வியாழக்கிழமை குரு பகவானை வழிபட்டு அவரது அருளைப் பெறுவதற்கு ஏற்ற நாளாகும். அறிவு, வேலை, மங்கல காரியங்கள் இவை அனைத்தையும் வழங்கக் கூடியவர் குரு பகவான். குருவருளுடன் திருவருளும் வேண்டும் என்பார்கள். அப்படி குருவின் அருளையும் இறைவனின் அருளையும் ஒரே நாளில் பெறுவதற்கு மிகவும் ஏற்ற நாள் குரு பிரதோஷமாகும்.
வியாழக்கிழமை வரும் பிரதோஷம் குருவார பிரதோஷம் எனப்படுகிறது. குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் மாலை வேளையில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு செல்லுங்கள். சிவபெருமான் மற்றும் நந்திதேவர் ஆகியோரோடு, நவகிரகத்தில் உள்ள குரு பகவான் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி முதலானவரை கண்ணார இன்று தரிசித்து, மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷம் நேரம். இந்த சமயத்தில் சிவாலயத்தில் உள்ள நந்தி தேவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும். முடிந்தால் சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி அபிஷேகத்தில் பங்கேற்கலாம். அதேபோல், செவ்வரளி, வில்வம், அருகம்புல் கொண்டு நந்தி தேவருக்கு சாத்த வேண்டிக்கொள்ளுங்கள். குருவார பிரதோஷத்தில் மறக்காமல் சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.
பிரதோஷ நாளில் விரதம் இருந்து பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டால் துன்பங்கள் நீங்கும், தோஷங்கள் தீரும், திருமணத் தடைகள் உள்ளிட்ட சுப காரியத்தடைகள் நீங்குவதுடன், மாங்கல்ய பலம் அதிகரிக்கும். இந்த நாளில் பிரதோஷ பூஜையுடன் குரு பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இது தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள் என்பதால் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாத்தி வழிபடுவதால் மாணவர்கள் கல்வியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்குவார்கள். குருவார பிரதோஷ நாளில் குரு பகவானுக்கும் சிவபெருமானுக்கும் தும்பை பூமாலை சாற்றி வழிபடுவதால் ஏழு பிறவிகள் செய்த தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷ நேரத்தில் பால் வாங்கி அபிஷேகத்திற்குக் கொடுத்தால் நோய்கள் நீங்கும். நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கி அபிஷேகத்திற்கு கொடுத்தால் தன லாபம் கிடைக்கும். தேன் வாங்கி அபிஷேகத்துக்கு கொடுத்தால் குரல் வளம் பெருகும். பழங்களை அபிஷேகத்திற்குக் கொடுத்தால் விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும். நெய்அபிஷேகம் செய்தால் முக்தி பேறு கிடைக்கும். இளநீர் அபிஷேகம் செய்தால் நல்ல மக்கள் பேறு கிடைக்கும். எண்ணெய் அபிஷேகம் செய்தால் சுகமான வாழ்வு கிடைக்கும். சர்க்கரை அபிஷேகம் செய்தால் எதிர்ப்புகள் மறையும். சந்தன அபிஷேகம் செய்தால் சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் தெய்வ தரிசனம் கிடைக்கும்.
‘ஓம் தத் புருஷாய வித்மஹே
மகாதேவாய தீமஹி
தன்னோ ருத்ர பிரஜோதயாத்’
எனக் கூறி சிவபெருமானை வழிபடுங்கள். குரு வார பிரதோஷமான இன்று சிவபெருமானையும் நந்தி தேவரையும் குரு பகவானையும் வணங்கி பேரருள் பெறுங்கள்.