நடராஜரின் நடன அசைவுகளைப் பற்றி விளக்குவதே நாட்டிய சாஸ்திரம் ஆகும். சிவ வழிபாட்டில் முக்கியமாக நடராஜ வடிவம் விளங்குகிறது. நடராஜரை சுற்றியுள்ள வட்டம் அண்ட நெருப்பை குறிக்கிறது. இது மனித வாழ்க்கையின் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியைக் குறிக்கிறது. எனவே, மனித இனத்தின் படைப்பு மற்றும் அழிவின் அடையாளமான சிவபெருமானின் நடராஜ சிலையை வீட்டில் வைத்திருப்பது மங்கலகரமான விஷயமாகக் கருதப்படுவதில்லை.
வாஸ்து சாஸ்திரப்படி சிவபெருமானின் நடராஜ வடிவம் அழிவுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. இதனால் நடராஜர் ஓவியம், படம் மற்றும் சிலை போன்றவற்றை வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. இந்து மத சாஸ்திரங்களும், வேதங்களும் நடராஜரை கலைத் திறனின் அடையாளமாகவும், பெருமான் தன்னை மறந்து ஆடுவதைப் போலவும் குறிப்பிடுகின்றன.
இந்த நடனக் கோலம் என்பது காண்பவரை பரவசமடையச் செய்து அழகான தோற்றத்துடன் இருந்தாலும் இது சிவனின் கோபத்தையே குறிப்பாகச் சொல்லப்படுவதால் வீடுகளில் பூஜை அறையில் நடராஜர் சிலையையோ அல்லது வடிவத்தையோ வைக்காமல் இருப்பதே நல்லது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இருந்தும் சிலர் வீட்டில் நடராஜர் சிலையை வைக்க வேணடும் என்றால் அதற்கு சில விதிகள் உண்டு. அதை கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நடராஜர் சிலையை வீட்டில் வைத்து வழிபட விரும்பினால், அது ஆக்ரோஷமான ரூபமாக இல்லாமலும் மிகச் சிறிய அளவில் இருக்கும் வகையிலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், நடராஜர் சிலையை வீட்டில் வைப்பதாக இருந்தால் அதனுடன் சேர்த்து மற்ற தெய்வச் சிலைகளை வைக்கக் கூடாது. மகிழ்ச்சியான தோற்றத்தில் இருக்கும்படியான நடராஜரை ஒரு மேடை மீது வைக்கலாம். குறிப்பாக, நடராஜர் சிலையை வீட்டின் வடகிழக்கு மூலையில் உயரமான இடத்தில் வைக்க வேண்டும். சிலையைச் சுற்றி வேறு எதுவும் இருக்கக் கூடாது.
அதேபோல், தினமும் சிலையை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். அது மட்டுமின்றி, பிரதோஷ காலங்களில் மாதம் ஒரு முறையாவது நடராஜர் சிலைக்கு பூஜை செய்ய வேண்டியது அவசியம்.