பண வரவு தரும் வெற்றிலை தீபம்!

betal deepam
betal deepam

பெரும்பாலான மனக்கஷ்டங்கள் பணத்தின் அடிப்படையிலேயே வருகின்றன. எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும், அவரிடம் உள்ள பொருளாதாரத்தை வைத்தே ஒரு மனிதருக்கு மதிப்பையும், மரியாதையையும் சமூகம் தருகிறது. பண வரவை பெருகச் செய்யும் தாயாராக ஸ்ரீ மகாலட்சுமி விளங்குகிறார். அன்னை மகாலட்சுமியின் கருணை பார்வை பெற்று பண வரவைப் பெருகச் செய்வதற்கான எளிமையான வழிபாடுதான் வெற்றிலை தீபம் ஏற்றும் முறை. மகாலட்சுமியை மனதில் நினைத்து இந்த தீபத்தை வீட்டில் ஏற்றினால் கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும். குறிப்பாக, கடன் பிரச்னை, பணப் பிரச்னைகளில் இருந்து விடுபட, இந்த வெற்றிலை தீப வழிபாட்டைச் செய்யலாம்.

மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கலகரமான இலை வெற்றிலை. இந்த இலையில் முறைப்படி தீபத்தை ஏற்றி வழிபட்டால் தீராத பணக்கஷ்டம் விரைவில் தீர வழி பிறக்கும். இந்த வழிபாட்டை மேற்கொள்ள ஒரு வெற்றிலையும், சின்ன மண் அகல் விளக்கும் தேவை. மண் அகலில் பசு நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும். திரி மஞ்சள் நிறத்தில் இருக்க கொஞ்சமாக மஞ்சள் தூளில் தண்ணீர் அல்லது பன்னீர் ஊற்றி இந்த திரியை போட்டு பிசைந்த நிலையில் காய வைத்தால் மஞ்சள் திரி தயார். மஞ்சள் செல்வம் தரும் குரு பகவானுக்கு உகந்தது.

அந்தி சாய்ந்ததும்  மாலை 6 மணிக்கு இந்த விளக்கை ஏற்ற வேண்டும். வீட்டின் நிலை வாசலுக்கு உள்பக்கத்தில் மகாலட்சுமியை நினைத்து ஒரு தட்டின் மேல் வெற்றிலையைக் கழுவி, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து அதன் மேலே இந்த அகல் விளக்கில் நெய் ஊற்றி, மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். அந்த வெற்றிலையின் மேல் மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக இரண்டு டைமண்ட் கற்கண்டுகளை வைத்து தீபம் ஏற்றி மனமுருகி மகாலட்சுமியை  வீட்டுக்குள் வரவேற்று  வேண்டுங்கள். விளக்கை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் ஏற்றக் கூடாது. நிலை வாசலுக்கு உள்பக்கத்தில் கிழக்கு பார்த்தவாறு இந்த விளக்கை ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த விளக்கின் முன்பு அமர்ந்து திருவிளக்கு மந்திரம் தெரிந்தால் சொல்லி, ‘மகாலட்சுமி தாயே வருக வருக’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். அந்த கற்கண்டுகளை எடுத்து நிலை வாசலுக்கு வெளியில் இரண்டு பக்கத்திலும் போட்டு விடுங்கள். அதை எறும்புகள் வந்து சாப்பிட்டால் குடும்பத்திற்கு மிக மிக நல்லது.

இதையும் படியுங்கள்:
கலியுகக் கவலைகளைத் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம்!
betal deepam

இந்த எளிதான வெற்றிலை தீப வழிபாட்டை தினமும் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்து மகாலட்சுமியை  அழைக்கலாம். மகாலட்சுமி விரும்பி வீட்டிற்குள் வந்து  நம் நிலையை நிச்சயமாக மாற்றிவிடுவாள். இந்த வெற்றிலை தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. தினமும் இந்த விளக்கை ஏற்ற முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமாவது ஏற்றினால் மகாலட்சுமி நிச்சயம் மனம் மகிழ்ந்து வரங்களை கொடுப்பாள். தினமும் பழைய வெற்றிலையை மாற்றி புது வெற்றிலையில்தான் தீபமேற்ற வேண்டும். ஆனால், அதே மண் அகல் விளக்கைத் துடைத்து தினமும் தீபம் ஏற்றலாம். பண வரவு வேண்டும் என்பவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்து 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றினால் பண வரவு நிச்சயம் ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com