அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வரும் கலியுகக் கடவுள்!


Azhaithavar Kuralukku  Ododivarum Kaliyuga Kadavul!
Azhaithavar Kuralukku Ododivarum Kaliyuga Kadavul! https://rslaks.blogspot.com

ன்மிகத்தில் கடவுளை  அறிவதற்கான வழிகள் ஏராளம் உண்டு. நமது மனமும் எண்ணமும் தூய்மையானதாக இருந்து, பிறப்பின் அர்த்தம் உணர்ந்து இந்த உலகிற்கு நன்மை செய்யும் விதமாக நாம் வாழும்போது நிச்சயம் ஏதோ ஒரு தருணத்தில் கடவுளின் தரிசனம் நமக்குக் கிட்டும்.

திருமாலிருஞ்சோலை அழகர்கோயிலில் தினமும் அர்த்த ஜாம ஆராதனையை முடித்துவிட்டு  திருமலையாண்டான் எனும் அடியார் தனது திருமளிகை திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். காலம் செல்லச் செல்ல வயது மூப்பின் காரணமாக அவரால் திருமாலிருஞ்சோலை சென்று பெருமாளுக்கு ஆராதனை செய்வதில் சங்கடம் ஏற்பட்டது.

இதையறிந்த  அடியார் ஒருவர், அவருக்கு உதவியாக திருவடி பந்தம், அதாவது வெளிச்சம் காட்டும் விளக்கை பிடித்துக்கொண்டு அவருக்கு முன்னால் வழிகாட்டிச் செல்வார். அவரது பெயர் திருவடிப்பிச்சை என்கிற சுந்தரராஜன். அவர் விரும்பி இந்த சேவையை ஏற்று செய்து வந்தார். அந்தக் காலத்தில் சோலைகளுக்கு செல்லும் வழி முழுவதும் இருட்டாகத்தான் இருக்கும். அதுவும் திருமாலிருஞ்சோலை வழி முழுமையான வனப்பகுதியாக இருந்ததால் அங்கு இருள் சூழ்ந்து காணப்படும்.

ஒரு நாள் பகவானின் அர்த்த ஜாம ஆராதனையையும் முடித்துவிட்டு தனது திருமாளிகைக்குச் செல்ல முயன்ற திருமலையாண்டார் பந்தம் ஏந்த திருவடிப்பிச்சையை காணாமல் அவரை அழைக்க எண்ணி, “சுந்தரராஜா… சுந்தரராஜா” எனக் கூவினார். அவர் அழைத்ததும் உடனே பந்தத்துடன் வந்த சுந்தரராஜன், அவருக்கு முன்னாள் வழிகாட்டியபடியே சென்று அவரது திருமளிகை வந்ததும் அவரிடம், "சுவாமி அடியேன் திரும்பிச் செல்ல உத்தரவு வாங்கிக் கொள்கிறேன்" என்று அனுமதி பெற்று திரும்பினார்.

மறுநாள் அதிகாலையில் திருவடிப்பிச்சை சுந்தரராஜன் வேகமாக வந்து  அவரை சாஷ்டாங்கமாக வணங்கி, "சுவாமி அடியேன், உமக்குச் செய்யும் திருவடி பந்தம் கைங்கரியத்தில் நேற்று அபச்சாரம் செய்து விட்டேன். தயவுகூர்ந்து அடியேனை மன்னித்து அருள வேண்டும்" என்று கூற, திருமலையாண்டார், "என்னடா சொல்கிறாய்? நீ என்ன அபச்சாரம் செய்தாய்?” என்று கேட்க, "சுவாமி நேற்று மாலை உடல் அசதியால் மாலையிலிருந்து இரவு வரை நன்கு தூங்கிவிட்டேன். அதனால் எப்போதும் தங்களுக்குச் திருவடி பந்த சேவைக்கு என்னால் வர முடியாமல் போய்விட்டது. சுவாமி நீங்கள் இந்த வனாந்தர இருட்டில் விளக்கு இல்லாமல் எப்படி இந்தத் திருமளிகைக்கு வந்தீர்களோ?" என்று சுந்தரராஜன் கேட்டார்.

அதைக்கேட்ட திருமலையாண்டார், "இல்லையே நீதானே நேற்றும் எப்போதும்போல் எனக்கு திருவடி பந்தம் பிடித்து வந்தாய். போகும்போதுகூட எனது உத்தரவையும் பெற்று போனாயே" என்று சொன்னார்.

உடனே சுந்தரராஜன், "இல்லை சுவாமி, நான் நேற்று வரவே இல்லை" என்று சுந்தரராஜன் மறுக்க, அப்போதுதான் தனக்கு நேற்று பந்தம் பிடித்து வந்தது சாட்சாத் அந்த திருமாலிருஞ்சோலையில்  அருள்புரியும் சுந்தரராஜப் பெருமாளே என்று திருமலையாண்டனுக்குப் புரிந்தது.

உடனே ஆலயத்திற்குச் சென்று, "தேவரீரே நேற்று நீங்கள்தான் திருவடி பந்தம் பிடிப்பானாக வந்து இந்த அடியவனுக்கு வழிகாட்டியாக வந்தீரோ? என்னே நான் செய்த பாக்கியம்" என்று அழகரின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார். அழகரின் கருணையை நினைத்து ஆனந்தக்கண்ணீர் வழிய அன்று முழுவதும்  பகவானை ஆனந்தமாக ஆராதித்தார்.

இதையும் படியுங்கள்:
வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள கடைபிடிக்க வேண்டிய எளிய வழிகள்!

Azhaithavar Kuralukku  Ododivarum Kaliyuga Kadavul!

இந்தத் திருமலையாண்டான் முக்தி பெற்றதும் அவருக்கான இறுதி காரியங்களை அழகரே முன் நின்று ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமாலையாண்டான் பரமபதம் பெற்ற நன்னாள் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி. அந்த நாளில் அழகர் வருஷம் தவறாமல் திருமாலிருஞ்சோலை மலைக்குச் சென்று எண்ணெய் குளியல் செய்து அருளுகிறார். அழகர் வருஷத்தில் இரண்டு முறை நூபுர கங்கைக்கு வருகை தருகிறார். ஒன்று ஆடி மாதம் அழகரின் வருடாந்திர பிரமோத்ஸவம். மற்றொன்று ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசியான திருமாலையாண்டான் பரமபதம் பெற்ற நாள்.

கலியுகத்தில் பகவானே மனுஷ ரூபத்தில் வந்து நம்பினோருக்கு கைங்கரியம் செய்வார் என்பது இந்த நிகழ்வின் மூலம் தெளிவாகிறது. எனவே, நாமும் ஆபத்தில் யாரேனும் நமக்கு உதவினால் அவரை கடவுள் ரூபமாகவே பார்க்கப் பழகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com