அழகர் மலையின் அதிசய நாவல் மரம் தெரியுமா?

அழகர்மலை நாவல் மரம்
அழகர்மலை நாவல் மரம்

ழகர் மலை என்பது மதுரைக்கு வடக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்கு திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபத்ரி அல்லது இடப கிரி முதலிய பல பெயர்கள் உண்டு. பல சிறிய மலைகள் நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில்தான் அழகர் கோயில் உள்ளது.

இம்மலையில் பல வகை மரங்களும் செடிகளும் கொடிகளும் மிகவும் நெருக்கமாக வளர்ந்து பச்சை பசேல் என கண்ணுக்குக் குளிர்ச்சியாகக் காட்சி அளிக்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதை சோலைமலை, திருமாலிருஞ்சோலை போன்ற பெயர்களால் அழைக்கிறார்கள். இச்சோலைகளில் பூக்களும் காய்களும் கனிகளும் கண்ணுக்கும் மனத்திற்கும் இன்பமூட்டுகிறது.

தமிழ் கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயில் மதுரையில் இருப்பது போல அழகர் மலையிலும் பழமுதிர்சோலை என்ற மற்றொரு படை வீடு உள்ளது அழகர் மலையில் அருளும் முருகனை தரிசிக்க வேண்டும் என்றே மலையேறி கோயிலுக்கு வருபவர்கள் பல பேர் உண்டு. இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே நாவல் மரம் ஒன்று உள்ளது. இந்த நாவல் மரத்திற்கு புராணக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. ஔவையார் பற்றி நாம் அனைவருமே அறிவோம். ஔவையார் தம் புலமையால் அறக்கருத்துக்களை பரப்ப ஊர் ஊராய் சென்று வந்தார். அப்படி ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சென்ற பொழுது ஓர் அடந்த காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.

வெயிலில் நடந்து வந்த களைப்பில் ஔவையார் ஒரு நாவல் மரத்தடியில் சிறிது நேரம் உட்கார்ந்து ஓய்வு எடுத்தாராம். அப்பொழுது மரத்தின் மேல் இருந்து ஒரு குரல் வந்தது. அந்தக் குரல் ஆடு மேய்க்கும் ஒரு சிறுவனின் குரல். “பாட்டி பார்ப்பதற்கு மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே, நாவல் பழம் சாப்பிடுகிறீர்களா?” என்று அந்த சிறுவன் கேட்டானாம்.

நிமிர்ந்து மரத்தின் மேல் பார்த்த ஔவையார் அந்தச் சிறுவனை சாதாரணமாக எண்ணிக்கொண்டு, “ஆமாம்பா, பசியாகத்தான் உள்ளது. நாவல் பழங்களைப் பறித்து போடு” என்றாராம் ஔவையின் தமிழ் புலமையோடு விளையாட நினைத்த அச்சிறுவன், “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டானாம்.

இதையும் படியுங்கள்:
நகம் சொத்தையா? கவலையே வேண்டாம்!
அழகர்மலை நாவல் மரம்

“அதென்னப்பா, சுட்ட பழம், சுடாத பழம்” என்று அந்தச் அச்சிறுவனிடம் கேட்ட ஔவையார், “சுட்ட பழங்களையே பறித்து போடு” என்றாராம். உடனே அச்சிறுவனும் மரத்திலிருந்து நன்கு பழுத்த நாவல பழங்களைப் பறித்து  கீழே போட,  அதனை எடுத்த ஔவையார், அதன் மீது ஒட்டியிருந்த மண்ணை நீக்க ஊதி ஊதி சாப்பிடத் தொடங்கினார். இதனைப் பார்த்த அச்சிறுவன், “என்ன பாட்டி பழம் ரொம்பவும் சுடுகின்றனதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டானாம்.

அப்பொழுதுதான் ஔவைக்கு சுட்ட பழம், சுடாத பழம் என்பதற்கான அர்த்தம் புரிந்து. ‘ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் என்னுடைய தமிழ் புலமையை வென்றுவிட்டான்’ என்று புன்னகையுடன் அச்சிறுவனைப் பார்க்க, மரத்திலிருந்து இறங்கிய சிறுவன் வடிவில் வந்த முருகப்பெருமான் ஔவையாருக்குக் காட்சி தந்தாராம். இப்படி ஔவைக்கு முருகன் நாவல் பழம் அளித்த மரம்தான் இந்த அழகர் மலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இம்மரத்தைச் சுற்றி சிறிய வேலி ஒன்று அமைத்து அங்கே விநாயகர் சிலை ஒன்று வைத்து சிறிய கோயிலாக வழிபடப்படுகிறது. சிறிது காலத்துக்கு முன்பு வெறும் மரம் மற்றும் விநாயகர் சிலையும், ஒரு சிறிய தகர போர்டில் இந்த மரத்தைப் பற்றி எழுதி இருந்த நிலையில், தற்போது கோயிலின் சார்பாக ஒரு பெரிய பலகையில் முருகனின் திருவிளையாடல் பற்றியும் அதனுடைய பாடல் வரிகளையும் எழுதியுள்ளனர். இதனை அழகர் மலைக்குப் போகிறவர்கள் பழமுதிர்சோலையில் கண்டு ரசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com