அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வரும் அரங்கனின் ஜீயபுரம் விஜயம்!

Azhaithavar Kuralukku ododi varum Aranganin Jeeyapuram vijayam
Azhaithavar Kuralukku ododi varum Aranganin Jeeyapuram vijayamhttps://www.etamilnews.com
Published on

ருடம் முழுவதுமே உத்ஸவங்களால் தன்னை நிரப்பிக்கொண்டு, நம்மையும் அந்த உத்ஸவங்களால் உற்சாகப்படுத்தக்கூடியவன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்டிருக்கும் அந்த ரங்கநாதன். எல்லா மாதங்களுக்கும் தனி ஒரு விசேஷ வைபவத்தைத் தந்து கொண்டிருக்கும் அந்த அரங்கன், பங்குனிக்கும் எத்தனை எத்தனையோ விசேஷ வைபவங்களை அளித்திருக்கிறான். அவன் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியது பங்குனி மாத ரேவதி நட்சத்திர திருநாளில். அதனாலேயே ஆதி பிரம்மோத்ஸவம் படுஅமர்க்களமாக அரங்கனின் அரங்கத்தில் அரங்கேறும்.

ஆதி பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் ஸ்ரீரங்கநாதன், தம் இருப்பிடத்திலிருந்து, ஜீயபுரம் சென்று பழையமுதும், மாவடுவும் சாப்பிடும் அந்த அழகை, அந்த எளிமையை என்னவென்று சொல்ல? திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில்
20 கி.மீ. தொலைவில் உள்ளது ஜீயபுரம். ஒரு காலத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இங்கே வாழ்ந்து வந்தார். ரங்கநாதனின் மிகச்சிறந்த பக்தையான அந்த மூதாட்டி, சதா சர்வ காலமும் அவள் மனம் ரங்கனையே நினைத்துக் கொண்டிருக்கும். அவளது நாக்கோ அந்த அரங்கனின் திரு நாமத்தையே எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும். அவளது பேரனின் பெயரும் ரங்கன்தான். அவளுக்கு இருந்த உறவுகள் யார் என்றால், அந்தப் பேரன் ரங்கனும், பெரிய பெருமாள் அரங்கனும்தான். அரங்கனும் அவளோடு வாசம் செய்து அவளது சுவாசத்திலும் நிறைந்து இருந்தான்.

அந்த மூதாட்டியின் பேரன் ரங்கன் ஒரு நாள் முக சவரம் செய்து கொள்வதற்காக காவிரியின் ஆற்றங்கரைக்கு சென்றான். முக திருத்தம் செய்து முடித்த பின் காவிரியில் இரங்கி நீராடிய ரங்கனை திடீரென வந்த வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது. ‘ரங்கா… ரங்கா’ என்ற திருநாமத்தை மட்டுமே கேட்டு வளர்ந்த பேரன் அல்லவா? வெள்ளம் அவனை அடித்துக்கொண்டு போன சமயத்திலும் அவனது உள்ளம் அரங்கனையே நினைத்துக்கொண்டிருந்தது. அதனால் அரங்கனின் பரிபூரண அருளால் அவன் அம்மா மண்டபம் அருகே உயிர் பிழைத்து வந்து விட்டான்.

பேரனை காணாத பாட்டி தவித்துப்போய், ‘ரங்கா… ரங்கா நீ எங்க கண்ணா போயிட்ட? முக திருத்தம் செஞ்சுக்க போயிட்டு வரேன்னு போய்ட்டு இன்னும் நீ வரலியே? உனக்கு பசிக்குமே? என் தங்கமே என்று புலம்பியபடி இருக்க, பாம்பணையில் படுத்திருந்த ரங்கனின் திருச்செவிகளில், பாசத்தால் உருகி உருகி பாட்டி அழைப்பது காதில் விழ, பெரிய பெருமாள் பேரனை போல சின்ன உரு கொண்டு பாட்டியிடம் சென்று, “பாட்டி நீ என்னை ரொம்ப நேரமா கூப்டிண்டே இருக்கியே. கொஞ்சம் நாழியாயிடுத்து. பசிக்கறது சாப்பாடு போடு பாட்டி” என உரிமையாகக் கேட்க, பேரனை பார்த்த சந்தோஷத்தில், “ரங்கா, உனக்கு இல்லாததா?“ என சொல்லிக்கொண்டே, பேரனுக்கு பழைய சாதமும் மாவடுவும் கொடுக்க, அதை சுவைத்தபடியே உண்டான் பேரன் உருவில் வந்த நம் பெருமாள். சற்று நேரத்திற்கெல்லாம் உண்மையான பேரன் அங்கு வர, சிரித்துக்கொண்டே பாட்டியை சிலிர்க்க வைத்து மறைந்தார் அரங்கநாதர்.

நம்பெருமாளுக்கு ஜீயபுரம் உத்ஸவம்
நம்பெருமாளுக்கு ஜீயபுரம் உத்ஸவம்https://prtraveller.blogspot.com

இந்த அற்புத திருநிகழ்வு ஜீயபுரத்தில் இன்றளவும் ஸ்ரீரங்கத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்த வைபவம் நடைபெறும் நாள் இன்றுதான் (மார்ச் 18). இன்று இரவு 9 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து புறப்பட்டு நாளை அதிகாலை ஜீயர்புரம் வந்தடைந்து நாளை மாலை வரை அங்கே தரிசனம் தருவார் நம்பெருமாள்.

ஜீயபுரம் செல்லும்போது பெருமாளுக்கு, சவரத்தொழிலாளர்களின் மண்டகப்படி விசேஷமாக நடைபெறுகிறது. அந்த வைபவத்தில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் பெருமாளுக்கு முன் கண்ணாடியை காட்டி அந்தக் கண்ணாடியில் தெரியும் பெருமாளின் பிம்பத்திற்கு முகத் திருத்தம் செய்வார். அந்த முகத் திருத்தம் செய்த தொழிலாளிக்கு அரங்கனின் மாலை மரியாதை யாவும் செய்யப்படும். அரங்கனுக்கு இந்த வைபவத்தில், விசேஷமாக சமர்பிக்கப்படும் பிரசாதம் என்ன தெரியுமா? பழைய சாதமும், மாவடுவும்தான்.

கூப்பிட்ட குரலுக்கு பகவான் வந்தே தீருவான் என்பதை நமக்கெல்லாம் நினைவூட்டவே ஜீயபுரம் வரும் அரங்கனின் சரணத்தில், நம்மையே நாம் தந்திடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com