
அமாவாசை கழிந்த எட்டாவது நாள் வளர்பிறை அஷ்டமி எனப்படுகிறது. அதே போல பௌர்ணமி கழிந்த எட்டாம் நாள் தேய்பிறை அஷ்டமி எனப்படுகிறது. ஆனால் இதே அஷ்டமி திதியே புதன்கிழமையன்று வந்தால் அது புத அஷ்டமி என்று சிறப்பித்து கொண்டாடப்படுகிறது.
பொதுவாக தேய்பிறை அஷ்டமியன்று மாலை நேரத்தில் கால பைரவர் வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது. அன்று கால பைரவர் சன்னதி எதிரே விளக்கேற்றி வழிபடுவர்.
27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 மிளகை எடுத்து அதை ஒரு சிவப்பு துணியில் போட்டு கட்டி ஒரு அகலில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றுவார்கள். தற்போது தேங்காயை உடைத்து இரு மூடிகளிலும் திரி போட்டு நல்லெண்ணெய் ஊற்றியும் விளக்கேற்றுகிறார்கள். அதே போல பூசணிக்காயை இரண்டாக உடைத்து அதற்குள் திரி போட்டு விளக்கேற்றுவது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாமே திருஷ்டி போவதற்காக செய்யப்படும் வழிபாடு.
காலபைரவருக்கு அர்ச்சனை செய்து செவ்வரளி மாலை போட்டு, வடைமாலை சாற்றி வழிபடுவார்கள். அநேகமாக எல்லா சிவன் கோவில்களிலும் காலபைரவர் சன்னதி இருக்கும்.
ஆதி கால பைரவர் கோவில் என்னும் மிகப் பழமையான கோவில் காசியில் உள்ளது. சீர்காழி சிவன் கோவிலில் அஷ்ட பைரவர்களுக்கும் சன்னதி உள்ளது. புதன்கிழமைகளில் வரும் அஷ்டமி மிக விசேஷமானதாக விரதம் அனுஷ்டித்து வழிபடுகிறார்கள்.
அது வளர்பிறை அஷ்டமியாகவோ தேய்பிறை அஷ்டமியாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் புதன்கிழமை வந்தால் அதுவும் ஆனி மாத புதன்கிழமையன்று வந்தால் அன்று காலபைரவர் வழிபாடு செய்வது மிக விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
புதன்கிழமையும், அஷ்டமியும் சேரும் நாளன்று செய்யும் கால பைரவர் வழிபாடு நமக்கு அறிவாற்றலை பெருக்கி, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி நாம் மேன்மையடைய உதவும் என்று கருதப்படுகிறது.
அதுவும் ஆனி மாத புதன்கிழமையும் அஷ்டமி திதியும் சேரும் நாளன்று இந்த புத அஷ்டமி வழிபாடு செய்வது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. நடைபெறும் ஆனி மாதத்தில் நாளை 18.06.25 அன்று வரும் தேய்பிறை அஷ்டமி புதன் கிழமையன்று வருவதால் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றி, சிகப்பு அரளி மாலை சாற்றி, வடைமாலையும் போட்டு கால பைரவருக்கு வழிபாடு செய்வது வாழ்க்கையில் எல்லா திருஷ்டிகளும் கழிந்து சகல வளங்களோடு மேன்மையாக வாழும் பேற்றைக் கொடுக்கும்.