

செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அந்த தொழிலை வணங்கவேண்டிய தினம்தான் ஆயுதபூஜை. ஆயுத பூஜை என்பது நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாளில் (மகா நவமி) கொண்டாடப்படும் முக்கியமான வழிபாடாகும். இக்காலகட்டத்தில் கல்வி, தொழில் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் கருவிகளை வழிபடும் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது.
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இதனாலேயே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் கல்வி மற்றும் தொழிலுக்கான கருவிகளுக்கு நன்றி செலுத்தும் இந்த உன்னதமான நாள், நம் உழைப்பையும் அறிவையும் போற்றும் ஒரு அற்புதமான விழாவாகும். இதை நினைவுபடுத்தும் விதமாகவே ஆயுத பூஜை அன்று நமது அன்றாட வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்த உதவும் கல்வி மற்றும் தொழிலுக்குப் பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக வழிபாடு செய்யவேண்டும்.
பழங்காலத்தில் போர் வீரர்கள் போருக்குச் செல்வதற்கு முன்பாக தங்கள் ஆயுதங்களை இறைவனுக்கு முன் வைத்து வழிபட்ட மரபே, காலப்போக்கில் தொழிலாளர்கள் தங்கள் தொழில் கருவிகளை வழிபடும் ஆயுத பூஜையாக மாறியது.
ஒரு சிறிய ஊசி முதல் மாபெரும் இயந்திரம் வரை அனைத்திலும் இறைவனின் அம்சம் உள்ளது என்ற நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. உழைப்பின் மேன்மையை உணர்த்தும் இந்தப் பண்டிகை, தொழிலாளர் மற்றும் கருவிகளுக்கு இடையேயான ஆன்மீக பிணைப்பை வெளிப்படுத்தும் உன்னதமான நிகழ்வாகும்.
ஒருவர் தன்னிடம் உள்ள பொருட்களுக்கு மரியாதை செலுத்தும்போது, அது அவரைப் பிரபஞ்சத்துடன் நல்லிணக்கத்திற்குக் கொண்டு வருகிறது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில், பாண்டவர்கள் தங்கள் 12 வருட வனவாசம் மற்றும் ஓராண்டு அஞ்ஞாத வாசத்தை (மறைந்து வாழ்தல்) முடித்துக்கொண்டு, வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்த தங்கள் ஆயுதங்களை மீண்டும் எடுத்து வழிபட்ட நாளாகவும் இது கருதப்படுகிறது.
பொதுவாக தமிழ்நாட்டில் ஆயுத பூஜை அன்று தொழிற்சாலைகள், கடைகள், பட்டறைகள், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு (2026) ஆயுத பூஜை வரும் அக்டோபர் 19-ம்தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை தேதி மற்றும் விவரங்கள் :
தேதி: அக்டோபர் 19 திங்கள் கிழமை (ஐப்பசி 2) மற்றும் அக்டோபர் 20-ம்தேதி (செவ்வாய்) (பெரும்பாலான காலண்டர்களின்படி அக்டோபர் 19 மகா நவமி நாளாகும்).
நவமி திதி தொடக்கம்: அக்டோபர் 19-ம்தேதி காலை 10:52 மணிக்கு தொடங்குகிறது.
நவமி திதி முடிவு: அக்டோபர் 20-ம்தேதி மதியம் 12:52 மணிக்கு முடிகிறது.
பூஜை செய்ய உகந்த நல்ல நேரம் :
விஜய முஹூர்த்தம்: விஜய முஹூர்த்தம் (சிறந்த நேரம்): அக்டோபர் 19-ம்தேதி, பிற்பகல் 01:59 மணி முதல் 02:45 மணி வரை (அல்லது நண்பகல் 02:01 மணி முதல் 02:47 மணி வரை).
பொதுவான நேரங்கள்: நவமி திதி முடிவதற்குள், அதாவது திங்கள் கிழமை காலை அல்லது அடுத்த நாள் மதியம் 12:52 மணிக்குள் உள்ள நல்ல நேரத்தில் தொழில் கருவிகள், கணக்கு ஏடுகள் மற்றும் வாகனங்களை வைத்து பூஜை செய்யலாம்.
அன்றைய தினம் வீட்டின் பூஜையறையில் புத்தங்கள், பேனாக்கள் மற்றும் வீட்டு உபயோக்கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் போன்றவற்றிலும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும். தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலுக்குரிய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.
அதாவது நீங்க எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அதற்கு உதவும் கருவி அல்லது பொருளை சுத்தம் செய்து சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து பூ வைத்து வணங்க வேண்டும். பஸ், லாரி, ஆட்டோ ஓட்டுபவர்கள் உங்கள் வாகனத்தில் சந்தனத்தை கரைத்து வாகனம் முழுவதும் தெளித்துவிடலாம்.
அனைத்து பொருட்களுக்குமே சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்த பின்பு நெய்வேத்தியம் செய்வதற்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், சுண்டல், வடை, பாயாசம் மற்றும் பல வகையான பழங்களை படைத்து சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி தேவியை வணங்கி வழிபட வேண்டும்.