ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நன்மை தரும் ஆற்றல் உண்டு என்கிறது கிரக சாஸ்திரங்கள். அந்த வகையில், சந்திரனிடமிருந்து வரும் காந்த சக்தி மின் அலைகள் நம் உடலில் அன்பையும், அமைதியையும், சாந்தத்தையும், இன்பத்தையும், குளிர்ச்சியையும் உண்டாக்குகிறது.
செவ்வாய் கிரகத்திலிருந்து வரும் சக்தி அலைகள், நம் உடலில் இரத்த அணுக்கள் விருத்தியடையவும், இரத்த ஓட்டம் சிறப்பாக நடைபெறவும், செயல் வீரம், வெற்றியளிக்கக்கூடிய உணர்ச்சிகளையும் உண்டாக்குகிறது.
புதனிடமிருந்து வரும் சக்தி அலைகள் நமது மூளை நரம்புகளை இயக்கி, மகத்தான புத்தி, சாதுரியம், சாகசச் செயல்கள் புரியும் சக்திகளையும், உணர்ச்சிகளையும் உண்டாக்குகிறது.
வியாழனிடமிருந்து வரும் சக்தி அலைகள் நமக்கு மகத்தான அறிவு, ஞானம், பக்தி, பண்பு, நீதி, நேர்மை, சத்தியம், யோகம் போன்ற உள்ள உணர்ச்சிகளை உண்டாக்குகிறது.
சுக்ரனிடமிருந்து வரும் சக்தி அலைகள் நமது உயிர் அணுக்களை வளர்த்து, காதல் உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டுச் சந்தான விருத்தியை உண்டாக்குகிறது.
சனி பகவானிடமிருந்து வரும் சக்தி அலைகள் யாராவது நீதி, நேர்மை, சத்தியம், அன்பு, அஹிம்சை, பண்பு, பக்திக்கு விரோதமான காரியங்களை செய்தால், அவர்களுக்கு பலவிதமான இடையூறுகளையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும், துன்பங்களையும், தீமைகளையும் உண்டாக்குகிறது.
ராகுவிடமிருந்து வரும் சக்தி அலைகள். நமது உடலில் உண்டாகும் விஷப் பொருட்களை வெளியேற்றி உடல் சிறப்பாக செயல்புரியும்படி செய்கிறது.
கேதுவிடமிருந்து வரும் சக்தி அலைகள் உலக வாழ்வில் வெறுப்பையும், ஞானம், மோகம், தெய்வீகம், ஆன்மிகம் முதலிய தத்துவ சாஸ்திரங்களில் ஈடுபாட்டையும் உண்டாக்குகிறது.
தர்மபுரியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள பாப்பாரப்பட்டி ஸ்ரீ அபிஷ்ட வரதராஜர் கோயிலில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத வகையில் நவகிரகங்கள் பெண்கள் வடிவில் காட்சியளிக்கின்றனர். மதுரை அருகில் உள்ள நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நவகிரகங்கள் நின்ற நிலையில் இல்லாமல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியம் எனும் ஊரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் இளமைக் கோலத்தில் காட்சியளிக்கிறார். நவகிரகங்களை மிகப்பெரிய கோயில்களில் கூட தனித்தனியாகத்தான் தரிசிக்க முடியும். ஆனால், இங்கு நவகிரகங்கள் அவர்களுடைய தேவியருடன் எழுந்தருளி உள்ளது மட்டுமில்லாமல், அவரவருக்குரிய வாகனங்களில் தங்கள் தேவியருடன் இருத்தி அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு.
ஆளுக்கொரு திசையைப் பார்க்கும் நவகிரகங்களை எல்லா இடங்களிலும் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்த நவகிரகங்களை தங்கள் பெயரால் ஒவ்வொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்த தலத்தை திருவாரூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தங்கூர் வெள்ளிமலை நாதர் கோயிலில் காணலாம். இவர்களை வணங்கினால் நவகிரக தோஷங்கள் தீரும் என்பது நம்பிக்கை.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ஆவுடையார்கோவில். இங்கு நவகிரகங்களை தூண்களில் காணலாம். இங்குள்ள தூண் ஒன்றில் நவகிரகங்கள் கல்லில் அடித்து வைக்கப்பட்டுள்ளன. தனியாக இக்கோயிலில் நவகிரகங்கள் இல்லை. சன்னிதி மேற்புறத்தில் 27 நட்சத்திர வடிவங்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
திருப்பதியிலிருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள காளஹஸ்தி சிவன் கோயிலில் சிவலிங்கத்தின் மீது ஒரு கவசம் இருக்கிறது. அது நவகிரகங்கள் பொறித்த வெள்ளிக்கவசம். நவகிரகங்கள் எம்பெருமானுடன் ஒன்றி இருக்கும் அபூர்வ திருத்தலம் இது. இங்கு நவகிரகங்களுக்கு தனிச் சன்னிதி கிடையாது.
பொதுவாக, நவகிரகங்கள் அதற்கான இடத்தில் தங்களது திசையை நோக்கியபடி இருப்பர். அரிதாக சில தலங்களில் கிரகங்கள் நேர் வரிசையில் இருக்கும். ஆனால், தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள நவகிரகங்கள் மண்டபத்தில் அதனதன் திசையிலும், மண்டபத்தின் முன்னால் நேர் வரிசையிலும் கிரகங்கள் உள்ளன. ஒரே இடத்தில் இரட்டை நவகிரகங்கள் அமைப்பு இருப்பது இங்கு மட்டுமே.