அருணாசலத்துடன் ஐக்கியமான அருணை ஜோதி!

ஜனவரி 4, சேஷாத்ரி சுவாமிகள் மகாசமாதி தினம்
Sri Sheshathri Swamigal Mahasamathi day
Sri Sheshathri Swamigal
Published on

பொதுவாக, ஞானிகள் என்றாலே அவர்களுக்கு வீடு வாசல் கிடையாது. குடும்பம், உறவு போன்ற பந்தங்களும் கிடையாது. சொல்லப்போனால் அவர்கள் தங்களுக்கு தேகம் என்று இருக்கிறது என்கிற உணர்வே இல்லாமல் பரதேசியை போலத் திரியக்கூடியவர்கள். நினைத்த இடத்தில் படுத்து, கிடைத்ததை உண்டு வாழ்நாளைக் கழிக்கக் கூடியவர்கள். பல நாட்கள் ஊண், உறக்கமின்றியும் இருப்பார்கள். அவர்கள் ஆத்மா எப்போதும் இறை நிலையோடு தொடர்பில் இருக்கும். சேஷாத்ரி சுவாமிகள் தனது பக்தர்களை ஆன்மிக நிலையில் உயர்த்த தன்னாலான முயற்சிகள் யாவும் எடுத்தார். நம் தேகத்தை மறந்து விட்டால் நமக்கும் இறைக்கும் எந்தவிதமான வேற்றுமையும் இல்லை என்று சொல்வார். அவருடைய வாழ்க்கையே எல்லோருக்கும் ஒரு உதாரணமாக இருக்கும்படி வாழ்ந்தார்.

நாற்பது ஆண்டுகளை திருவண்ணாமலையில் கழித்த சேஷாத்ரி சுவாமிகளுக்கு, தான் தனது தேகத்தை துறக்க வேண்டிய சமயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது.

இதையும் படியுங்கள்:
திருவாதிரை களி: வெறும் பிரசாதம் மட்டுமல்ல; 'ஆனந்தத்தின்' அடையாளம்!
Sri Sheshathri Swamigal Mahasamathi day

சில தினங்கள் கழிந்திருக்கும். சுவாமிகளின் பக்தர்களுக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை.  சுவாமிகளுக்கு முடி திருத்தி, முகச் சவரம் செய்து குளிப்பாட்டி, பளிச்சென்று அவரை அலங்கரித்து உட்கார வைத்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று. முகச் சவரத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய சுவாமிகள் குளிக்க வர மறுத்து விட்டார். அவர் உட்கார்ந்த இடத்திலேயே பன்னீர் பாட்டில்களை திறந்து அவர் தலையில் ஊற்றினார்கள்.

சுவாமிகள் மௌனமாக இருக்கவே பக்தர்களுக்கு குஷி பிறந்து விட்டது. அவர் உட்கார்ந்திருந்த சின்ன குருக்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீரைச் சேந்தி சேந்தி அவர் தலையில் விட்டு பக்திப் பரவசமாக அபிஷேகம் செய்தார்கள். சுவாமிகள் அபிஷேகத்தை ஏற்றுக் கொள்கிறார் என்று தெரிந்ததும் ஊரே திரண்டு வந்து கிணற்று நீரே காலியாகி விடும் போல அந்தக் கிணற்றிலிருந்து நீரை எடுத்து எடுத்து சுவாமிகள் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தது. பிறகு உடலை நன்றாகத் துடைத்து மாலையிட்டு, விபூதி பூசி போட்டோவும் எடுத்தார்கள்.

இதையும் படியுங்கள்:
திருஉத்தரகோசமங்கை கோவில்: ஜனவரி 2, மரகத நடராஜருக்கு சந்தனம் களையும் நிகழ்ச்சி...
Sri Sheshathri Swamigal Mahasamathi day

ஒருவழியாக ஜனங்கள் திருப்தியடைந்து கலைந்து சென்றபோது சுவாமிகளுக்கு குளிர் ஜுரம் வந்து விட்டது. ஆனால், அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நாற்பது நாட்கள் தனது உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் எப்போதும் போல ஊரில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்.

நாற்பத்தியோராம் நாள் கடைசியாக கோயிலுக்குப் போய் அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து விட்டு, தான் விருப்பமுடன் அதிக நேரம் கழிக்கும் கம்பத்து இளையனார் சன்னிதியில் வந்து  சிறிது நேரம் அமர்ந்தார். பிறகு உடல் உபாதை பொறுக்க முடியாமல் சின்னக் குருக்கள் வீட்டுத் திண்ணையிலேயே சுவாமிகள் வாட்டியெடுக்கும் ஜுரத்துடன் படுத்து விட்டார்.

இதையும் படியுங்கள்:
தினமும் 10 நிமிட பூஜை: உங்கள் வீட்டின் தலையெழுத்தையே மாற்றும்!
Sri Sheshathri Swamigal Mahasamathi day

1920ம் வருடம் ஜனவரி மாதம் நாலாம் தேதி சேஷாத்ரி சுவாமிகள் தனது பூத உடலை நீத்தார். ரமண மகரிஷி முன்னின்று நடத்த, ஒரு மகானுக்கு செய்ய வேண்டிய முறையில் குறைவின்றி பூஜைகள்  நடைபெற்று மகாசமாதி நடைபெற்றது. அருணை ஜோதி அருணாசலேஸ்வரரோடு கலந்தது. பக்தர்கள் தங்களுக்கு இனி யார் வழிகாட்டுவார் என்று எண்ணி ஏங்கிக் கதறினார்கள்.

சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்கள் தங்கள் பூத உடலை நீத்தாலும், என்றென்றும் சூட்சும ரூபத்தில் தங்கள் பக்தர்களுக்கு அளவற்ற அருள்புரிந்துகொண்டுதானிருப்பார்கள். 'சேஷத்ரி சுவாமிகள் திருவடிக்கே!' என்னும் பக்தர்களின் கோஷம் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டேதானிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com