
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். பலரும் வாழ்க்கையில் சாணக்கியரின் நெறிமுறைகளை பின்பற்றுகின்றனர். ஒருவரின் வீட்டில் செல்வம் செழிக்க என்ன செய்ய வேண்டும் என சாணக்கியர் அறிவுறுத்தியிருக்கிறார்.
மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசியமாகிவிட்டது. குடிக்கும் தண்ணீர் முதல் கல்வி வரை அனைத்திலும் பணம் தேவையானதாக மாறிவிட்டது. இதனால் மக்கள் பணத்தை தேடி ஓட ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்லலாம். பணத்தை சம்பாதித்துவிட்டால் நன்றாக வாழ்ந்துவிடலாம் என எண்ணுகிறார்கள். ஆனால் என்ன தான் உழைத்தாலும் வீட்டில் செல்வம் நிலைப்பதே இல்லை என கவலைபடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சாணக்கியரின் வார்த்தைகளை பின்பற்றுபவர்கள், அவரின் இந்த அறிவுரைகளை கேட்டு கொண்டால் வீட்டிலும் செல்வம் செழிக்கும் என கூறுகிறார்.
முதலில் தேவை அறிந்து செயல்படுவது அவசியமாகும். வாழ்வில் இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும். தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் கொடுத்துவிட்டால், நமது வாழ்க்கையே திசைமாறிப்போய்விடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சாணக்கியரின் கருத்துப்படி பணத்தின் மதிப்பு தெரிந்த ஒருவனுக்கு மட்டுமே அதிக பணத்தை உருவாக்க முடியும் என்கின்றார். பணத்தை சம்பாதிப்பதில் மட்டுமல்லாது அதனை செலவிடும் விதத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
பணத்தை சரியான வழியில் சம்பாதித்தால், அவர்கள் வாழ்வில் பணம் பெருகிக்கொண்டே போகும். நேர்மையற்ற வழிகளில் வரும் பணம் ஆரம்பத்தில் அதிக மகிழ்ச்சியை கொடுத்தாலும் பிற்காலத்தில் உங்களின் மனநிம்மதியை வேறோடு அழித்துவிடும்.
பணம் உங்களை தேடி வாழ்க்கை முழுவதும் வந்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றால், சேமிப்புக்கு மட்டுமன்றி சரியான முதலீடுகள் மீது கவனம் செலுத்த வேண்டும். பணத்தை எப்படி செலவு செய்வது, எதில் செலவு செய்ய வேண்டும் என்ற ஞானம் அவசியமாக இருக்க வேண்டும். நாம் தானமாக கொடுக்கும் பணம் நமது கஷ்டமான நேரங்களில் பல மடங்காக நிச்சயம் திரும்பி வரும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர்களால் வாழ்க்கை முழுவதும் பணத்தையும் செல்வத்தையும் ஈர்க்க முடியும் எனவும் கூறுகிறார்.
(குறிப்பு: 'சாணக்ய நீதிகள்' என்ற புத்தகத்திலிருந்து தொகுப்பு)