அதிகளவு நார்ச்சத்து நிறைந்த தாவர வகை உணவுகள், குணப்படுத்த முடியாத ‘மல்டிபிள் மெலோமா’ என்னும் இரத்தப் புற்றுநோய் பரவலைத் தடுத்து நிறுத்த உதவுமென ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மல்டிபிள் மெலோமா (Multiple Myeloma) என்பது இரத்தத்திலுள்ள பிளாஸ்மா எனப்படும் ஒரு வகை வெள்ளை அணுக்களில் உருவாகிறது. ஆரோக்கியமான பிளாஸ்மா செல்கள் ஆன்டிபாடீஸ் எனப்படும் ஒரு வகை புரோட்டீன்களை உற்பத்தி செய்யும். இந்த புரோட்டீன்கள் உடலிலுள்ள நோய்க் கிருமிகளைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கும் வேலையை செய்து வரும். மல்டிபிள் மெலோமாவில் பாதிப்படைந்த பிளாஸ்மா செல்கள் எலும்பு மஜ்ஜையின் உள்சென்று ஒருங்கிணைந்து அடைந்திருக்கும்.
அதிகளவு நார்ச்சத்து அடங்கிய உணவுகள், உடலிலுள்ள அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், டைப் 2 வகை நீரிழிவு நோய் வரும் அபாயம் ஆகியவற்றைக் குறைக்கவும், ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். மேலும் சில வகை உணவுகள் கேன்சர் வரும் அபாயத்தைத் தடுக்கவும் செய்யும்.
இரத்தத்தில் ஆரோக்கியக் குறைபாடுடன் இரத்தப் புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலையில், அதிகளவு பாடி மாஸ் இன்டெக்ஸும் (BMI) கொண்டிருந்த இருபது பேர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு மல்டிபிள் மெலோமா வரும் அபாயம் அதிகம் இருந்தது. இவர்கள் இருபது பேர்களும் பன்னிரண்டு வாரங்களுக்கு அதிகளவு நார்ச்சத்து நிறைந்த தாவர வகை உணவுகளை உண்ணும்படி அறிவுறுத்தப்பட்டனர். அதன் பின் அவர்களுக்கு இருபத்தி நான்கு வாரங்கள் டயட்டரி கோச்சிங்கும் தரப்பட்டது.
இந்த சோதனைக் காலங்களில் அவர்கள் அனைவரும் விரும்பிய அளவு பழங்கள், காய்கறிகள், நட்ஸ், சீட்ஸ், முழு தானிய வகை மற்றும் பயறு வகை உணவுகளை உட்கொண்டு வந்தனர். உட்கொள்ளும் உணவில் உண்டுபண்ணிய இந்த மாற்றம் அவர்கள் வாழ்வில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருந்ததைக் கண் முன் காண முடிந்தது. இரைப்பை குடல் பகுதிகளில் வாழும் நல்ல பாக்ட்டீரியாக்களின் ஆரோக்கியம், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், உடல் வீக்கம் போன்றவை நேர்மறையான மாற்றம் கண்டிருந்தன.
இந்த ஆய்வில் பங்கு பெற்ற அனைவரின் உடல் எடையும் பன்னிரண்டு வார முடிவில் எட்டு சதவிகிதம் குறைந்திருந்ததையும் காண முடிந்தது. பரிசோதனைக் காலம் ஆரம்பிக்கும் முன்பு நோயின் அறிகுறிகள் மூலம் அதிக ரிஸ்க் உள்ளவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட இருவரின் ரிப்போர்ட்டிலும் நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால் சோதனையின் முடிவுகள் நம்பகத்தன்மையுடையவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக, ஓர் ஆண்டுக்குப் பின்னும் ஒருவருக்குக் கூட மல்டிபிள் மெலோமாவின் தாக்கம் ஏற்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி ஊட்டச்சத்துக்களின், குறிப்பாக அதிகளவு நார்ச்சத்து நிறைந்த தாவர வகை உணவுகளின் பவர் எத்தனை மகத்துவம் வாய்ந்தது; அவை எப்படியெல்லாம் குடலின் மைக்ரோபியோம்களின் ஆரோக்கியத்திற்கும் சிறப்பான மெட்டபாலிசத்திற்கும் உதவிபுரிந்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்துள்ளன என, சாண்டிகோ(California)வில் நடைபெற்ற, 2024 அமெரிக்கன் ஹெமட்டாலஜி சொசைட்டியின் வருடாந்திர மீட்டிங்கில் தலைமை ஆராய்ச்சியாளர் ஊர்வி ஷா சிலாகித்துக் கூறுகிறார்.
எதிர்கால நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கும் இந்தக் கண்டுபிடிப்புகள் சிறந்த முறையில் உதவி புரியும்.