அடுத்தவர்களுக்கு உணவளிப்பது என்பது மிகவும் புண்ணியமான காரியமாகக் கருதப்படுகிறது. ‘தர்மம் தலை காக்கும்’ என்று சொல்வதுண்டு. அதிலும் வாயில்லா ஜீவன்களான பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதனால் எண்ணற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும். முக்கியமாக, நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவில் எந்த விலங்குகளுக்கு, பறவைகளுக்கு உணவளித்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றிக் காண்போம்.
ஆமைகளுக்கு உணவளித்து வந்தால், செல்வ செழிப்பு பெருகும். காகங்களுக்கு உணவளித்து வந்தால், வாழ்வில் கஷ்டங்கள், துன்பங்கள் வராது. நம் முன்னோர்களின் ஆசி கிட்டும் என்று சொல்லப்படுகிறது.
குரங்குகளுக்கு உணவளித்து வந்தால், அகால மரணம், விபத்துக்கள் நேராது. நாய்களுக்கு உணவளித்து வந்தால், நவகிரக தோஷம் நீங்கும். நம் வாழ்வில் உண்டாகும் தடைகளும், துன்பங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. பசுக்களுக்கு உணவளிப்பதால், கடவுளின் அருள் உண்டாகும். நம்முடைய கர்ம வினை நீங்கி செல்வ செழிப்பு பெருகும். மீன்களுக்கு உணவளிப்பதால், சகல தோஷங்களும், பாவங்களும் நீங்கும். புறாக்களுக்கு உணவளிப்பதன் மூலமாக பூர்வ ஜன்ம சாபம் நீங்கி செல்வச் செழிப்பைப் பெற முடியும்.
கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் நமக்கு நல்ல ஞானம், படிப்பு, புத்திக்கூர்மை வளரும் என்று சொல்லப்படுகிறது. மயில்களுக்கு தானியங்களை உணவளிப்பதால், காம குற்றங்களில் இருந்து விடுபடலாம். மைனாவிற்கு உணவளிப்பதால், குடும்பத்தில் தம்பதியினருக்கு இடையே ஏற்படும் மனவேற்றுமை அகலும். அணில்களுக்கு உணவளித்து வருவதன் மூலமாக காதலில் வெற்றி கிட்டும்.
எறும்புகளுக்கு உணவளிப்பதன் மூலமாக கர்மவினை, சாப, பாவங்கள் தீரும். எருமைக்கு உணவளிப்பதால், அகால மரணம், துர்மரணம், நோய் வந்து மரணம் போன்றவை உண்டாகாமல் காக்கும். குதிரைக்கு தொடர்ந்து உணவளித்து வருவதன் மூலம் நம்மை செல்வந்தனாக்கும், ராஜ வாழ்க்கையை தரும், அரசியலில் வெற்றியைத் தரும்.
யானைக்கு உணவளிப்பது பதினாறு செல்வங்களையும், ராஜ போக வாழ்க்கையையும், அரசியலில் வெற்றியையும் தரும் என்று சொல்லப்படுகிறது. பாம்பு புற்றுக்கு பால் வார்த்து வந்தால், திருமண தோஷம் நீங்கும். கழுதைகளுக்கு உணவளிப்பதன் மூலம் நியாயமான வழியில் செல்வம் சேரும், கடுமையான சரும நோய்களின் வீரியம் குறையும் என்று சொல்லப்படுகிறது.