பக்திக்கு மெச்சி கம்பத்தில் காட்சி தந்த முருகப்பெருமான்!

கம்பத்திளையனார் சன்னிதி
கம்பத்திளையனார் சன்னிதி

திருவண்ணாமலை என்றாலே அண்ணாமலையார்தான் நினைவிற்கு வருவார். ஆனால், அதே திருவண்ணாமலையில் அடியவரின் பக்திக்கு மெச்சி தூணில் காட்சி தந்த முருகப்பெருமானின் கதை தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

திருவண்ணாமலையை ஆட்சி செய்த மன்னன் பிரபுடதேவன். இவரும் அருணகிரிநாதரும் சிறந்த நண்பர்கள். அருணகிரிநாதர் சிறந்த முருக பக்தர், முருகப்பெருமானை நேரில் கண்டவர்.

மன்னரின் அவையில் சம்பந்தாண்டான் என்ற அம்பாள் உபாசகர் ஒருவர் இருந்தார். இவரும் இறையருள் பெற்றவர்தான். இருந்தாலும் மிகுந்த தலைக்கனம் கொண்டவர். மன்னருக்கும், அருணகிரிநாதருக்கும் இருக்கும் நட்பை சம்பந்தாண்டான் விரும்பவில்லை. அதனால் அருணகிரிநாதரை அவமானப்படுத்த எண்ணினான். அதனால் சம்பந்தாண்டான் அருணகிரிநாதரை ஒரு போட்டிக்கு அழைத்தான். என்னுடைய சக்தியால் ஆதிபராசக்தியை நேரில் எழுந்தருளச் செய்கிறேன். அருணகிரிநாதரால் முடிந்தால் முருகனை எழுதருளச் செய்யட்டும்’ என்று அருணகிரிநாதரிடம் சவால் விடுகிறான் சம்பந்தாண்டான்.

திருவண்ணாமலையில் இருக்கின்ற சிவகங்கை தீர்த்தக்கரையில் மன்றம் கூடுகிறது. சம்பந்தாண்டான் தேவியை அழைக்கிறான். ‘பக்தியோடு வேண்டி அழைத்தால் ஓடோடி வரும் அன்னை, வேண்டுமென்றே அழைத்தால் எப்படி வருவாள்?' சம்பந்தாண்டான் தனது முயற்சியில் தோல்வியடைகிறான். இப்போது அருணகிரிநாதரின் முறை வருகிறது. முருகப்பெருமானை நினைத்து பக்தியோடு துதிக்கத் தொடங்கினார் அருணகிரிநாதர்.

அப்போதும் அம்பாள் ஒரு சிறு விளையாட்டை நிகழ்த்த எண்ணினாள். அதனால் முருகனை தனது மடியில் அமர்த்தி, தம் கரத்தால் அணைத்துக் கொண்டாள். அருணகிரிநாதர் பாடலுக்கு எழுந்தோடி வர முடியாமல் அன்புக்கும், பக்திக்கும் நடுவிலே அல்லாடினார் முருகன். இந்தக் காட்சியை அருணகிரிநாதர் தனது மனக்கண்ணில் தெரிந்துக்கொள்கிறார். தன்னுடைய பாடலின் வரிகளைச் சற்று மாற்றிப்பாடுகிறார்.’ மயில் ஆடி வர அதில் நீ ஏறி என்னை வந்து காக்க வேண்டும்' என்று பாடுகிறார் அருணகிரிநாதர். இதைக் கேட்டதும் அன்னைக்கு மனமும், கரமும் ஒருசேர நெகிழ்ந்தது. மெல்ல முருகனை செல்ல விடுத்தாள்.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானை சயனக்கோலத்தில் தரிசித்ததுண்டா?
கம்பத்திளையனார் சன்னிதி

அடுத்த நொடி மயில் மீதேறி அமர்ந்த முருகன் ஒரு கணமும் தாமதிக்காமல், அங்கிருந்த முருகன் சன்னிதி மண்டபத் தூணில் காட்சி தந்தார். சூரியன் உதிப்பதை எப்படி மக்கள் அனைவராலும் காண முடியுமோ? அதேபோல அங்கே முருகன் உதித்ததை மன்னர் முதல் மக்கள் அனைவரும் கண்டு தரிசித்தனர். கம்பத்திலிருந்து வெளிப்பட்டதால் திருவண்ணாமலையில் அருளும் முருகப்பெருமானுக்கு ‘கம்பத்திளையனார்’ என்ற பெயர் வந்தது. தனது பக்தனை காப்பதற்காக தூணில் காட்சி தந்த முருகனின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறதல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com