திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் சகல தோஷ நிவர்த்திகளையும் தரும் சுயம்பு லிங்கங்கள் ஆகும். அஷ்ட லிங்கங்களையும் கண்டிப்பாக தரிசிக்க வேண்டும். கிரிவலப் பாதையில் சூரிய லிங்கமும் உண்டு. ஆனால், இந்த லிங்கம் அஷ்ட லிங்கங்களில் சேராது. இனி, அஷ்ட லிங்கங்கள் அள்ளித் தரும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இந்திர லிங்கம்: கிரிவலப் பாதையில் முதலில் தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம் இந்திரலிங்கம். இது கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இதனை வழிபடுவதால் செல்வம் செழிக்கும்.
அக்னி லிங்கம்: தென்கிழக்கு திசையில் வலது பக்கம் உள்ள இரண்டாவது லிங்கமே அக்னி லிங்கம். திருவண்ணாமலை செங்கம் சாலையில் தாமரை குளம் அருகே அமைந்துள்ள இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் நோய் பயம் நீங்கும்.
எமலிங்கம்: தெற்கு திசையில் உள்ள மூன்றாவது லிங்கம் எமலிங்கம். இந்த லிங்கம் அருகே சிம்ம தீர்த்தம் உள்ளது. கோபுர வாசலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும், பொருள் வளம் ஓங்கும்.
நிருதி லிங்கம்: தென்மேற்கு திசையில் உள்ள லிங்கம். இங்கிருந்து மலையை நோக்கினால் சிவனும் உமையும் இணைந்த தோற்றம் போல் ஒரு காட்சியைக் காண முடியும். இங்குள்ள தீர்த்தம் சனி தீர்த்தம். இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் ஏற்படும்.
வருண லிங்கம்: மேற்கு திசையில் உள்ள ஐந்தாவது லிங்கம். ராஜகோபுரத்தில் இருந்து எட்டாவது கிலோ மீட்டர் தூரத்தில் வருண தீர்த்தம் உள்ளது. இதனை வழிபாடு செய்தல் பிணிகள் அகலும்.
வாயு லிங்கம்: வடமேற்கு திசையில் அமைந்த ஆறாவது லிங்கம். இந்த லிங்கத்தை தரிசிப்பதால் எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
குபேர லிங்கம்: வடதிசையில் உள்ள குபேர லிங்கத்தை வழிபாடு செய்தால் குபேரனை போல செல்வங்களை குவிக்க முடியும். இது ஏழாவது லிங்கம். இந்த லிங்கத்தின் மீது பக்தர்கள் காசுகளை அள்ளி வீசக் காணலாம்.
ஈசான்ய லிங்கம்: வடக்கு திசையில் உள்ள எட்டாவது லிங்கம் ஈசான்ய லிங்கம். இதை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்குவது உறுதி. எட்டு லிங்க வழிபாட்டுடன் துர்கை அம்மன் ஆலயம், கற்பக விநாயகர் ஆலயம் என கிரிவலப் பாதையில் உள்ள ஐம்பத்தி நான்கு ஆலயங்களையும் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.