

சனாதன தர்மத்தை பின்பற்றும் இந்துக்கள் சுபநிகழ்வுகள் மற்றும் திருவிழா காலங்களில், பெரியோர்கள் மற்றும் ஆன்மீகவாதிகளை கண்டால் ஆசிர்வாதம் வாங்க அவர்களின் காலில் விழுகின்றனர். ஒருவரை ஆசிர்வதிக்க பெரியோர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் வலது கையை மட்டுமே பயன்படுத்து கிறார்கள், கோயில்களில் இறைவனின் திருக்கரங்களில் வலது கை மட்டும் ஆசீர்வதிப்பதாய் இருக்கிறது.
நாம் தானம் செய்யும்போது கூட வலது கையை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஒருவரை ஆசீர்வதிக்க வலது கையை எதற்காக பயன்படுத்துகிறோம்? இடது கையைவிட வலது கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இதன் பின்னால் உள்ள பாரம்பரிய மற்றும் ஆன்மிக அறிவியல் காரணங்களை ஆராய்வோம்!
வலது கை பற்றிய ஆன்மீக காரணங்கள்
சூரிய அம்சம்:
ஜோதிட அறிவியலின்படி மனித உடலின் வலது பக்கம் சூரியனின் ஆதிக்கம் கொண்டது. சூரியன்தான் உலகிற்கு ஒளியை தருபவர், சூரியன்தான் உலகில் உள்ள ஒவ்வொரு உயிர்களுக்கும் ஆற்றலை தருபவர், இவர்தான் உலகம் இயங்க முக்கிய இயற்கை காரணமாக இருப்பவர். ஆன்மீகம் படி ஒருவர் தனது வலது கையால் ஆசீர்வதிக்கும் போது அவரிடம் உள்ள சூரிய ஆற்றலானது, ஆசிர்வாதம் பெறுபவர்களுக்கு செல்வதாக கூறப்படுகிறது.
பிங்கல நாடியின் சக்தி:
நம் உடலில் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என மூன்று முக்கிய நாடிகள் இருப்பதாக யோக அறிவியல் கூறுகிறது. நமது உடலின் வலது பக்கம் முழுவதும் பிங்கல நாடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது உடலுக்கு ஆற்றலையும், சுறுசுறுப்பையும், கதகதப்பையும் தருகிறது. பிங்கல நாடி ஆற்றலை கொடுக்கும் நரம்பு மண்டலமாக இருப்பதால், வலது கையால் ஆசீர்வதிப்பது சக்தியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
தட்சிணாசாரம்:
ஆன்மீகத்தின்படி தட்சிணம் என்பது வலது என்று அர்த்தம், இது நேர்மை, தூய்மை, மங்களம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது. இதன்படி கடவுள் சிலைகளும் கூட வலது கையால் ஆசீர்வாதம் செய்யும் வகைகள் அமைக்கப்படுகிறது. இது பக்தர்களுக்கு அருளையும் செல்வத்தையும் வழங்கும் குறியீடாக இருக்கிறது.
அறிவியல் முறைப்படி வலது கை ஆற்றல்:
அறிவியல் ரீதியாக நமது உடலானது மின்காந்த களமாக செயல்படுகிறது. கை விரல்களின் நுனிகள் ஆற்றலை வெளியேற்றும் பகுதியாக இருக்கின்றன. வலது கை நேர்மறை ஆற்றலை வழங்குகிறது. வலது கையால் ஒருவரின் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்கும்பொழுது, நுண்ணிய ஆற்றல் அதிர்வு ஏற்பட்டு ஆசி பெறுபவரின் நரம்பு மண்டலத்தை சீரமைக்கிறது.
மனிதர்களின் இடது பக்க மூளை, உடலின் வலது பக்கத்தில் உள்ள பாகங்களை கட்டுப்படுத்துகிறது. வலது கையால் ஆசீர்வதிக்கும் பொழுது விழிப்புணர்வு, கவனம் ஆகியவை ஏற்படுகிறது. நேர்மறை எண்ணத்துடன் ஆசி வழங்கவேண்டும் என்பதால் வலது கை பயன் படுத்தப்படுகிறது.
சுப காரியங்களில் வலது கையின் முக்கியத்துவம்:
ஒருவருக்கு ஆசீர்வாதம் செய்வது மட்டுமின்றி, தானம் வழங்குதல், பிரசாதம் வழங்குதல், ஒருவருக்கு மரியாதை செய்தல், உணவிடுதல், உணவை சாப்பிடுதல் என அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் வலது கை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மங்களகரமான எந்த ஒரு செயலும் வலது கையினால் செய்யப்பட வேண்டும். எந்த ஒரு பொருளையும் பிறருக்கு கொடுக்கும் பொழுது வலது கையினால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இடது கையை பயன்படுத்தி எதையும் கொடுக்ககூடாது.
மனித உடலின் இரு பக்கங்களும் வேறு வேறு சக்தியை குறிக்கிறது. உடலின் வலது பக்கம் சக்தி வாய்ந்ததாகவும் நேர்மறையாற்றலின் மையமாகவும் இருக்கும். இடது பக்கம் அமைதி மற்றும் அறிவின் இருப்பிடமாகவும் இருக்கிறது. ஒரு சிலருக்கு இடது கை பழக்கம் இருந்தால், அவர்களுக்கு இவை அனைத்தும் இடது கை செயல்பாட்டில் பொருந்தும்.