பக்தர்களுக்காகக் காத்திருக்கும் கங்கை: பிறவிப் பயனைத் தரும் காவிரி கடைமுகம்!

நவம்பர் 16, ஐப்பசி கடைமுகம்
Thula Snana Mahimai
Aippasi kadaimugam
Published on

வ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஏதாவது ஒரு சிறப்பு இருக்கும். அதன்படி ஐப்பசி மாதமான துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது ‘துலா ஸ்நானம்’ என்னும் மிகப் புண்ணியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது காவிரி பாயும் மயிலாடுதுறையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு துலா புரணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

பகீரதன் தவம் செய்து வானுலக நதியான கங்கையை பூமிக்கு அழைக்கிறான்.  "எண்ணற்ற பாவங்களை செய்துவிட்டு மக்கள் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதனால் நான் பூமிக்கு வர மாட்டேன்" என்று மிகவும்  தயக்கத்துடன் மறுக்கிறாள் கங்கா தேவி. உடனே பகீரதன், "பாவம் செய்பவர்களை மட்டும் ஏன் நினைக்கிறாய்? நீ பூமிக்கு வந்தால் எத்தனையோ மகான்கள் உன்னில் நீராடுவார்களே? உனக்கு எவ்வளவு புண்ணியம் சேரும்? அதை கொஞ்சம் நினைத்துப் பார்த்து பூமிக்கு வா தாயே!" என்று இறைஞ்சுகிறான்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட பாரம்பரியப் பரிகாரங்கள்!
Thula Snana Mahimai

உடனே பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதிக்கிறாள் கங்கா தேவி. அதன்படியே வந்து வடக்கில் குடிகொள்கிறாள். வடக்கில் வசிக்கும் கங்கா தேவி, தென்னக மக்களும் பயன் பெறும் வகையில் துலா மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள் என்கிறது துலா புராணக் கதை. எனவேதான், ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடுவதை சிறப்பாகக் கருதி முன்னோர்கள் நீராடி வந்தனர். இதுவே 'துலா ஸ்நானம்' என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

ஐப்பசி மாதத்தில் காவிரியில் கங்கா தேவியும் வாசம் செய்வதால் காவிரியில் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மக்கள் மட்டுமல்ல, மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் அனைத்து மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளுவர். இதனையொட்டி  தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் செய்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
பயத்தைப் போக்கும் ரகசியம்: ஸ்ரீகிருஷ்ணர் கற்றுத் தந்த பாடம்!
Thula Snana Mahimai

ஐப்பசி மாதம் கடைசி நாள் காவிரியில் நீராடுவதை 'கடைமுழுக்கு' என்றும் 'கடைமுகம்’ என்றும் சிறப்பித்துச் சொல்கிறார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள் கடைசி நாளன்று மட்டுமாவது நீராடி தங்கள் ஜன்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். அது மட்டுமல்ல,  ஐப்பசி மாத கடைசி நாளுக்கு அடுத்த நாளான கார்த்திகை மாத முதல் நாளன்றும் துலா ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. அதற்கும் ஒரு நிகழ்வு காரணமாக இருக்கிறது.

மாயவரத்துக்கு பக்கத்து ஊர்க்காரர் ஒருவர், கால் ஊனமுற்றவர். அவருக்குக் கடை முழுக்கு நாளன்று காவிரியில் நீராட ஆவல். எனவே, மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார். ஆனால், கடைமுழுக்கின் மறு நாள்தான் அவரால் துலா ஸ்நான கட்டத்திற்கு வந்து சேர முடிந்தது. இதனையறிந்த கருணை மிகுந்த கங்கா தேவி அவருக்கு அருள்புரிய கடைமுழுக்கிற்கு அடுத்த நாளும் காவிரியில் இருந்தாள். அன்று நீராடிய அந்த ஊனமுற்றவரின் உடல் ஊனம் நீங்கி, முழு உடல் நலம் பெற்றார்.

இதையும் படியுங்கள்:
நடராஜர் சிலையை வீட்டில் வைக்கலாமா? வாஸ்து சொல்லும் ரகசியங்கள்!
Thula Snana Mahimai

இதனால் கடைமுழுக்கிற்கு அடுத்த நாளை (கார்த்திகை மாத முதல் நாள்) 'முடவன் முழுக்கு' என்றழைக்கிறார்கள். எனவேதான் ஐப்பசி கடைசி நாள் அன்று கடைமுழுக்கிற்காக மயிலாடுதுறை செல்ல இயலாதவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதியும் சென்று நீராடலாம். அன்றைய தினமும் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறாள் கங்கா தேவி என்கின்றன புராணங்கள்.

அதனால் முடிந்தவர்கள் காவிரியில் ஐப்பசி கடைமுழுக்கு அன்று நீராடியோ அல்லது முடியாதவர் கார்த்திகை முதல் நாள் முடவன் முழுக்கு நீராடியோ ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடிய துலா ஸ்நான புண்ணியப் பலனைப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com