சிவபெருமானை லிங்க வடிவில் பார்த்திருப்போம். ஆனால் அவரை பள்ளிக்கொண்ட பெருமாள் போல சயனக்கோலத்தில் பார்த்திருக்கிறீர்களா? அத்தகைய அதிசயம் வாய்ந்த கோவில் இருக்கிறது. அதைப்பற்றி தான் இந்த பதிவில் விரிவாகக் காண உள்ளோம்.
ஆந்திர மாநிலம் சித்தூர் வட்டம் நாகலாபுரம் அருகேயுள்ளது சுருட்டப்பள்ளி என்னும் இடத்தில் பள்ளிக்கொண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. பள்ளிக்கொண்டேஸ்வரர் கோவிலில் இருக்கும் மூர்த்திகள் பெரும்பாலும் குடும்பசமேதமாக காட்சியளிப்பது இக்கோவிலின் முக்கிய சிறப்பம்சமாகும்.
இந்த ஆலயத்தில் அருளும் பள்ளிக்கொண்டீஸ்வரர் சர்வமங்களாம்பிகையின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தருகிறார். அதாவது பெருமாள் படுத்திருக்கும் சயனக்கோலம் போலவே சிவபெருமானும் காட்சி தருக்கிறார்.
இந்திரன் பார்க்கடலை கடைய முற்பட்டான். அப்போது பெருமாளின் உதவியுடன் அசுரர்கள் ஒருபுறமும், தேவர்கள் ஒருபுறமும் வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும், மந்திரமலையை மத்தாகவும் வைத்து பார்க்கடலை கடைந்தனர். இருபுறமும் இழுத்து பிடித்ததால் வாசுகி நாகம் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தை கக்கியது. இதனால் அனைவரும் சிவப்பெருமானிடம் சென்று உதவிக் கேட்டனர். அப்போது சிவப்பெருமான் ஆலக்கால விஷத்தை எடுத்து விழுங்கினார். அந்த விஷம் சிவபெருமானின் உடலில் இறங்காமல் இருக்க ஈசனின் கழுத்தை பிடித்து தடுத்தாள் பார்வதிதேவி.
அதனால் விஷம் கண்டத்திலேயே நின்றுவிட்டது. அதனால்தான் ஈசனை நீலக்கண்டன் என்று அழைக்கிறோம். இதன் பிறகு பார்வதிதேவியுன் கைலாயம் புறப்பட்டார் ஈசன். அவர் போகும் வழியிலேயே விஷம் அருந்தியதால் களைப்பு ஏற்பட்டது. எனவே அவர் பார்வதிதேவியின் மடியில் தலை வைத்து சயனித்தார் அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் பார்வதிதேவி சர்வமங்களாம்பிகை என்ற பெயரில் அருள்புரிகிறார். இந்த ஆலயத்தில் பள்ளிக்கொண்டீஸ்வரர் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
இந்த ஆலயத்தில்தான் முதல்முதலில் பிரதோஷம் நடத்தப்பட்டதாகவும் அதன் பிறகே மற்ற சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இக்கோவிலில் பிரதோஷக்கால வழிப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் திருவாதிரை, மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெருகிறது. இத்தலத்தில் இரண்டு நந்திகேஷ்வரரை தரிசிக்கலாம்.
தக்ஷணாமூர்த்தி தன் மனைவி தாராவுடன் தாம்பத்திய தக்ஷணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சனிபிரதோஷத்தில் கலந்துக்கொண்டு இறைவனை தரிசித்தால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், தம்பதியர் ஒற்றுமை நிகழும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. விஷம் அருந்திய ஈசன் சுருண்டு போய் பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு பெயர் சுருட்டப்பள்ளி என்று வந்தது. இக்கோவிலின் மூலவர் பள்ளிக்கொண்டீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த சிவப்பெருமானிடம் வேண்டியது நிறைவேறியதும், பக்தர்கள் பிரதோஷம் அன்று வில்வ மாலையை சிவப்பெருமானுக்கு சமர்ப்பித்தி தங்கள் நன்றியை தெரிவிக்கிறார்கள்.