
எறும்புகள் வழிக்காட்டி சிவபெருமானின் உத்தரவுப்படி வடக்கிலிருக்கும் காசிக்கு இணையாக பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது தான் தென்காசி காசி விஸ்வநாதன் கோவில் ஆகும்.
‘காசியில் இறந்தால் மோக்ஷம் ஏற்படும்’ என்று சொல்வதுண்டு. ஆனால், பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தி கிடைக்கும் ஒரே இடம் தென்காசியாகும்.
பராக்கிரம பாண்டியன் ஒரு தீவிரமான சிவபக்தன். அவர் தினந்தோறும் காசிக்கு சென்று சிவப்பெருமானை வழிப்படுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருநாள் அவர் கனவில் வந்த சிவபெருமான், ‘தினந்தோறும் வடக்கிலுள்ள காசிக்கு நீ வருவதை விட நீ இருக்கும் இடத்திலேயே தென்காசி கோவிலை எழுப்பு’ என்று கூறுகிறார்.
‘எறும்புகள் சாரை சாரையாக செல்லும், அதை பின்தொடர்ந்து செல். அந்த எறும்புகளின் சாரை எங்கே முடிவடைகிறதோ அங்கே ஒரு கோவிலை எழுப்பு’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
அடுத்தநாள் மன்னன் கோட்டையில் எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை கவனிக்கிறார். அவரும் அந்த எறும்புகளை தொடர்ந்து செல்கிறார். அந்த எறும்புகள் சிற்றாங்கரையில் சென்பகவனத்திற்கு வந்து சேருகின்றன. அந்த இடத்தில் இருந்த புற்றில் சுயம்பு லிங்கமும், நந்தியும் இருகிறது. இதைக் கண்ட பராக்கிரம பாண்டியன் அந்த இடத்திலேயே சிவப்பெருமானுக்கு கோவிலை எழுப்புகிறார். அந்த கோவில் தான் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஆகும்.
இக்கோவிலில் சிவப்பெருமானை ‘காசி விஸ்வநாதர்’ என்றும் பார்வதிதேவியை ‘உலகம்மன்’ என்றும் பக்தர்கள் வணங்குகின்றனர். காசிக்கு சென்று சிவனை வழிப்படும் பலனை இக்கோவிலுக்கு சென்று வழிப்படுவதன் மூலமாக பெறலாம் என்று சொல்லப்படுகிறது. காசி விஸ்வநாதரை தரிசித்தால் மனநிம்மதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இக்கோவிலில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்துவது பக்தர்களின் வழக்கம். நாரத முனிவர், வள்ளி, நந்தி, அகத்தியர், இந்திரன் இக்கோவிலுக்கு வந்து காசி விஸ்வநாதரை தரிசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்து விட்டு வருவது நன்மையைத் தரும்.