
ஒரு முறை கென்னத் ஆண்டர்சன் தன்னை பார்க்க வந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த கணவன் மனைவி ஜோடியை நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளை சுற்றி காட்ட அழைத்து போனார். அப்போது காட்டின் நடுவே பாழடைந்த ஒரு கோவிலுக்கு போக நேர்ந்தது. அது ஒரு சிவன் கோயில். அதனுள் இருந்த நந்தி சிலைக்கருகில் இருந்த ஒரு வெண்கல விளக்கின்மேல் ஆஸ்திரேலிய ஆசாமியின் பார்வை விழுந்தது.
யாரும் இல்லாத அனாதை கோவில் தானே என்ற எண்ணத்தில் அந்த விளக்கை எடுத்து தன் பையில் வைத்து கொண்டார். இதை பார்த்த ஆண்டர்சன் "நீங்கள் செய்வது தவறு; விளக்கை அது இருந்த இடத்தில் வைத்துவிடுங்கள்," என்று கூறினார். இதையே அந்த ஆசாமியின் மனைவியும் வற்புறுத்தினார். ஆனால் அந்த ஆஸ்திரேலிய ஆசாமி கேட்கவில்லை. "இதை நான் திருடவில்லை. இங்கு வந்ததன் நினைவாகத்தான் எடுத்து போக விரும்புகிறேன்" என்று அடம்பிடித்து எடுத்து கொண்டு ஊட்டிக்கு போய்விட்டார்.
இது நடந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் ஆண்டர்சன் ஊட்டி செல்லும் நெடுஞ்சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகில் ஒரு வாடகை கார் வந்து நின்றது.
அதன் பின் சீட்டில் விளக்கை எடுத்து போன ஆஸ்திரேலிய ஆசாமி கம்பளி போர்த்தியவாறு படுத்திருந்தார். முன் சீட்டில் அமர்ந்திருந்த அவரது மனைவியிடம் "என்ன ஆயிற்று உங்கள் கணவருக்கு?" என்று கேட்க, அதற்கு அவர் "அன்று நாங்கள் ஊட்டிக்கு திரும்பின இரவே இவருக்கு ஜுரம் வந்து விட்டது. 104 டிகிரியைத் தாண்டி பிதற்ற ஆரம்பித்து விட்டார். ஆஸ்பத்திரிக்கு போனோம். பிரயோஜனம் இல்லை. ஜுரம் இறங்கவே இல்லை. அப்போதுதான் அவருக்கு தான் எடுத்து வந்த விளக்கின் ஞாபகம் வந்தது. செய்த தவறுக்குத்தான் தான் அவதியுறுவதை உணர்ந்தார்.
'நான் உடனே அந்த பாழடைந்த கோயிலுக்கு போய் விளக்கை அது இருந்த இடத்தில் வைக்க வேண்டும். அப்படி செய்யாவிடில் நான் இறப்பது நிச்சயம் என்று அழ ஆரம்பித்து விட்டார்.' உங்களை தேடி தான் இங்கு வந்திருக்கிறோம். தயவு செய்து அந்த கோவிலுக்கு எங்களை கூட்டி போகவும்."
ஆண்டர்சன் காரில் ஏறி அமர்ந்து கோயில் இருக்கும் இடத்திற்கு டிரைவருக்கு வழி காட்டினார். கோயில் வரை கார் போக முடியாததால் தானும் அவரது மனைவியும் விளக்கை கொண்டு சேர்ப்பதாக கூறினார். அந்த ஆஸ்திரேலிய ஆசாமி தானே விளக்கை கொண்டு போய் கோயிலுக்குள் வைக்க வேண்டும் என்று அடம் பிடித்தார்.
அவருக்கு இருக்கும் உடல் நிலையில் அது சாத்தியம் இல்லை என்று புரிய வைத்து விளக்கை எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றனர் ஆண்டெர்சனும் ஆஸ்திரேலியரின் மனைவியும்.
விளக்கை பவ்யமாக அது இருந்த இடத்தில் வைத்து தன் கணவரை மன்னிக்குமாறு அழுதபடி வேண்டினார் அந்த ஆஸ்திரேலிய பெண். பின்னர் இருவரும் தூரத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த காரை வந்தடைந்தனர். காரில் படுத்திருந்த தன் கணவரின் நெற்றியை தொட்டு பார்த்த மனைவிக்கு ஆச்சரியம். ஜுரம் விட்டு ஜில்லென்று ஆகிவிட்டிருந்தது அவர் உடல். ஜுரம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டிருந்தது.
இதை தன் உண்மை அனுபவம் என்று அடித்துக் கூறுகிறார் ஆண்டர்சன்.