புரட்டாசி மாதத்தில் துளசியை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்!

Puratasi and Tulsi worship
Puratasi and Tulsi worship
Published on

காவிஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானது துளசி. இது மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படுகிறது. அதனாலேயே துளசியை வளர்த்து பூஜித்து வரும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகின்றது. அதனால் புரட்டாசி மாதம் துளசி புண்ணியப் பொருளாகப் பார்க்கப்படுகிறது.

புரட்டாசி மாதம் திருமாலை தரிசிப்பதற்கு உண்டான மாதம். புரட்டாசி மாதம் என்பது துளசிக்கும் மகத்தான மாதம். இந்த மாதத்தில் ‘கோவிந்தா’ என்று பெருமாளின் திருநாமம் சொல்லி, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அவை யாவும் வெற்றியில் முடியும் என்பது நம்பிக்கை.

துளசி, பொதுவாகவே மணம் கமழக்கூடியதுதான் என்றாலும் புரட்டாசி மாதத்தில் இன்னும் மகிழ்வுடன் தனது நறுமணத்தைப் பரப்பும் என்பதாக ஐதீகம். இந்த மாதத்தில், தனது சக்தியையும் நறுமணத்தையும் வீரிய குணங்களையும் ஒருங்கே கொண்டு, தன்னை வணங்கும் பக்தர்களையும் காத்தருளும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

துளசி சுத்தமான இடத்திலேயே வளரும் தன்மை கொண்டது. எனவே, இதை வீடுகளில் வளர்த்து வந்தால் அவ்விடத்தின் தோஷம் அகலும். மேலும், துளசியை வழிபட்டு வருவதால் சகல பாக்கியங்களும் உண்டாகும். எந்தப் பொருளை தானம் கொடுத்தாலும் அதன் மீது துளசி இலை ஒன்றை வைத்தே தானம் அளிக்க வேண்டும். தானம் கொடுக்கப்படும் பொருளைக் காட்டிலும் துளசிக்கே அதிக மகிமை என்பதால் துளசி தானம் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில், பெருமாளுக்கு துளசி மாலை சாத்தும்போது, ‘தனது மணாளன் தோளில் சேரப்போகிறோம், அணிகலன் போல் நம்மை சாத்தப் போகிறார்கள்’ என்றெண்ணி மகிழ்ந்து போகிறாளாம் மகாலட்சுமி. துளசியானது புனிதத் தன்மை வாய்ந்தது. பெருமாளுக்கு சாத்தப்படும் முக்கிய பூ உள்ளிட்டவற்றில் துளசிக்கு மகத்தானதொரு இடமுண்டு. துளசிச் செடியை வளர்ப்பதும் துளசிச் செடியை சுற்றி வந்து வணங்குவதும் மகாபுண்ணியம் என்று போற்றுகிறது புராணம். மேலும், இதுவரை வீட்டில் துளசிச்செடி இல்லாவிட்டாலும் கூட, வளர்க்காவிட்டாலும் கூட, புரட்டாசி மாதத்தில் துளசிச்செடியை வீட்டில் வளர்ப்பது சகல ஐஸ்வர்யங்களும் தந்தருளும். இல்லத்தில் சுபிட்சம் குடிகொள்ளும்.

இதையும் படியுங்கள்:
கல்லீரல் ஆரோக்கியமாக செயல்பட பின்பற்ற வேண்டிய 8 வழிமுறைகள்!
Puratasi and Tulsi worship

நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும். துளசியில் அனைத்து தேவதைகளும் வாழ்வதாக ஐதீகம். துளசி இலை பட்ட நீர், கங்கை நீருக்கு இணையான புனிதத் தீர்த்தமாகக் கருதப்படுகிறது. துளசியை பூஜை செய்து வழிபட்டு வந்தால் அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். கன்னிப் பெண்கள் துளசியை வழிபட்டால் திருமணத் தடை நீங்கி, நல்ல மண வாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் துளசியை வழிபடுவதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

வெளியிலிருந்து வீட்டுக்குள் வரும் புற அதிர்வுகள் கண்களுக்குப் புலனாகாத வீச்சுகள் நிறைந்தவை என்றும் இந்தக் கெடுதல் நிறைந்த தீய அதிர்வுகளை அழித்து, நல்ல அதிர்வுகளைத் தக்க வைக்கும் வல்லமை உடையது துளசி என்பது பழங்கால நம்பிக்கை. இதன் அடிப்படையில்தான், அந்நாட்களில் இல்லங்கள் தோறும் நிலை வாயிலுக்கு நேராக முற்றங்களில் துளசி மாடம் வைப்பது கடைப்பிடிக்கப்பெற்றது. கண் ஏறு, தீய எண்ண அலைகள் ஆகியவற்றை ஈர்க்க வல்ல அபார சக்தி உடையது துளசி. சுற்றுப்புறத்திலுள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் துளசிக்கு உண்டு என்பதும், துளசி வாசம் நிறைந்த காற்றினை சுவாசிக்கும்போது சுவாசப் பாதையில் உள்ள கிருமித்தொற்றுகள் அழிக்கப்பெறுகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com