நாம் உண்ணும் உணவுகள் செரிமானமாகி சத்துக்கள் உறிஞ்சப்பட்ட பின், கழிவுகள் நல்ல முறையில் வெளியேறும் வரை உண்டான செயல்களில் சம்பந்தப்பட்டிருக்கும் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் போன்ற பல்வேறு உறுப்புகளின் தொகுப்பையே நாம் ஜீரண மண்டலம் என்று கூறுகிறோம். ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகள் சிறப்பாக அமைய நாம் அதன் உறுப்புகளை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது அவசியம். அதற்கான ஐந்து வழி முறைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு உண்பது மற்றும் வாரத்தில் ஒன்றிரண்டு முறை உண்ணா நோன்பை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சுழற்சி முறையைப் பின்பற்றுவது நலம் தரும். உணவைத் தவிர்த்து நோன்பிருக்கும் நேரங்களில் ஜீரண மண்டலம் ஓய்வெடுக்கவும், உள்ளிருக்கும் சிறு சிறு சிதைவு போன்ற கோளாறுகளை நிவர்த்தி செய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
பல வகை உணவு வகைகளை சேர்த்து உட்கொள்ளும்போது செரிமானக் கோளாறு ஏதுமின்றி ஜீரணம் சிறப்பாக நடைபெறும்; ஊட்டச் சத்துக்களும் நல்ல முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படும்.
உணவுகளை வாயில் இட்டதுமே அப்படியே விழுங்கி விடாமல், பற்களின் உதவியால் உணவை நன்கு மெல்ல வேண்டும். அப்போது உமிழ் நீர் அதிகளவு சுரக்க ஆரம்பிக்கும். அதிலுள்ள என்சைம்களுடன் உடைக்கப்பட்ட உணவுகள் கலந்து செரிமான செயல்பாடு வாயிலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது.
பித்த நீர் மற்றும் வயிற்றில் சுரக்கும் ஒரு வகை அமிலம் ஆகியவை உணவுகளை உடைக்கவும், ஜீரணம் நல்ல முறையில் நடைபெறவும் உதவுபவை. இதுபோன்ற திரவங்களின் உற்பத்தியை கசப்பு சுவை கொண்ட உணவுகள் அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், பாகற்காய், காலே போன்ற காய்களையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது ஜீரண மண்டலம் நன்கு செயல்பட உதவியாக இருக்கும்.
வயிற்றை சுற்றி நன்கு கைளால் மசாஜ் செய்வது நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கக்கூடியது. இப்படி மசாஜ் செய்வதால் வயிற்றிலுள்ள வாயு வெளியேறும்; வீக்கம் குறையும்; செரிமானப் பாதையில் உள்ள தடங்கல்கள் நீங்கி, குடல் இயக்கம் ஒழுங்காக நடைபெறும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி சிக்கலில்லா செரிமானத்துக்கு நாமும் வித்திடுவோமே!