வீட்டில் தீபம் ஏற்றுவது என்பது ஒரு நல்ல சகுனமாகும். தினமும் காலையும், மாலையும் தீபம் ஏற்றி கடவுளை வழிபடுவதால் வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி உருவாகும். கோயில்களில் இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது என்பது இன்றளவிலும் மரபாக உள்ளது.
தீபம் என்பது இருளை விலக்கக்கூடியது. வீட்டிலே தீபம் ஏற்றுவதால் அமைதியும் செல்வமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படி வீட்டில் தீபம் ஏற்றும்போது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது எந்த எண்ணையை பயன்படுத்துகிறோம் என்பதைதான். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு எண்ணைக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. நெய் தீபம்: சுத்தமான பசு நெய்யால் வீட்டில் தீபம் ஏற்றுவது எல்லா வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். இன்று கடைகளில் கிடைக்கும் கலப்பட நெய்யில்லாமல் பால் வணிகம் செய்பவர்களிடம் கேட்டு வாங்கிய சுத்தமான நெய்யில் தீபமிடுவது சிறந்ததாகும். நெய் தீபம் ஏற்றுவதால் ஏழ்மை ஒழியும் என்றும் மஹாலட்சுமி அந்த வீட்டில் வாசம் செய்வாள் என்றும் கூறப்படுகிறது.
2. இலுப்பை எண்ணெய் தீபம்: இலுப்பை எண்ணெய்யை வீட்டில் தினமும் ஏற்றி வைப்பதால், நெகட்டிவ் எனர்ஜி நீங்கி, பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் என்றும் மகிழ்ச்சி, அமைதி, செல்வம் போன்றவையும் வந்து சேரும் என்று நம்பப்படுகிறது. சித்தர்கள் இந்த எண்ணெய்யை மிகவும் புனிதமாகக் கருதினர். சித்த மருத்துவத்தில் இலுப்பை எண்ணெய் இன்றியமையாத ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
3. விளக்கெண்ணெய் தீபம்: விளக்கெண்ணெய் தீபம் வீட்டில் ஏற்றி வைப்பதால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கி பாஸிட்டிவ் எனர்ஜி வரும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் ஆரோக்கியம், செல்வ வளம் போன்றவற்றையும் இது தரும். இது தூய்மையையும், புனிதத்தையும் தரக்கூடியதாகும்.
4. எள் எண்ணெய் தீபம்: எள் எண்ணெய் என்பது வேறு எதுவுமில்லை நல்லெண்ணெய்தான். எள் எண்ணெய்யில் தீபம் ஏற்றுவது வீட்டில் உள்ள தோஷம், தீய சக்தி போன்றவற்றை நீக்கும். பைரவருக்கு எள் எண்ணெய் ஏற்றி வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும். நீண்ட காலமாக இருக்கும் தடைகள், பிரச்னைகளை எள் எண்ணெய் தீபம் நீக்கும்.
5. வேப்பெண்ணெய் தீபம்: வேப்பெண்ணெய்யை வீட்டில் ஏற்றி வைப்பது செல்வத்தை பெருக்கும். எதிரிகளால் ஏற்படும் பிரச்னை நீங்க பைரவரை பௌர்ணமி அல்லது கிருஷ்ணாஷ்டமி அன்று எட்டு வேப்பெண்ணெய் தீபம் ஏற்றி சகஸ்ரநாம அர்ச்சனை சொல்லி வழிபடும்போது எல்லா பிரச்னைகளும் நீங்கும். அதுமட்டுமில்லாமல், வீட்டில் வேப்பெண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பது, கொசுக்களை விரட்டுவதற்கு உதவும்.
எள் எண்ணெய் 35 சதவிகிதம், நெய் 20 சதவிகிதம், இலுப்பெண்ணெய் 20 சதவிகிதம், விளக்கெண்ணெய் 15 சதவிகிதம், வேப்பெண்ணெய் 10 சதவிகிதம் ஆகியவற்றை சேர்த்து பஞ்ச தீப விளக்கேற்றுவதால், அனைத்துத் தடைகளும் நீங்கி, எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். தேங்காய் எண்ணெய்யில் கணபதிக்கு விளக்கேற்றுவது மிகவும் விசேஷமாகும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி கூடும், தடைகள் நீங்கும்.
இந்த ஐந்து எண்ணெய்களின் முக்கியத்துவம் அறிந்து அதை சரியான முறையில் கலந்து வீட்டில் பயன்படுத்தி வந்தால், மகிழ்ச்சி, புகழ், செல்வ செழிப்பு, ஆரோக்கியம் ஆகியவற்றை தரும் என்பது அனுபவத்தில் உணரலாம்.
இவை தவிர, கடுகெண்ணெய்யில் தீபமேற்றுவது சனீஸ்வரனால் ஏற்படும் இன்னல்கள் மற்றும் தோஷங்களை நீக்க வல்லதாகும். கடுகெண்ணெய்யில் விளக்கேற்றினால் காற்றை சுத்தப்படுத்தி மாசுவை நீக்கும். தீபாவளி பண்டிகை நாட்களில் கடுகெண்ணையை வைத்தே விளக்கேற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மையான கடுகெண்ணெய்யை கடைகளில் வாங்குவதை விடுத்து, ஆயில் மில்களில் வாங்கிப் பயன்படுத்துவது நலம்.