அழகர் மலையானுக்கு ஆண்டாளின் மாலை!

Azhakar Vaigai Arulal
Kallazhakar
Published on

ள்ளழகர் நாளை வைகை ஆற்றில் இறங்கப்போகும் வைபவத்தைக் காண இவ்வையகமே ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. தாம் சூடிக்கொடுத்த மாலையோடு கள்ளழகரைக் காண ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறாள் ஸ்ரீவில்லிபுத்தூரின் இளவரசியான ஆண்டாள். தம் பாமாலைகளாலும், பூமாலைகளாலும் இறைவனை கட்டிப்போட்டவள் அல்லவா ஆண்டாள்? பெரியாழ்வாரின் பெண் என்பதாலோ என்னவோ திருமாலின் மீது அப்படி ஒரு ப்ரேமை ஆண்டாளுக்கு. அதனாலன்றோ தாம் சூடிக்கொடுக்கும் பூமாலை அந்த பெருமாள் கழுத்தில் எப்படி இருக்கும் என தானே சூடிப்பார்த்து, ‘அட அழகாய்தான் வந்திருக்கிறது’ என்று திருப்தி பட்டுவிட்டு, பின் அதனை தந்தைக்கு தெரியாமல் தந்தை கொண்டு செல்லும் கூடையில் வைத்து வடபத்ர சாயிக்கு தினமும் அனுப்புவாள்?

தம் பாமாலைகளின் வழி பெருமாளை நமக்குக் காட்டித் தந்தவள் ஆண்டாள். ஆண்டாளின் பூ மாலைகள் அவளை, அவள் பக்தியை பெருமாளுக்கு காட்டித் தந்தது, பெரியாழ்வாருக்கும் காட்டித் தந்தது. வேறு பூமாலைகள் எனக்கு வேண்டாம், ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலைதான் தனக்கு வேண்டும் என்று அந்த தாமோதரன் வேண்டி விரும்பி ஏற்றது ஆண்டாளின் பூமாலைகளைத்தானே?

சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் இறங்குபோது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டுதான் வைகை ஆற்றிலேயே இறங்குவார் அழகர். ஆண்டாள் சூடிக்கொடுக்கும் மாலையும் , கிளியும் தினமும் அவள் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வடபத்ரசாயி பெருமாளுக்கு சாத்தப்படும். திருமலையில் நடைபெறும் ப்ரஹ்மோத்ஸவத்தின்போதும், கருட சேவையின்போதும் ஆண்டாள் சூடிக் கொடுத்துக் களைந்த மாலையும், அவளது கிளியும் ஏழுமலையானுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Rangamannar with Andal Nachiyar
Andal Rangamannar

அதைப்போலவேதான் மதுரையை நோக்கி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பட்டு வஸ்திரம், ஆண்டாளின் மாலை மற்றும் கிளி ஞாயிற்றுக்கிழமை அன்று புறப்பட்டு விட்டது. கள்ளழகரை காண நாம் காத்திருக்கும் அதேவேளையில், ஆண்டாளின் மாலைக்காகவே காத்திருப்பார் கள்ளழகர். அதனை சூட்டிக்கொண்டே நமக்கெல்லாம் காட்சி அளிப்பார்.

ஆண்டாளில் அந்தக் கிளி, கல்யாண கிளி. ஆம். தம்மை அந்த அரங்கநாதன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக மழையையும், வண்டையும், கிளியையும் தூது விடுகிறாள் ஆண்டாள். முகில் வண்ணனின் அழகில் மயங்கி மழை தானாகப் பொழிய ஆரம்பித்து, ஆண்டாளின் தூதை சொல்ல மறந்து விடுகிறது. மாலவனின் மாலையில் இருந்த தேனை அருந்தி விட்டு மயங்கி இருந்து விடுகிறது வண்டு. ஆனால், கிளி மட்டுமேதான் ரங்கநாதனிடம் ஆண்டாளின் அன்பை எடுத்துச் சொல்ல, அதனாலேயே அந்தக் கிளியின் மீது தனியொரு ப்ரியம் கொண்டு அந்த கிளி கேட்டதற்கிணங்க தம் கைகளிலேயே அதனை எப்போதும் வைத்து கொண்டிருக்கிறாள் ஆண்டாள். அப்படிப்பட்ட அந்த ஆண்டாளின் விசேஷமான கல்யாண கிளியும் கள்ளழகரிடம் சென்று சேர்ந்து விடும். தம் திருமணத்திற்காக இதே கள்ளழகரிடமும் வேண்டி நின்றவள் ஆண்டாள். ஆம், ‘கள்ளழகப் பெருமானே, என்னை அந்த அரங்கனிடம் சேர்த்து வைத்து விடப்பா. அப்படி நீ செய்து விட்டால், உனக்கு நான் நூறு தடா வெண்ணையும், நூறு தடா அக்கார வடிசலும் சமர்ப்பிக்கிறேன்’ என்று கூறியவளின், வேண்டுதலை அவள் பிறந்து, அரங்கனின் கை பிடித்து அவள் அரங்கனோடு ஐக்கியமாகி பல நூற்றாண்டுகள் கழித்து தோன்றிய ஸ்வாமி ராமானுஜர் நிறைவேற்றினார். ஆண்டாளின் கல்யாண வேண்டுதலை நிறைவேற்றிய பெருமையும் கள்ளழகருக்கு உண்டு.

இதையும் படியுங்கள்:
இரவில் குளித்தால் இந்த 7ம் கிடைக்குமா?
Azhakar Vaigai Arulal

ஆண்டாளின் மீது மட்டுமல்ல, அவள் தந்தையான பெரியாழ்வார் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர் கள்ளழகரே. அதனால்தானோ என்னவோ ஸ்ரீவில்லிபுத்தூரை விட்டு பிரியாமலேயே இருந்த பெரியாழ்வாரும் தனது கடைசி காலத்தில், கள்ளழகரின் திருவடியிலேயே தம் காலத்தை கழித்து பின் தம் உயிரை விட்டதும் இந்த கள்ளழகரின் திருவடியிலேயேதான். ஆம். பெரியாழ்வாரின் திருவரசை இன்றளவும் நாம் கள்ளழகர் வாசம் செய்யும் இடத்தின் அருகில் தரிசிக்கலாம்.

ஆண்டாளின் ப்ரியமான கள்ளழகரை, அவர் சாத்திக் கொண்டு வரும் அந்த அழகான மாலையோடு சேர்ந்து தரிசித்து களிப்படைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com