ஆழ்வார் சொன்னார் பெருமாள் செய்தார்!

Azhwar said, Perumal did
Azhwar said, Perumal didhttps://www.suddhabhaktitamil.com
Published on

ன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் திருமழிசையாழ்வார். காஞ்சியில் எழுந்தருளியிருந்த வரதராஜப் பெருமாளை தரிசிக்க காஞ்சிக்குச் சென்றார். அவருடன் சிஷ்யன் கணிகண்ணனும் சென்றான். காஞ்சியில் திருமழிசையாழ்வார் வாழ்ந்து வந்த இடத்திற்கு தினமும் ஒரு மூதாட்டி வந்து அவ்விடம் முழுவதையும் சுத்தம் செய்யும் வழக்கத்தை வைத்திருந்தாள்.

ஒரு நாள் அம்மூதாட்டி திருமழிசையாழ்வாரை வணங்கி வரம் ஒன்றைக் கேட்டாள். திருமழிசையாழ்வார் அந்த வயதான பெண்மணியை அழகான இளம்பெண்ணாக மாற்றினார். அந்த சமயத்தில் காஞ்சியை ஆண்டு வந்த பல்லவராயன் எனும் மன்னர் அந்த இளம்பெண்ணை தனது மனைவியாக்கிக் கொண்டார்.

வருடங்கள் சில சென்றன. மன்னரின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், ராணியின் உடலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை. இதை கவனித்த மன்னர் ஒரு நாள் ராணியிடம் இதுகுறித்து கேட்டறிந்தார். ராணியோ திருமழிசையாழ்வார் தனக்குத் தந்த வரத்தைப் பற்றிக் கூறி, வேறொரு விஷயத்தையும் சொன்னாள்.

தினமும் கணிகண்ணன் அரண்மனைக்கு வந்து உணவைப் பெற்றுச் செல்லும் வழக்கத்தை வைத்திருந்தான். ராணி மன்னரிடம் இதைப் பற்றித் தெரிவித்து கணிகண்ணனைச் சந்தித்தால் தாங்கள் நினைத்தது நடக்கும் என்று மன்னரிடத்தில் தெரிவிக்க, உடனே மன்னர் கணிகண்ணனை அரண்மனைக்கு அழைத்துவரச் செய்தார்.

கணிகண்ணிடம் மன்னர் திருமழிசையாழ்வாரை அழைத்துவரும்படி கூறினார். கணிகண்ணன், “தனது குரு பெருமாளைத் தவிர வேறு எவரையும் நாடிச் செல்லமாட்டார்” என்று தெரிவித்தான். இதற்கு மன்னர் அவரை திருமழிசையாழ்வாரிடம் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். கணிகண்ணனோ இதற்கும் மறுப்புத் தெரிவித்துவிட்டுச் சென்றான்.

மன்னர் இதை எதிர்பார்க்கவில்லை. தான் நினைத்த காரியம் முடியவில்லையே என்று சற்று வருந்தினார். உடன் இருந்த அமைச்சர்கள் மன்னருக்கு யோசனை ஒன்றைத் தெரிவித்தார்கள். “மன்னர் பெருமானே, தாங்கள் நினைத்த காரியம் நடக்க கணிகண்ணன் பாடினாலே போதும்” என்றனர்.

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்

மறுநாள் தனது ஆட்கள் மூலம் மன்னர் கணிகண்ணனை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தார். “கணிகண்ணனே, எனக்கு இளமை திரும்பி நான் எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டும். இதற்காக ஒரு கவிதை பாடுவாயாக” என்றார்.

கணிகண்ணனோ, நாராயணனைப் பாடும் வாயால் யாரையும் பாட மாட்டேன் என்று தெரிவித்துவிட்டான். கோபப்பட்ட மன்னர், “எனது நன்மைக்காக பாட மறுத்தமையால் எனது ஆட்சிக்குட்பட்ட இந்த இடத்தலிருந்து நீ உடனடியாக வெளியேறியாக வேண்டும்” என்றார்.

மன்னரின் கட்டளையை திருமழிசையாழ்வாரிடம் சென்று தெரிவித்து அந்த நகரத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமானான் கணிகண்ணன். திருமழிசையாழ்வாரோ, ‘நானும் உன்னோடு வருகிறேன்’ என்று காஞ்சி மாநகரிலிருந்து புறப்பட்டு விட்டார்.

ஊரிலிருந்து செல்லும் வழியில் திருமழிசையாழ்வாருக்கு ஒரு யோசனை தோன்றியது. ஊரை விட்டுச் சென்று கொண்டிருக்கும்போது பெருமாளிடம், ‘நாங்கள் ஊரைவிட்டுச் செல்லுகிறோம். நீங்களும் எங்களோடு புறப்பட்டு வாருங்கள்’ என்றார்.

‘கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டா – துணிவுடைய

செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்’

என்ற திருமழிசையாழ்வாரின் வேண்டுகோளை ஏற்ற பெருமாளும் கோயிலை விட்டுப் புறப்பட்டார். இதையறிந்த நகர மக்களும் ஊரை விட்டுப் புறப்பட்டார்கள். இதனால் காஞ்சி மாநகரமே வெறிச்சோடிப்போனது.

அன்றிரவு பெருமாள், திருமழிசையாழ்வார், கணிகண்ணன் மூவரும் ஓர் இடத்தில் தங்கினார்கள். அவர்கள் ஓர் இரவு தங்கிய அந்த இடம், ‘ஓரிரவிருக்கை’ என்று அழைக்கப்பட்டது. தற்போது அவ்விடம், ‘ஓரிக்கை’ என்று மருவி அழைக்கப்படுகிறது.

பெருமாளும் திருமழிசையாழ்வாரும் மக்களும் ஊரைவிட்டு வெளியேறிய விஷயம் மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் தான் மட்டும் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார் மன்னர்.

இதையும் படியுங்கள்:
இளநீர் வழுக்கையில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
Azhwar said, Perumal did

மன்னர் உடனே புறப்பட்டுச் சென்று அனைவரையும் சந்தித்து தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டு நின்றார். மன்னர் மன்னிக்கப்பட்டார்.

‘கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் கச்சி

மணிவண்ணா நீகிடக்க வேண்டாம் - துணிவுடைய

செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப்பாய் விரித்துக் கொள்’

என்று மனம் மாறிய திருமழிசையாழ்வாரின் வேண்டுகோளை ஏற்ற பெருமாள் உட்பட அனைவரும் காஞ்சி மாநகரத்திற்குத் திரும்பினார்கள்.

திருமழிசையாழ்வார் சொன்னபடி தான் செய்ததை மக்களுக்கு உணர்த்த விரும்பிய பெருமாள், வலது திருக்கையை கீழே வைத்து படுக்காமல் இடது திருக்கையை கீழே வைத்து இடம் மாறி படுத்தார். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இத்திருக்கோயில் யதோத்காரி பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. யதோத்காரி எனும் சொல்லுக்கு, ‘சொன்னவண்ணம் செய்தல்’ என்று பொருள். இதனால் இப்பெருமாள், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com