
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் வீரபாண்டி என்ற ஊரில் அமைந்துள்ள கோவில் தான் கௌமாரியம்மன் கோவிலாகும். இக்கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கௌமாரியம்மன் தோன்றிய வரலாறு பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஒருமுறை தேவர்களை இம்சித்து வந்த காண்டாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவப்பெருமானின் ஆணையின் படி வைகை நதிக்கரையில் மண்ணால் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அம்பாள் தவமிருந்து வந்தாள். தன்னை அழிப்பதற்காக அம்பாள் வந்திருக்கிறாள் என்பதை தெரிந்துக்கொண்ட அரக்கன் பார்வதிதேவியை அழிப்பதற்காக அந்த இடத்திற்கு வருகிறான். ஆனால், அங்கே சக்தி தேவியை பார்த்த அரக்கன் அவளின் அழகிலே மயங்கிவிடுகிறான். எனவே, அவளை கவர்ந்து செல்ல முடிவெடுக்கிறான்.
இதை தெரிந்துக் கொண்ட அம்பாள் அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அசுரன் மீது வீசி எறிய, அது அசுரனை இரண்டாக கிழித்து வதம் செய்கிறது. இதைப்பாரத்து மகிழ்ந்த தேவர்கள் தன்னுடைய கவுரவத்தை காத்த கௌமாரியம்மனை போற்றி வணங்குகிறார்கள். அம்பாள் அந்த இடத்திலேயே குடிக்கொண்டு விடுகிறாள். அந்த கோவில் தான் வீரபாண்டிய கௌமாரியம்மன் கோவிலாகும். அம்பாள் வழிப்பட்ட ஈசனை ‘திருகண்ணீசுவரர்’ என்று அழைக்கிறார்கள்.
இத்தலம் கண்ணொளி தரக்கூடிய பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. மதுரையை ஆண்ட வீரபாண்டியன் என்ற மன்னன் தன்னுடைய கர்மாவால் தனது இருகண்களின் பார்வையையும் இழந்துவிடுகிறார். அப்போது இந்த தலத்திற்கு வந்து கௌமாரியம்மனை வழிப்பட்டு ஒரு கண்ணின் பார்வையையும், திருகண்ணீசுவரரை வழிப்பட்டு இன்னொரு கண்ணின் பார்வையையும் பெற்றார். இதனால் கௌமாரியம்மனுக்கும், கண்ணீசுவரருக்கும் கோவிலை கட்டி வழிப்பட்டு வந்தார். அதுதான் இன்று புகழ்பெற்று விளங்கும் வீரபாண்டிய கௌமாரியம்மன் திருக்கோவிலாகும்.
இக்கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. அச்சமயம் கோவிலில் 24 மணி நேரமும் வழிப்பாடு நடத்தப்படுகிறது. இந்த அம்மனுக்கு நேர்த்திக்கடனாக அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்றவை செய்யப்படுகின்றன. சித்திரை திருவிழாவின் போது பக்தர்கள் முல்லை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அம்மன் கோவிலில் இருக்கும் முக்கொம்புவிற்கு ஊற்றிவிட்டு அம்மனை வழிப்படுவதை வழக்கமாக கடைப்பிடிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று தரிசித்து விட்டு வருவது நன்மையைத் தரும்.