
மனிதன் பிறந்த உடனே இரண்டு கருத்துக்கள் பிறந்து விட்டன. ஒன்று “கடவுள் இருக்கிறார்”. மற்றொன்று “கடவுள் இல்லை” என்பது.
நாத்திகம் என்பது அந்த நாளிலேயே இருந்தது. ஆனால் கடவுளை நம்பியவர்கள் தான் அதிகம். கம்யூனிஸ்டுகள் தான் நாத்திகத்தை வளர்த்தார்கள். ஆனால் அதை பிராச்சாரமாக செய்யவில்லை. அவர்களுக்கு புரட்சி தான் குறி. புரட்சி முடிந்த ரஷ்யா மற்றும் சீனாவில் மீண்டும் ஆன்மீகம் வளர்ந்தது. இடிக்கப்பட்ட சர்ச் எல்லாம் மீண்டும் கட்டப்பட்டது. சீனா ஒரு படி மேலே போய் அரசியல் சாசனத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கு உத்திரவாதம் செய்தது.
இங்கு ஒரு விஷயம் முக்கியமானதாக உள்ளது. உளவியல் தந்தை சிக்மண்ட் ஃப்ராய்டு ஒரு கருத்தை அழுத்தம் திருத்தமாக சொன்னார். மனித வாழ்வில் மரணம் என்ற ஒன்று உள்ள வரை கடவுள் நம்பிக்கை போகாது. இந்த கருத்து மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கருத்துக்கு மாறானது.
இதை பற்றி யாரும் பேசுவது இல்லை. ஒன்றும் இல்லாததிலிருந்து ஒன்றும் தோன்ற முடியாது. ஏதாவது ஒன்று படைக்கப்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு சக்தி வேண்டும்.
இங்கு கணக்கை எடுத்துக் கொள்வோம். இது ஒரு அருவ பாடம். அதாவது மனிதனின் அற்புதமான கண்டுப்பிடிப்பு. மற்ற எல்லா விஞ்ஞான பாடங்களும் வெளி உலகை பற்றி படிப்பது. கணக்கு அப்படி இல்லை. கணக்கில் வெளியே இருப்பது எதுவும் இல்லை.
கணக்கு “Mother of all Sciences”. அதிலும் பிரம்மகுப்தா கண்டுப்பிடித்த, ஆர்யபட்டா தன் ஆய்வில் புகுத்திய “பூஜ்யம்” ஒரு மிகப்பெரிய சாதனை. பூஜ்யம் இல்லாமல் உயர் கணிதம் இல்லை. எல்லா தொழில்களும் பூஜ்யம் இருக்கும் கணக்கு தான் காரணம். மிக துல்லியமாக சூரிய, சந்திரன், கிரகணம், பூமி சுழற்சி போன்று பல்வேறு விஞ்ஞான உண்மைகள் கணக்கு இல்லாமல் இல்லை.
இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எல்லா விஞ்ஞான கருத்துக்களும் கணக்கில் இருந்து தான் தோன்றுகின்றன. இது ஒரு அருவம். உண்மை.
அதேபோல் இந்த பிரபஞ்சம் உருவாவதற்கும் காரணம் உண்டு.
ஆம். அதுவும் அருவம்.
ஆம். அது தான் கடவுள்.
கடவுள் நம்பிக்கை என்பது எதிர்மறை அல்ல.
பல்வேறு பிரபஞ்சங்கள் தானாக தோன்றியது அல்ல. “பிக் பேங்க்” (Big Bang) என்பது உண்மையே. ஆனால் பெரும் வெடிப்பு என்பது ஏன் நடக்க வேண்டும்…? பெரும் வெடிப்பிற்கு முன்னே பொருள் இருந்தது என்பது நிஜம். உண்மை. யதார்த்தம். ஆனால் ஏதாவது ஒன்று தோன்ற ஏதாவது ஒரு பொருள் இருக்க வேண்டும் என்பது பாதி உண்மை மட்டுமே. கடவுள் நித்யமானவர். சர்வ வியாபி.