சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு?

Tirupati Perumal, Sani bhagavan
Tirupati Perumal, Sani bhagavan
Published on

பெருமாளுக்கு மிக உகந்த தினமாக சனிக்கிழமைகள் அனுசரிக்கப்படுகின்றன. சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் அப்படி என்னதான் தொடர்பு என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

சூரியனுக்கு சஞ்சனா, சாயா என்ற இரண்டு மனைவியர் உண்டு. சூரியனுக்கும் சஞ்சனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்மராஜாவும், யமுனாவும். சாயாவுக்கும் சூரியனுக்கும் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்க அனைத்து தேவர்களும் யமுனையைப் போற்றத் துவங்கினார்கள்.

அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, "சகோதரியே எல்லோரும் என்னை முடவன் என்கிறார்கள்‌. உன்னை மங்கலமானவள் எனக் கொண்டாடுகிறார்கள். உன்னைப் போல் ஆக நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்க, அங்கே வந்த நாரதர், "சனீஸ்வரா, யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்கலகரமாக ஆனாள். நீயும்  கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்கலமாகி விடுவாய்" என்றார்.

இதையும் படியுங்கள்:
விஷ சிலையின் மீது வைக்கும் பொருள் மருந்தாகும் அதிசயம்!
Tirupati Perumal, Sani bhagavan

“அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்” என சனீஸ்வரன் கேட்க, நாரதர் "ஹோலிகா என்று இரணியனுக்கு சகோதரி ஒருத்தி உண்டு. அவளுக்கு தீ சுடாது என்ற விசேஷ தன்மை உண்டு. பிரகலாதனை பலவிதமாக தண்டித்தும்‌ பலனில்லாமல் போக, அவனை ஹோலிகாவிடம் இரணியன் ஒப்படைத்தான். பிரகலாதனை தீயில் தள்ளிய ஹோலிகா தானும் தீயில் விழுந்து அவனை வெளியே வர விடாமல் அழுத்த, நரசிம்ம பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்தார்.  ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாள்தான் ஹோலியாக கொண்டாடப்படுகிறது. பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லவில்லை.  ஆனால், திருமாலை பழிவாங்கத்  துடிக்கிறாள் ஹோலிகா.

கண்ணனாக அவர் அவதரித்தபோது கோகுலம் வந்தாள் ஹோலிகா. கண்ணனையும் அவன் தோழர்களையும் பழி வாங்கத்  திட்டம் தீட்டுகிறாள். அதனால் நீ ஹோலிகாவை எரித்து சாம்பலாக்கி விட்டால் நீயும் மங்கலகரமாக ஆகி விடுவாய்” என்கிறார் நாரதர்.

ஹோலி பண்டிகையன்று கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி  நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் நாமங்களைப் பாடி ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்துக் கொண்டாடினர்.  அதற்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள்‌. தீ மூட்டியதும் கண்ணனையும் அவனது தோழர்களையும்  உள்ளே இழுக்கத் திட்டமிட்டாள்.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானே காதில் ‘நமசிவாய’ மந்திரம் சொல்லி முக்தி தரும் திருத்தலம் தெரியுமா?
Tirupati Perumal, Sani bhagavan

ஹோலிகா மீது சனீஸ்வரன் தனது பார்வையை செலுத்தினான். ஹோலிகா சக்தி அனைத்தும் இழந்து மூட்டிய தீயில் எரிந்து சாம்பலானாள். நாரதர் இந்த விஷயத்தை கண்ணனிடம் கூற, கண்ணன் மகிழ்ந்து, "சனீஸ்வரா, நீயும் இனி மங்கலகரமாகத்  திகழ்வாய். உனக்கு உகந்த சனிக்கிழமையில் விடியற்காலை வேளை மங்கலகரமாகக் கருதப்படும்.

கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாகத் தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்" என்று வரமளித்தார். அதனால்தான், ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமை விடியற்காலை வேளை மங்கலகரமானதாகவும் அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com