‘ஆழ்வான், ஆழ்வான்’ கூரத்தாழ்வான்!

;Azhvan Azhvan" Koorathazhwan
;Azhvan Azhvan" Koorathazhwanhttps://archive.anudinam.org

ன்று தை மாதம் ஹஸ்த நட்சத்திரம் கூரத்தாழ்வானின் திருநட்சத்திரமாகும். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு, ஸ்வாமி இராமானுஜரின் உயிரான சிஷ்யர் கூரத்தாழ்வான். ஸ்ரீவத்சாங்கர் என்ற பெயர் கொண்ட இவர், கூரத்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றதே அவர் ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் மீது கொண்ட பற்றை நமக்குத் தெள்ளத் தெளிவாகக் காட்டி விடும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழிகளுக்கு விளக்க உரை சொல்லும்போது அப்படியே கண்ணில் பக்தி பெருக்கால் கண்ணீர் மல்க அந்த திருவாய்மொழிகளுக்கு விளக்கங்கள் சாதிப்பாராம் ஸ்ரீவத்சாங்கர். ஸ்வாமி ராமானுஜருக்கே, இவரின் விளக்க உரைகளை கேட்க வேண்டும் என்று ஆசை இருந்ததாம். ஆனால், ஆசார்ய ஸ்தானத்தில் தாம் இருந்துகொண்டு ஸ்ரீவத்சாங்கரிடம் (கூரத்தாழ்வானிடம்) விளக்க உரை சொல்லும்படி கேட்டால் எங்கே ஸ்ரீவத்சாங்கரே, ‘அடியேன் தங்களது சிஷ்யன். ஆசார்யனிடம் சிஷ்யன் விளக்க உரை காலக்ஷேபம் கூறுவது சரியாகாது’ என்று கூறி மறுத்து விடுவாரோ என்று எண்ணி தம் மற்ற சீடர்களை எல்லாம், ‘ஸ்ரீவத்சாங்கரிடம் சென்று திருவாய்மொழி விளக்க உரையை விரிவாக கற்று வாருங்கள்’ என்று அனுப்புவாராம்.

சீடர்களும் பல நாட்கள் திருவாய்மொழி பாடங்களை கற்க ஸ்ரீவத்சாங்கரிடம் சென்று வந்து கொண்டிருக்க, ராமானுஜர் பல நாட்கள் கழித்து, அந்த சீடர்களை அழைத்து, ‘‘திருவாய்மொழி பாசுரங்களை எல்லாம் கற்றுக்கொண்டு விட்டீர்களா? எத்தனை பாசுரங்கள் இதுவரை பாடமாகி இருக்கிறது?” என்று கேட்க, அதற்கு அந்த சீடர்களோ, ‘‘ஸ்வாமி, அவர் திருவாய்மொழி பாசுரங்களை இன்னும் விளக்க ஆரம்பிக்கவில்லையே. ‘உயர்வற உயர்நலம் உடையவன் அவன்’ என்று ஆரம்பித்ததுமே தம் கண்களில் நீர் பெருக மேலே ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் பக்தி பெருக்கால் நின்று விடுகிறார்” என்றனர்.

தொடர்ந்து, ”நம்மாழ்வாரின் பிரதாபத்தை பாருங்கள்… தம் முதல் திருவாய்மொழியின் முதல் வார்த்தையிலேயே பெருமாள் எவ்வளவு உயர்வானவன்… எப்படி அத்தனை கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமானவன் என்று  காட்டி கொடுக்கிறார் என்று சொல்லும்போதே  நம்மாழ்வாரின் பெருமைகளை நினைந்து, நினைந்து அதற்கு மேல் வார்த்தைகள் வராமல்  ஸ்ரீவத்சாங்கர், அப்படியே மூர்ச்சையாகி விடுகிறார்” என்றனர் சீடர்கள்.

ஆழ்வார்கள் எப்படி திருமாலின் கல்யாண குணங்களை நினைத்து அதிலேயே தம் மனங்களை தொலைத்து, லயித்து நிற்பார்களோ அப்படி அல்லவா இந்த ஸ்ரீவத்சாங்கரும் இருக்கிறார் என்பதை உணர்ந்த ஸ்வாமி ராமானுஜர் ஸ்ரீவத்சாங்கரை, ‘ஆழ்வான், ஆழ்வான்’ என்றே கூப்பிட ஆரம்பித்தார். மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் கூரத்தாழ்வான். பகவத் அனுபவம் என்று வந்து விட்டால் அதில் தம்மை விட அதிக ஈடுபாடு காட்டுபவர் கூரத்தாழ்வானே என்று உடையவரான ராமானுஜரே கருதினார். ராமானுஜரின் அதீத ப்ரியத்திற்கு பாத்திரமாகும் பாக்கியத்தை பெற்றவர் கூரத்தாழ்வானே. அதனால் தான் ஸ்வாமி ராமானுஜர், ‘ஆழ்வான், ஆழ்வான்’ என கூரத்தாழ்வானை கூப்பிட்டுக்கொண்டே இருப்பாராம்.

இதையும் படியுங்கள்:
அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள் அவதாரத் திருநாள்!
;Azhvan Azhvan" Koorathazhwan

திருகோஷ்டியூர் நம்பிகளிடம்  பதினெட்டு முறை நடந்து சரம ஸ்லோகத்திற்கான விளக்கங்களை ஸ்வாமி ராமானுஜர் உபதேசமாக பெற்றபோது , திருகோஷ்டியூர் நம்பிகள், ராமானுஜரிடம் ‘இந்த அர்த்த விஷயங்களை யாரிடமும் சொல்லி விடாதே’ என்று கூறினாராம். அதற்கு ராமானுஜரோ, “யாருக்கும் சொல்லாமல் இருப்பேன். ஆழ்வானுக்கு சொல்லாமல் போகாது” அதாவது, “கூரத்தாழ்வானிடம் சொல்லாமல் இருக்க முடியுமோ? அது தம்மால் முடியாது. அவருக்கு மட்டும் உபதேசிப்பதற்கு அனுமதி வேண்டும்” என்று கூறினாராம். அப்படி ராமானுஜரின் உயிரான சீடராக இருந்தவர் கூரத்தாழ்வான்.

மகாலட்சுமியை குறித்து கூரத்தாழ்வான் அருளிய ”ஸ்ரீ ஸ்தவத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில், “தாயே , உன் பெருமை உனக்கும் தெரியாது. உன்னை அடைந்த எம்பெருமானுக்கும் தெரியாது. இப்போதுள்ள மொழிகளால் எல்லையற்ற உனது பெருமையைப் பாட முடியாது” என்பார். கூரத்தாழ்வானின்  பெருமை என்பதையும் நம்மால் பாடிடவே முடியாது. அவ்வளவு பெருமை வாய்ந்த கூரத்தாழ்வானின் திருநட்சத்திரமான இன்று அவரது திருவடிகளில் சரணடைவோம் வாருங்கள்… நம்மை ஏற்றி விடுவார் கூரத்தாழ்வானே என்பதில் ஐயமே வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com