேடன் வெட்டியதால் கிளியின் இறக்கையில் இருந்து இரத்தம் கசிந்து லிங்கத்தின் மேல் விழ, பெருமான் சுக முனிவருக்கு பாவ நிவர்த்தி தந்து அருள்பாலிக்கிறார். கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் மூன்று நிலை கோபுரங்கள் உள்ளன. கோபுரத்தைத் தாண்டியதும் முதல் சன்னிதியாக அம்பிகை தெற்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறாள். அதைத் தொடர்ந்து மகா மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியை தரிசிக்கலாம். நந்தியின் பின்புறம் பித்தளை கவசமிடப்பட்ட கொடிமரம் உள்ளது.
கருவறையின் உள்ளே கம்பீரமாய் ஆளுயரத்தில் பெருத்த பாணத்துடன் சதுர ஆவுடைக் கொண்டு சுகவனேசுவரர் அருள்பாலிக்கிறார். தென்மேற்கில் இரட்டை விநாயகரும், வடமேற்கில் முருகனும் தனிச் சன்னிதி கொண்டுள்ளார். இறைவன், இறைவி சன்னிதி இடையில் அமண்டூக தீர்த்தம் எனும் கிணறு உள்ளது. இதில் தவளைகள் வசிப்பதில்லை என்பதால் இப்பெயர். சிவபெருமானை கிளி முகம் கொண்ட சுக முனிவர் வழிபாடு செய்தால் இவருக்கு சுகவனேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. இக்கோயிலில் உள்ள அம்பிகையின் திருநாமம் சொர்ணாம்பிகை.
இந்தக் கோயிலில் ராகு, செவ்வாய் இருவரும் நவகிரக மண்டலத்தில் இடம் மாறி உள்ளனர். இவர்களை வழிபட நல்ல வரனும் உத்தியோகமும் கைகூடும். இந்த சன்னிதியின் மேல் தளத்தில் பல்லி, உடும்பு உருவங்கள் உள்ளன. இவற்றை வணங்க பல்லியால் ஏற்படும் தோஷம் நிவர்த்தி பெறும். பல்லி விழும் உபாதைகள் விலக இத்தலத்தில் வழிபடுதல் நல்லது.
கருவறையில் மூலவர் லிங்கம் ஒரு பக்கம் சாய்வாக அமைந்துள்ளது. முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு காணப்படுகிறது. ஆவுடையார் பிற்பாகம் இரண்டு பிரிவாகவும் விஷ்ணு பாகம், சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இது மற்ற சிவ தலங்களில் காண முடியாத ஒன்று. இந்தக் கோயிலின் தல விருட்சம் பாதிரி மரம் ஆகும்.
இந்தத் தலத்தில் உள்ள விகட சக்கர விநாயகருக்கு மாலை, தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்ட உபாதைகள் நீங்கும். கோயிலின் மேற்கு பிராகாரத்தில் இரட்டை விநாயகர் சன்னிதியின் பின்னால் சாஸ்தா யானை பீடத்தின் மேல் ஒரு காலை மடித்தும் ஒரு காலை தொங்க விட்டும் அமர்ந்த கோலத்தில் அருள் செய்கிறார். இவரை வணங்குவதால் வாதம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் ஏற்படும் உபாதைகள் நீங்கும். இவருக்கு செய்யப்பட்ட பாலாபிஷேக தீர்த்தம் நரம்பு தொடர்புடைய பிரச்னைகளுக்கு அருமருந்து. சுவாமிக்கும் அம்பாளுக்கும் வேஷ்டி, சேலை வாங்கி படைப்பது, மஞ்சள் காப்பு, சந்தன காப்பு, பஞ்சாமிர்தாபிஷேகம், பாலபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.