தகரம் தங்கமானது..!

young boy, old man and old lady
life lesson
Published on

வாங்க.., எல்லாருக்கும் வணக்கம்.. என்னோட பேரு ஹரிஷ். நான் செகண்ட் இயர் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். பத்து நாளைக்கு முன்னாடி தான் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டாங்க.. இப்போ நாங்க பிரண்ட்ஸா பட்டுக்கோட்டை பொருள்காட்சிக்கு போகலாம்னு பிளான் பண்ணி இருக்கோம்.. என்னோட பெஸ்ட் பிரெண்ட்ஸ்ன்னு பாத்தீங்கன்னா ஜியாவுல் ஹசன், கதிர் வேல், சக்தி குமார் தான்.. பொருள்காட்சிக்கு போகலாம்கிற பிளான்ன நான் தான் கொடுத்தேன். அதனாலே இன்னைக்கு பொருள்காட்சி போறதுக்காக நானு பஸ் ஸ்டாப்ல பஸ்காக வெயிட் பண்றேன்.

3:45-இக்கு பஸ் வருது, நானு பஸ்ஸில்ல ஏறிட்டேன். கரெக்டா அஞ்சு மணிக்கு பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட்ல இறங்குறேன். போன எடுத்து சக்திக்கு போன் பண்றேன். “ஹரிஷ் நாங்க இன்னமும் அதிராம்பட்டினத்தில்ல தா இருக்கோம்… ஜியாவுளு கதிர கூப்பிட  வீட்டுக்கு போயிருக்கான்.. இன்னும் கொஞ்ச நேரத்துல பஸ் ஏறிருவோம்..” அப்படின்னு சக்தி சொல்றான்.

என்னோட மூணு ஃப்ரெண்ட்சுக்கும் அதிராம்பட்டினம் தான் சொந்த ஊரு. என்னோட ஊரு மந்திரிப்பட்டினம். ஆனா காலேஜ் அதிராம்பட்டினத்தில் தான் இருக்குது. எங்க காலேஜ்யோட பேரு வந்து “காதிர் முகைதீன் கல்லூரி” ஐயோ.. சாரி இப்ப நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன் பாருங்க..!

அதான் நான் மட்டும் தனியா பஸ் ஸ்டாண்ட்ல நிக்கிறேன்.. அப்படியே பக்கத்துல டீ கடைக்கு போய் ஒரு காபிய குடிச்சேன்.. கொஞ்ச நேரம் போன பாத்தேன், பஸ் போறதையும் வர்றதையும் வேடிக்கை பாத்தேன்.. மணி 5:25 ஆச்சு, மறுபடியும் சக்திக்கு போன் போட்டேன்.. பஸ்ல வந்துகிட்டு இருக்கோம்டா ஒரு 15 நிமிஷத்துல வந்துருவோம்ன்னு சக்தி சொன்னான்.. எனக்கு எரிச்சலா இருந்துச்சு. நானு அப்படியே பஸ் ஸ்டாண்டுக்கு முன்னாடி வந்தேன். ஒரு கடை மட்டும் பூட்டி கெடந்துச்சு. அந்தக் கடை வாசப்படியில போய் உக்காந்துட்டேன். ஒக்காந்து youtubeல ஷார்ட்ஸ் பாக்க ஆரம்பிச்சேன்..

இதையும் படியுங்கள்:
Expiry Date தெரியும், அது என்ன Shelf Life?
young boy, old man and old lady

எனக்கு 5 அடி தள்ளி ஒரு பிச்சைக்காரரும் உக்காந்திருந்தாரு.. பாக்குறதுக்கு அழுக்கா.. முடியும் தாடியும் அதிகமா..! சட்டையும் அழுக்கா இருந்துச்சு… நா அவர கண்டுக்காம செல்ல பாத்துகிட்டே இருந்தேன். அப்போ எனக்கு முன்னாடி ஒரு கார் வந்து நிக்குது. இதைப் பாத்த அந்த பிச்சைக்காரர் காசு கேட்க போறார். காரில் உள்ளவர் காசு போடல. அதுக்கப்பறம் அந்த பிச்சைக்காரர் கொஞ்சம் தள்ளி போயிட்டாரு.. அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு பாட்டி கட்டப்பையை தூக்கிக்கிட்டு என்னோட பக்கத்துல வந்து உட்கார்றாங்க. நானுமே அவங்கள கண்டுக்காம செல்லையே பார்த்துக்கிட்டு இருக்கேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பாட்டியும் கட்டப்பைய எடுத்துக்கிட்டு கிளம்பிருச்சு.

வானம் வேற லேசா மேக மூட்டமா இருந்துச்சு..! ‘மழ மட்டும் பேஞ்சா தலையில துண்டு தான்..!’ அப்படின்னு நானே மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன். அப்போ தள்ளிப்போன அந்த பிச்சைக்காரர் மறுபடியும் என்னோட பக்கத்துல வந்து கையில கம்ப வச்சிக்கிட்டு என் முன்னாடி வந்து எதையோ காட்டுறது போல கம்ப ஆட்டிக்கிட்டு இருந்தாரு.. நானுமே கண்டுக்காம செல்ல தான் பாத்துக்கிட்டு இருந்தேன். ‘பாவம்..மனநிலை சேரி இல்ல போல..’அப்படின்னு நானே நெனைச்சுகிட்டேன்.. எதுக்குடா இவர்ரு கம்ப வச்சு ஆட்டிகிட்டு இருக்கார்னு பாத்தா.. என்னோட வலது பக்கத்துல ஒரு போன் இருந்துச்சு.! எனக்கு இதைப் பாத்து தூக்கி வரி போட்டுருச்சு..

இதையும் படியுங்கள்:
பொறுமைக்கு பெயர் பெற்ற 'கழுதை'யிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம்!
young boy, old man and old lady

‘யாரோட போனா இருக்கும்’ அப்படின்னு நினைக்கிறதுக்குள்ளயுமே அந்தப் பாட்டி வேகமா ஓடி வந்து என்னோட பக்கத்துல வாராங்க. நானுமே அந்த போன கையில்ல எடுத்து எந்திரிச்சு அந்த பாட்டி கையில கொடுத்துட்டேன். அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு ஓஹோ நம்ம பக்கத்துல உட்கார்ந்திருந்த இந்த பாட்டி தான் போன தவற விட்டுருப்பாங்கன்னு நெனச்சேன்..! பக்கத்தில் இருந்த அந்த பிச்சைக்காரர் சிரிச்சுக்கிட்டே தலையை சொறிஞ்சுகிட்டு கம்ப கீழ தட்டிக்கிட்டு என் பக்கத்துல வந்து உட்காருகிறார்.. எனக்கு கொஞ்ச நேரம் முகம் செத்துப் போனது. ‘ச்ச..இவர போய் தப்பா நெனைச்சிட்டோமே…!’ அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.

போனை கையில் வாங்கும் போது அந்த பாட்டிக்கு கண்களில் எவ்வளவு சந்தோஷம் இருந்ததோ.. அதைவிட இரண்டு மடங்கு சிரிப்பையும் சந்தோஷத்தையும் அந்த பிச்சைக்காரர் இல்லை.. இல்லை.. அந்த மாமனிதரின் கண்களில் பார்க்க முடிந்தது. என்னுடைய மனம் தாங்காமல், அந்த மாமனிதருக்கு இணையாக உட்கார முடியாமல் எழுந்து அந்த இடத்தை விட்டு போய் விட்டேன்..! சிறிது நேரம் கழித்து எனது நண்பர்களும் வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து பொருள்காட்சி நடைபெறும் இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பொருள்காட்சியில் நண்பர்களுடன் சந்தோஷமாக விளையாடி கொண்டாடி தீர்த்துவிட்டு, பஸ் ஏறி வீட்டுக்கு வருகிறேன். மறுநாள் காலையில் அம்மாவிடம் இதைப்பற்றி கூறுகிறேன். அதுக்கு அம்மா, “ஹரிஷ்சு என்னைக்குமே ஒருத்தவங்கள ஆள பாத்து எடப் போடக்கூடாது.. கொஞ்ச நேரத்துல தகரம்னு நினைச்ச பொருள்ளு தங்கமா மாறிடுச்சு பாத்தியா… இதுதாண்டா வாழ்க்க!” ன்னு சொல்ல ...

இதைக் கேட்டு என் மரமண்டைக்குள் யாரோ எட்டி உதைத்தது போல் நல்லா உரைத்தது..!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com