கங்கை கரைக்கே சென்று கங்கா ஸ்நானம் செய்யலாமா?

Ganga Snanam
Ganga Snanam
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

தீபாவளியன்று கங்கா ஜலம் சகல தீர்த்தங்களிலும், (நம் வீட்டுக் குழாய்களில் வரும் கார்ப்பரேஷன் தண்ணீர் உட்பட) வருவதாக ஐதீகம். அதனால் நம் வீட்டில் குளித்தாலே அது கங்கா ஸ்நானம்தான். ஆனால், தீபாவளிக்கு காசிக்குச் சென்று கங்கையில் புனித நீராடும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டே இருந்து வருகிறது. காசிக்கு வெறும் பித்ரு காரியங்கள் செய்ய மட்டுமல்லாமல், கங்கா ஸ்நானம் செய்யவும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ஆர்வமுடன் தீபாவளிக்கு யாத்திரையாகச் செல்கிறார்கள்.

அது மட்டுமா? தீபாவளியன்று மட்டுமே தரிசனத்திற்கு வைக்கப்படும் ஸ்ரீ அன்னபூரணி தேவியின் தங்க விக்கிரகத்தையும், லட்டுத் தேர் ஊர்வலத்தையும் தரிசனம் செய்ய ஆர்வம் பூண்டு காசிக்கு செல்கிறார்கள். அரசாங்கப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டு தீபாவளி அன்று மட்டுமே வெளியே எடுக்கப்பட்டு லட்டுக்களை வைத்து செய்யப்படும் தேரில் ஸ்ரீ அன்னபூரணி மாதாவின் தங்க விக்கிரகம் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பிறகு அந்த லட்டுக்கள் பிரசாதமாக பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இந்த கண்கொள்ளா காட்சியைக் காண மட்டுமே உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தீபாவளியன்று காசிக்கு வருகிறார்கள்.

அந்தக் காலத்தில் பெரியவர்கள் குடும்பத்தில் தங்கள் கடமைகளை முடித்தவுடன் காசி யாத்திரை புறப்பட்டுச் சென்று தங்கள் இறுதி காலம் வரை அங்கேயே தங்கி விடுவதும் உண்டு. புனித க்ஷேத்திரமான காசியில் வந்து தங்கள் சரீரத்தை விடும் ஜீவன்களுக்கு நற்கதியளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அங்கே சிவபெருமான் அல்லும் பகலும் நடமாடிக் கொண்டேயிருக்கிறாராம். உயிர் பிரிந்து கொண்டிருக்கும் உடலை தமது மடியில் இருத்திக் கொண்டு முந்தானையால் விசிறுகிறாளாம் பார்வதி தேவி.  சிவபெருமானோ,  ஜீவர்கள் நற்கதியடைய அவர்களுடைய காதில் தாரக மந்திரமான ராம நாமத்தை ஓதுகிறாராம்.

பிறப்பையும் இறப்பையும் தந்த இறைவனே நேரில் வந்து ஜீவனுக்கு மீண்டும் பிறப்பற்ற மோட்சப்பதவி அருளும் வைபவம் இந்த வையகத்தில் வேறு எங்குமே காண முடியாது. ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் கையைக் கூப்பிக் கொண்டு கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்ப உட்கார்ந்து கொண்டிருப்பாராம் ஸ்ரீ ஆஞ்சனேய மூர்த்தி. காசியில் ஸ்ரீ ஆஞ்சனேயர் கோயில் கொண்டுள்ள கங்கை தீர்த்தக் கரைக்கு 'ஹனுமான் காட்' என்று பெயர். காசியில் விஸ்வநாதர், ஆதி காலபைரவர், பிந்து மாதவர், தொன்மையான வாராஹி அம்மன் கோயில் போன்றவற்றையும் தரிசிக்க வேண்டும்.

காசி வரை போய்விட்டு கயா போகாமல் இருக்க முடியுமா? தீபாவளிக்கு யாத்திரையாக காசிக்குச் செல்பவர்கள் நிச்சயம்  கயாவையும் சேர்த்தே தரிசித்து விட்டு வருவார்கள். பீகார் மாநிலத்திலுள்ள கயா புண்ய ஸ்தலம் லட்சக்கணக்கான இந்துக்களால் மிகப் புனிதமாகக் கருதப்பட்டு யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மகாலட்சுமி தாயாருக்கு தீபாவளி சீர் கொடுக்கும் ஆலயம் எங்குள்ளது தெரியுமா?
Ganga Snanam

காசியைப் போல கயா யாத்திரையிலும் இரண்டு வகை உண்டு. புனித யாத்திரையாக மட்டுமே சென்று வருபவர்களும் உண்டு. பித்ரு காரியங்களுக்காக செல்பவர்களும் உண்டு. கயாவில் மற்றொரு பிரசித்தி பெற்ற விஷயம் அக்ஷய வடம் என்னும் ஆல விருட்சமாகும். இந்த விருட்சம் பிரயாகையில் ஆரம்பித்து, மத்தியப்பகுதி காசியில் கங்கை நதிக்கடியே வந்து, நுனிப் பகுதி மட்டுமே கயாவில் தெரிகிறது. எண்ணற்ற விழுதுகளுடன் யுக யுகமாக இருக்கும் புராதனமான அக்ஷய வடத்தைப் பார்க்கும்போதே நம் மனம், மெய் எல்லாம் சிலிர்க்கிறது. இந்த இடத்தின் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் நம்மைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், நமக்குத் தெரிந்தவர்கள், நம் வீட்டில் உயிர் நீத்த வளர்ப்புப் பிராணிகள் உட்பட எல்லோருக்கும் பிண்டம் போட்டு அவர்களை கரைசேர்க்க முடியும் என்பதுதான்.

இப்போது காசி, கயா யாத்திரை மேற்கொள்பவர்கள் கூடுதலாக அயோத்திக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ராமஜன்ம பூமியில் குழந்தை 'ராம் லல்லா'வை தரிசிக்கத்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com