திருமேனிநாதர் கோயில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோயிலாகும். இந்தக் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. முற்காலத்தில் திருச்சுழி பகுதி ‘திருச்சுழியல்’ என்று அழைக்கப்பட்டது. அதற்குக் காரணம் இங்குள்ள ஆற்றில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது சிவபெருமான் மக்களைக் காப்பதற்காக பூமிக்குள் துளையிட்டு அந்த வெள்ளத்தை சுழித்து பூமிக்குள் செலுத்தினார்.
எனவே, இக்கோயிலை ‘பூமிநாதர் கோயில்’ என்றும் அழைக்கின்றனர். எல்லா இடங்களில் செய்த பாவங்களும் இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் நீங்கும். ஆனால், இந்த ஊரில் செய்த பாவம் இங்கின்றி வேறு எங்கும் நீங்காது. இறந்தவர்களுக்கு அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம் இக்கோயிலில் இருக்கிறது. அப்படி வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களுக்காக அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றினால், இறந்தவர்களின் பாவங்கள் நீங்கி 21 பிறவிகள் கடந்து சிவ கதி அடைவார்கள் என்பது நம்பிக்கை.
இக்கோயில் 1800 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இங்குள்ள சிவபெருமானை திருமேனிநாதர் என்றும் அம்பிகை பார்வதியை துணைமாலையம்மை அம்மன் என்றும் அழைக்கிறார்கள். துணைமாலையம்மன் மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனைப் போலவே நடன அமைப்பில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி தரும் இக்கோயிலில் திருமணம் செய்துக்கொள்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.
இக்கோயில் விருதுநகர் - மானாமதுரை சாலையில் அமைந்துள்ளது. இக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் பங்குனியில் நடைபெறும் திருக்கல்யாணம் மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய பண்டிகைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாக்காலத்தில் வெவ்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வது சிறப்பு. மேலும், ரமண மகரிஷி பிறந்த ஊர் திருச்சுழி என்பது இன்னும் இக்கோயிலுக்குச் சிறப்பைக் கூட்டுகிறது.
இக்கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு ஒரு வில்வம் வைத்து அர்ச்சனை செய்வது அனைத்து சிவன் கோயிலிலும் உள்ள சிவபெருமானுக்கு ஆயிரம் வில்வம் வைத்து வழிபட்ட பலனைத் தரும். நிலம் சம்பந்தமாக இருக்கும் பிரச்னைகளுக்கு பூமிநாதர் கோயிலுக்கு வந்து வழிபட்டால் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.