நம்முடைய தலையெழுத்தை மாற்ற முடியுமா?

fate
Fate
Published on

முடியும். எவ்வாறு என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வினைப்பதிவே ஓர் தேகம் கண்டாய் - பட்டினத்தார்

வினைப்பதிவுகளின் காரணமாகவே, ஒருவர் பிறவி எடுக்கிறார் என்கிறார் பட்டினத்தார். எனவே, வினைப்பதிவு என்பதே தலையெழுத்தாக அமைகிறது.

நமக்கு இரு வகையான வினைப்பதிவுகள் உள்ளன. அவற்றைத் தமிழில் பழவினை, புகு வினை என்று கூறுவர். அல்லது அவற்றை முன்வினை, பின்வினை என்றும் கூறலாம்.

  • பழ வினை - பிறந்தபோதே கொண்டு வருவது. தாய், தந்தையர் மற்றும் முன்னோர்களின் வினைப் பதிவுகள்

  • புகு வினை - பிறந்த பின்பு, 3 வயது முதல், நாம் சேர்க்கும் வினைப் பதிவுகள்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் - திருப்பாவை

பொருள்: அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்

இந்த வினைப் பதிவுகள் நல்லதாகவும், கெட்டதாகவும் இருக்கலாம்.

வினைப் பதிவுகளை வடமொழியில் பின்வருமாறு கூறுவர்.

  • சஞ்சித கர்மம் - பிறக்கும் போதே, கருத்தொடராக கொண்டு வருவது. முன்னோர்கள், தாய் தந்தையரின் வினைப் பதிவுகள்

  • பிராரப்த கர்மம் - பிறந்தது முதல், இன்று வரை நாம் செய்துள்ள வினைப் பதிவுகள்

  • ஆகாம்ய கர்மம் - இதுவரை நாம் செய்த வினைப் பதிவுகளால், ஆ (ஆன்மா) விற்கு காம்யம் (இச்சை) ஊட்டி, மேலும் செய்யப் போகின்ற வினைப் பதிவுகள்

இந்த வினைப்பதிவுகளில் தீயப் பதிவுகளைப் பாவப்பதிவுகள் அல்லது பழிச்செயல் பதிவுகள் என்றழைப்பர். நல்வினைப் பதிவுகளை புண்ணிய பதிவுகள் அல்லது நற்செயல் பதிவுகள் என்றழைப்பர்.

இதையும் படியுங்கள்:
முன்னோர்களின் சாபம் தீர்த்து சிவகதி தரும் திருக்கோயில்!
fate

ஒருவரது வினைக்கடலினை கடக்க இரண்டு தோணிகள் உண்டு என்கிறார் திருமூலர்

"திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்க இருவழி உண்டு... கிளைக்கும் தனக்கும் அக்கேடில் முதல்வன் விளைக்கும் தவம் அறம் மேற்றுணை யாமே "- திருமந்திரம்

அறம் மற்றும் தவத்தின் துணையினால், நமது வினைக் கடலினை கடக்க முடியுமெனக் கூறுகிறார். எனவே, தவம் மற்றும் அறத்தின் துணையால், நம்மால் தலையெழுத்தை மாற்றிக் கொள்ள முடியும்.

தவம் என்றால் அகத்தே உள்ளொடுங்கி, இறைவனே நானாக வந்துள்ளேன் என்று இறையுணர்வு பெறுவது. 

  • அறம் = ஒழுக்கம் + கடமை + ஈகை

  • ஒழுக்கம் = தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ உடல் உணர்ச்சிகளுக்கோ, துன்பம் தராமலிருப்பது

  • கடமை = மனிதனுக்கு ஐவகைக் கடமைகள் உள்ளன. தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம். இந்தக் கடமைகள் தவறாமலிருப்பது. ஒன்றினால் ஒன்று கெடாமல் காப்பது. 

  • ஈகை = துன்பப்படும் உயிர்களுக்கு உதவுவது

எனவே, தவம் மற்றும் அறத்தின் துணையால் நம்மால் தலையெழுத்தை மாற்ற முடியும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டிற்கு தினமும் காகம் வருதா? காரணத்தை தெரிஞ்சுக்கோங்க! 
fate

அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு  - வேதாத்திரி மகரிஷி

இறையுணர்வு பெற்றால், அன்பும் கருணையும் நிறைந்தவராக மாறுவோம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. 

ஆயுளை நீட்டித்த வேதாத்திரி மகரிஷி;

சிறிய வயதில், வேதாத்திரி மகரிஷியிடம் அவரது ஜாதகத்தினை ஒரு ஜோசியர் பார்த்து, நீங்கள் 50 வருடங்கள் மட்டுமே உலகில் வாழ்வீர்கள் எனக் கூறினார் . அதற்கு வேதாத்திரி மகரிஷி, நான் இவ்வுலகில் ஆற்ற வேண்டிய கடமைகள் அதிகமாக உள்ளன. நான் நீண்ட காலம் வாழ்வேன் என பதிலளித்தார். தனது தொடர்ந்த அறம் மற்றும் தவத்தின் காரணமாக, அவர் 95 வயது வரை வாழ்ந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com