ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலும், சத்திரபதி சிவாஜியும்!

Chennai kalikambal temple
Chennai kalikambal templeImage Credits: Maalaimalar
Published on

சென்னையில் மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீ காளிகாம்பாள் கோயில் ஜார்ஜ் டவுனில் உள்ள தம்பு செட்டி தெருவில், தற்போதைய பாரிஸ் கார்னரில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி ஸ்ரீகாமதேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை ஸ்ரீகாளிகாம்பாளாகவும் அருள்பாலிக்கிறார்கள். இக்கோயிலில் பிள்ளையார் மற்றும் பிரத்தியங்கிரா தேவி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு பல பிரபலங்கள் வந்து வழிபட்டுச் சென்றிருந்தாலும், முக்கியமான சில வரலாற்றுப் பிரபலங்களுக்கும் அன்னை காளிகாம்பாள் அருள்பாலித்து இருக்கிறாள். அது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சத்திரபதி சிவாஜியின் பெயரைக் கேட்டாலே பிரிட்டிஷ்காரர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்தது. சத்திரபதி சிவாஜி 1677ல் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தார். அவருடைய படையெடுப்பை பற்றிக் கேள்விப்பட்ட பிரிட்டிஷ்காரர்கள் பயத்தில் உறைந்து போய் இருந்தார்கள்.1677ல் வீர சிவாஜியின் தூதர் ஒருவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வருகிறார்.

சத்திரபதி சிவாஜிக்கு சில விலையுயர்ந்த கற்களும், விஷமுறிவு மருந்துகளும் தேவைப்படுவதாகக் கூறுகிறார். அதற்கு உண்டான பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனால், ஆங்கிலேயர்கள், ‘எங்களுக்கு பணமெல்லாம் வேண்டாம். இதை இலவசமாகவே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். சென்னையை தாக்காமல் இருக்க நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறோம் என்றும் கூறுகிறார்கள்.

இரண்டாவது முறையாக மறுபடியும் தூதர் வருகிறார். மீண்டும் சில பொருட்களைக் கேட்கிறார். அதற்குப் பணம் வாங்கிக்கொள்ளக் கூறியும். ஆங்கிலேயர்கள் மறுத்துவிட்டு இலவசமாக வழங்குகிறார்கள். மூன்றாவது முறை அந்தத் தூதர் வந்து இந்த முறை பொருட்கள் தேவையில்லை. ஆனால், சில இஞ்சினீயர்கள் வேண்டும் என்று கேட்கிறார். ஆனால், அதைக் கொடுக்க ஆங்கிலேயர்கள் மறுத்து விடுகிறார்கள். இதனால் மாவீரர் சிவாஜி கோபம் கொண்டு சென்னையை தாக்கக்கூடும் என்று எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், சத்திரபதி சிவாஜி சென்னையை தாக்கவேயில்லை. அரசியல் மாற்றங்கள் காரணமாக தன்னுடைய ராஜ்ஜியத்திற்கு திரும்பிப் போகிறார். அப்படிப் போவதற்கு முன்பு அக்டோபர் 3, 1677ல் சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசித்துவிட்டுச் செல்கிறார். இதற்கான குறிப்புகள் அக்கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் சாத்துவது ஏன் தெரியுமா?
Chennai kalikambal temple

மகாகவி சுப்ரமணிய பாரதியார் சுதேசமித்திரன் இதழில் வேலை செய்துக் கொண்டிருந்தபோது, பிராட்வேயில் தங்கியிருந்தார். அவர் அடிக்கடி காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்று அம்பாளை தரிசித்துவிட்டுதான் போவார். ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்று அவர் பாடல் வரிகளில் காளிகாம்பாளையே குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமில்லாமல், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில முக்கியமான முடிவெடுக்கும் முன்பும், புதிய படம் தொடங்குவதற்கு முன்பும் ஸ்ரீ காளிகாம்பாளை தரிசித்துவிட்டுத்தான் போவார். சத்திரபதி சிவாஜி, பாரதியார், சூப்பர் ஸ்டார் ரஜினி வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள் பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் சென்னையை தனது அருளால் அரவணைத்துக் கொண்டிருக்கிறாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com