அம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதம் நிறைவடைந்து முழுமுதற் கடவுளாகிய விநாயகரையும், காக்கும் கடவுளான திருமாலையும், உலகிற்கே தந்தையாக விளங்கும் சிவனையும், வழிபடுவதற்கு ஏற்ற மாதமான ஆவணி பிறந்து விட்டது. ஆவணி மாதம் விநாயகரும், கிருஷ்ணரும் அவதரித்த மாதமாகும்.
ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடிவரும். ஆவணியில் அத்தனை நாட்களும் மங்கல நாட்களே என்பது ஆன்றோர் வாக்கு.
ஆவணி மாதமானது சிங்க மாதம் என்றும், மாதங்களின் அரசன் என்றும், சிறப்புடன் அழைக்கப்படுகிறது. அற்புதங்கள் நிறைந்த இந்த மாதத்தில் வரும் விசேஷ நாட்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
விநாயகர் சதுர்த்தி: விநாயக பெருமாள் அவதரித்த தினம் ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது. 2024ல் ஆவணி _22 (செப்டம்பர்_7).
அன்றைய தினம் விநாயகருக்கு சர்க்கரை பொங்கல், மோதகம், அவல், பொரி, சுண்டல், அப்பம், கொழுக்கட்டை, ஆகியவை நைவேத்தியம் படைத்து அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவது சிறப்பானது. இந்த நாளில் சதுர்த்தி விரதம் கடை பிடித்தால், செல்வ செழிப்பு, காரிய வெற்றி, புத்தி கூர்மை, குழந்தை பேறு, தொழில் வளம், உடல் ஆரோக்கியம், ஆகியவை பெருகும்.
மஹா சங்கடஹர சதுர்த்தி: ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சங்கடஹர சதுர்த்தி மஹா சங்கடஹர சதுர்த்தி. 2024ல் ஆவணி_6 (ஆகஸ்ட்_22)
இந்த விரதத்தின் போது பகல் முழுவதும் உண்ணாமல் மாலை வேளையில் விநாயகர் வழிபாடும், சந்திர தரிசனமும், செய்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழிபாடு அனைத்து துன்பங்களையும் நீக்கி சௌபாக்ய வாழ்வு தரக்கூடியது.
கிருஷ்ண ஜெயந்தி: இறைவனை குழந்தைப் பருவமாக பாவித்து வழிபடுவதில் முதலிடம் கிருஷ்ணனுக்கு தான். ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திர நாளில்தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறோம். 2024ல் ஆவணி_10 (ஆகஸ்ட்_26)
அன்றைய தினம் கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணெய், இனிப்பு சீடை, முறுக்கு, அதிரசம், அவல், தட்டை, தேன்குழல், பாதாம், முந்திரி, கிஸ்மிஸ், பழவகைகள், ஆகியவற்றை படைத்து வழிபடலாம். சிறு குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடமிட்டும் வீடுகளில் கிருஷ்ணரின் பாதம் வரைந்தும் கிருஷ்ணரை வீட்டிற்கு அழைக்கும் வழக்கம் உண்டு. இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவோணம்: ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணப்பண்டிகை கேரளாவிலும், தென்தமிழகத்திலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 2024ல் ஆவணி_ 30 (செப்டம்பர் _15)
அந்தப்பூ கோலம், ஓணம் விருந்து, ஆகியன இந்த பண்டிகையின் சிறப்பு ஆகும். அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஓணப்பண்டிகை கேரளாவில் புத்தாண்டு, தீபாவளி, அறுவடைதிருநாள் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
ஆவணி அவிட்டம்: ஆவணி மாதத்தில் வரும் அவிட்டம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. 2024ல் ஆவணி_3 (ஆகஸ்ட்_19) . இந்த நாளில் உபநயனம் பெற்றவர்கள் பூணூலை மாற்றி கொள்கிறார்கள். வேதங்களை படிக்க துவங்குவதற்கும் இது நல்ல நாளாகும்.
காயத்ரி ஜெபம்: 2024ல் ஆவணி_4 (ஆகஸ்ட் _20) காயத்ரி ஜெபத்தை ஜபித்து பின் பூணூல் போடுவார்கள். பூணூல் அணிவிக்கும் போது 'ஓம் பூர்வ, சுவாஹ, தத் ஸவிதுர் வரோண்யம் பர்கோ தேவர் தீமஹி தியோ யோந, ப்ரசோத யாத்' என்ற காயத்ரி ஜெபத்தை மூன்று வேளை கை மேல் அங்கவஸ்திரத்தால் முடியப் படி 108 அல்லது 1008 முறை ஜபித்து வந்தால் நம் பாவங்கள் அனைத்தும் விலகி விடும் என்பது ஐதீகம்.